"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், மார்ச் 09, 2017

மனித நியதி


இப்போது நான் படித்துக்கொண்டு இருக்கும் "பின் தொடரும் நிழலின் குரல்"  நாவலில் ஒரு வார்த்தையை படித்தேன்  " மானுட நியதி ".  இந்த வாரத்தை கடந்த ஒரு வாரமாக மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

எந்த ஒன்றை பற்றி நினைவுகள் எழுந்தாலும் அது இந்த வார்த்தையில் வந்து முடிவடைகிறது.

இந்த வார்த்தைக்கு அர்த்தங்களை தொகுத்துக்கொள்ள
என் வாழ்க்கை நிகழ்வுகளை , இதுவரை படித்தவற்றை , இதுவரை பார்த்த கேட்டவற்றை துழவிக்கொண்டே இருக்கிறேன். இன்னும் தொகுத்துக்கொள்ள முடியவில்லை.

 ஆனால் இந்த வார்த்தை நான் கடந்துவந்த சில மனிதர்களை மனிதர்களை மட்டும் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

ஒரு நாள் இரவு கவிதாவுக்கு ( மனைவிக்கு) கடும் வற்றுவலி. அந்த இரவில் அரசு மருத்துவமனை மட்டுமே திறந்திருந்தது. காலையும் வலி தொடர்ந்தது. திடீர் என்று படுக்கையிக்கு அருகில் வாந்தி எடுத்துவிட்டாள். நர்ஸ் வந்தால் தயவில்லாமல் திட்டுவார்கள் என்று தெரியும். மூளையிலிருந்து ஒரு கிழவி எழுந்து வந்தாள். வெளியே சென்று ஒரு இரும்பு முறத்தில் மண்ணும் தென்னை துடப்பமும் எடுத்துவந்து வாந்தியை முற்றாக வாரி வெளியில் கொட்டிவிட்டு தண்ணீரால் சுத்தமாக அலம்பிவிட்டு மறுபடியும் அதே முலையில் அமர்ந்துகொண்டாள். அருகே கருவுற்ற சிறுவயது பெண் படுத்திருந்தாள்.
அன்றிருந்த பதற்றத்தில் சிறிது நேரத்தில் அதை மறந்து போனேன்.

ஆனால் பலதருணங்களில் அந்த கிழவியை  நினைத்து பார்த்திருக்கிறேன். அந்த கிழவி என் முகத்தை முற்றாக பார்க்கவே இல்லை. எங்களிடம் எதையுமே எதிர்பார்க்கவில்லை. தன் கடமை போல அந்த வேலையை செய்து முடித்துவிட்டு தன் இயல்புக்கு சென்றுவிட்டாள்.

 அதே போல இன்னொரு மனிதர். அவர் என் தூரத்து பெரியப்பா பெங்களூருக்கு 80 பதுகளில் சென்றவர். படித்து முடித்து பெங்களூருவில் நண்பர்கள் அறையில் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்தேன். அவர் ஞாபகம் வந்து பார்க்கபோனேன். திருவிழாக்களில் திருமண நிகழ்வுகளில் மட்டும் பார்த்து சிரித்த உறவு. ஆனால் சந்ததோஷமாக வரவேற்றார். நான் வேலை தேடுகிறேன் என்று தெரிந்து மறுநாள் காலை என்னை வரச்சொன்னார். மறுநாள் காலை ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு தனக்கு தெரிந்த நண்பர்கள், அலுவலர்கள், தொழிற்ச்சாலை நண்பர்கள் சொந்தங்கள் என்று அத்தனை பேரிடமும் என்னை அறிமுகம் செய்து எனக்காக வேலை கேட்டார்.  ஒரு பெரிய வீட்டின் தாழ்வாரத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தோம். ஒரு பெண்மணி சித்தப்பா என்று வாஞ்சையாக அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். கடைசியில் ஒரு ஆள் நேர்த்தியான உடையில் வெளியில் வந்தார்.
பெரியப்பா அவரிடம் என்னை பற்றி சொல்ல துவங்கும் முன் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார். அவன் கண்டிப்பா பண்ணுவான் என்று உற்சாகமாக என் தோளை அனைத்து அழைத்துவந்தார்.
 அவர் அறிமுகம் செய்த மனிதர்களால் எனக்கு வேலைகிடைக்கவில்லை. ஆனால் எங்கள் கிராமத்திலிருந்து அவரை நம்பி எத்தனையோ பேர் பெங்களூருக்கு சென்றிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் நல்ல வளமையோடு இருக்கிறார்கள். இன்றும் கூட அவர் யாரைவது தன்னுடன் அழைத்துக்கொண்டு அவர்கள் வாழ்வுக்காக அலைந்துகொண்டு இருக்கலாம்.

இதை போன்ற  மனிதர்களை என் வாழ்நாள் முழுக்க கடந்து வந்துகொண்டே இருக்கிறேன்.

சாதி மதம், கொள்கைகள், தர்க்கம், பொருளியல்  அத்தனையும் தாண்டி இது போன்ற மனிதர்கள் இந்த மானுடத்துக்காக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

என் தர்க மனத்தைக்கொண்டு அவர்களின் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் அவர்களை இயக்குவது எதோ ஒரு "மானுட நியதி" என்று மட்டும் புரிகிறது.

அவர்களை நிறுத்தி உங்களுக்கு எந்தப்பயனும் இல்லாமல் ஏன் இதை செயிகிறீர்கள் என்று கேட்டால் ஒருவேளை அவர்கள் மெலிதாக சிரிக்கக்கூடும்  அல்லது தெரியவில்லை என்று சொல்லலாம்.

ஆனால்  வாழ்வில் நான் சோர்வுறும்போதும் மனிதம் மீது எனக்கு அவநம்பிக்கை எழும் போதும் இது போன்ற மனிதர்கள் தான் என் நினைவில் எழுகிறார்கள். எளிமையாக புன்னகை மட்டும் செய்துவிட்டு போகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக