"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், அக்டோபர் 01, 2013

அம்மாவும் அம்மாவீடும்

அரியூர்

வேலூர் அணைக்கட்டு சாலையில் உள்ள சிறிய ஊர் அரியூர். என் அம்மாவின் ஊர் . வேலூர் ஜெயிலிலிருந்து 5 km தூரம் இருக்கும். என் சிறிய வயதில் ஒரு மாத பெரிய விடுமுறைக்கு ஆயா , தாத்தா வீட்டுக்கு செல்வேன். அன்று நான் பார்த்த ஊருக்கும் இன்று பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். முக்கிய காரணம் இந்த ஊரின் அருகில் புதியதாக முளைத்திருக்கும் பொற்கோவில்.

ஊரின் கீழ் பகுதியில் முஸ்லிம் மக்களும் ஒரு மசூதியும் ஒரு கடை தெருவும் இருகிறது. அதற்கும்  மேற்பகுதியில் ஹர்ஜன மக்கள் வாழும் தெருக்கள் இருகிறது.  அதை தொடர்ந்து அனைத்து சமுக மக்களும் வாழும் பகுதியும் இருக்கும்.

மோட்டு பஜார் என்ற கடைத்தெரு உள்ளது. அது தான் இந்த ஊரின் முக்கிய பேருந்து நிற்கும் இடம். காலையும் மாலையும் வேலைக்கு செல்வோர் வருவோர் இங்கு கூடுவர்.

பொற்கோவில் அம்மா சாமீ வளரும்  போது இந்த ஊரின் சுற்றி இருந்த பகுதிகள்  அனைத்தும் விலைக்கு   வாங்கப்பட்டது. சில இடங்கள் ஆயிரங் கலில்,  சில இடங்கள் லட்சம் கோடிகளில். ஊரின் தோற்றம் முற்றிலும் மாறியது. பெரிய பெரிய வீடுகள் கடைகள் முளைத்தன. பொற்கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான மருத்துவமனை, பள்ளிகூடம் , விடுதிகள் என ஒரு பெரிய ஊராக மாறிவிட்டது.

இன்று பொற்கோவில் இருக்கும் இடம் முன்பு மலைக்கோடி என்ற சிறிய கிராமமாக இருந்தது. ஒரு சிறிய மலை மேலே முருகன் கோவில் இருக்கும் . என் தாத்தா அங்கு காவடி எடுத்து செல்வார். சுற்றி இருந்த கிராமங்களிலிருந்தும் காவடி எடுத்து வருவார்கள். இப்போது அந்த கோவில் இருப்பதாக தெரிய வில்லை.  அரியூரிளிருந்து நிறைய பேர் இங்கு சிறிய பணிகளுக்கு செல்கிறார்கள்.

இன்றைய நிலையில் அரியூர்  வேலூருக்கு அருகில் இருக்கும் ரியல் எஸ்டேட் தங்க சுரங்கம். Sq ft 2000 முதல் 3000 வரை போகிறது.

தாதா வீடும் தொழிலும் 

இப்போதைக்கு அந்த ஊரில் மிகவும் பழமையான வீடு அந்த வீடு. நுழைவாயிலின் இருபுறமும் பெரிய திண்ணைகள். அதை தொடர்ந்து சிறிய தாழ்வாரம். வலதுபுறம் ஒரு அறை, அது பூஜை அறையாக இருக்கிறது. அதை தொடர்ந்து இடப்புறம் ஒரு  தாழ்வாரம் நீளும். அதன் இறுதியில் ஒரு பெரிய அறை இருக்கும். வீட்டின் பின்புறம் இரண்டு அறைகள் கொண்ட ஓட்டு வீடு. இறுதியாக ஒரு கிணறு.

80 களின் இறுதியில் இந்த வீட்டில் ஒருமாதம் பள்ளி விடுமுறை நாட்களில் தங்கி இருக்கிறேன்.


என் தாத்தா தி.க. ராமன் , பாட்டி கமலா. தாத்தா சற்று பருமனான உருவம். கொஞ்சம் சாயிந்து , சாயிந்து நடப்பார். ஒட்ட நறுக்கிய தலை முடி, நெற்றி  நிறைய விபுதி , முட்டி வரை கதர் வெண் ஜூ ப்பா, வெள்ளை வேட்டி அணிந்து இருபார். காலையில் எழுந்து சூரியனை பார்த்து மந்திரம் சொல்லுவார். பின்பு பூஜை அறையில் நின்று சுப்ர பாதம் சொல்லுவார். உடல் நிலை சரி இல்லாமல் யாராவது வந்தால் மந்திரம் சொல்லி வேப்பிலை அடித்து திருநீர் கொடுப்பார் . எப்போதாவது சிரிப்பார். ஆயா ( பாட்டி ) மஞ்சள் பூசிய மங்களகரமான முகம் அந்த காலத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார்.

இவர்களுக்கு ஐந்து பெண்கள் மற்றும் கடைசியாக அவர்கள் எதிர் பார்த்தது போலவே எங்கள் மாமா.

இவர்களின் முக்கிய குடும்பத் தொழில் பீடி சுற்றுவது.  ராதா  கிஷ்ணா பீடிகள் என்று பெயர். அரியூர்  முதல் அணைக்கட்டு, ஒடுக்கத்தூர்,ஆலங்காயம் வரை வழியில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் சைக்கில் மற்றும் பேருந்தில் சென்று பீடி விநியோகம் தாத்தா செய்தார்.

பீடி ஒரு முக்கியமான குடுசைத் தொழில் , நிறைய கிராம பெண்கள்  இந்த தொழில் செய்கிறார்கள். பீடிக்கான முக்கிய மூலப் பொருட்கள் பீடி இலையும், புகை இலை  தூளும். இவை இரண்டும்  ஒரிசா மற்றும் அசாம் மாநிலத்திலிருந்து வேலூர் மார்கெட்டுக்கு வருகிறது. பீடியின் தரம் இந்த இலை, மற்றும் புகை இலையின் தரத்தை பொறுத்து அமையும். நல்ல இலையாக இருந்தால் ஒரு கிலோ இலை, 200 கிராம் புகை இலை தூளூக்கு 1000 பீடிகள் வரை வரும்.

இலையை ஒரு நாள் முழுவதும் தண்ணிரில் ஊறவைக்க வேண்டும். பின்பு சீசா என்ற  தகட்டை அளவாக வைத்து  இலைகளை கதிரிகோலால் வெட்ட வேண்டும். சீசா தகட்டின் அளவை பொறுத்தே பீடியின் அளவு இருக்கும் .வெட்டிய இலைக்குள் புகை இலை தூளை  உள்ளே வைத்து சுருட்ட  வேண்டும். பின்பு மெல்லிய நுர்கண்டால் கட்ட வேண்டும். இப்போது ஒருபுறம் அகலமாகவும் மறுபுறம் குறுகியும் பீடி இருக்கும். அகலமான திறந்த பகுதியில் மறுபடியும் புகை இலை  தூளை நிரப்பி மூட வேண்டும். பீடியின் இரண்டு பக்கம் மூடுவதற்கு சிறிய விரல் நீளமே உள்ள கத்தி பயன் படுத்துகிறார்கள். இந்த வேலைக்கு புண்ணி மூடுதல் என்று பெயர்.

24 பீடிகள் ஒரு கட்டாக கட்டி மறுபடியும் நாள் முழுவதும் வெயிலில் காயவைத்து பின்பு ஒவ்வொரு கட்டாக எடுத்து பீடியின் தரம் பார்க்கப்படும்.
அளவு குறைந்த பீடிகள், வளைந்த பீடிகள், சரியாக இறுக்கி சுற்றாத பீடிகள் களையப்படுகிறது. இந்த வேலைக்கு கழித்தல் என்று பெயர். பின்பு ஒரு சதுரமான காகிதத்தில் கட்டை வைத்து மடித்து ஓட்ட வேண்டும். பின்பு 14 கட்டுகள் சேர்த்து  லோகோ போட்ட பேப்பரில் ஒரு பண்டலாக சுற்றி ஒட்டப்படுகிறது.

பீடி சுற்றுதல் மற்றும் கழித்தல் ஆகிய வேலைகளை முக்கியமான ஆட்கள் செய்கிறார்கள்.புண்ணி மூடுதல் மற்றும் பண்டல் பொடுதலை சிறியவர்கள் செய்கிறார்கள். நிறைய முஸ்லீம் பெண்கள், கூலிக்கு பீடி சுற்றி கொடுத்தார்கள். தினமும் பீடியை சுற்றி கொடுத்து விட்டு ஒரு சிறிய நோட்டில் குறித்துவைத்துக்கொண்டு மாதா  மாதம் கூலியை பெற்றுக் கொண்டார்கள்.அவர்கள் பெரும்பாலும் தாத்தாவை " நைனா " ( அப்பா ) என்றே அழைத்தார்கள்.

தாத்தா காசை மிகவும் சிக்கனமாக செலவழித்தார். ஐந்து பெண்களுக்கும் ஒரு மகனுக்கும் திருமணம் செய்வித்தார். திருப்பதி பெருமாள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார். இறக்கும் வரை உண்டியல் கட்டி வருடா வருடம் திருப்பதி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்த வீட்டினுள் எப்போதும் பீடி இலையின் வாசனை உலவிக்கொண்டே இருக்கும். அந்த வீட்டில் யாரை நினைத்தாலும் அந்த வாசமும் சேர்ந்தே ஞாபகம் வரும். தாத்தாவை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அந்த வாசம் தான். 

மாமா ஒரு நிழல் 

நான் எப்போது விடுமுறைக்கு சென்றாலும் மாமாவுடன் தான் அதிகநேரம் சுற்றுவேன். 80களின் இறுதியில் அவருக்கு திருமணம் ஆகாமல் இருந்தது. தாத்தா சற்று தளர்ந்ததும் கடைகளுக்கு பீடி இவர்தான் எடுத்து செல்வார். பெரும்பாலும் அவர் எங்கு சென்றாலும் நானும் உடன் செல்வேன். வேலூர் சற்று பரிச்சயம் ஆனது அவரால் தான்.

அம்புலி மாமா புத்தகம் அதிகம் வாசிப்பார். அவருடன் சேர்ந்து  நானும் வாசிப்பதுண்டு. அந்த புத்தகத்தில் வரும் அந்த கால ராஜாக்கள் மற்றும் குடிமக்கள் பற்றிய கதைகள் அதில் வரும் ஓவியங்கள் மனதில் அப்படியே பதிந்துள்ளது. பின்னாளில் இந்த பதிவுகளின் தொடற்சியாக வரலாற்று நாவல்களை தேடித்தேடி படித்தேன். அம்புலி மாமா புத்தகம் ஒரு கட்டத்தில் பதிப்புகள் நிற்று விட்டன. இப்போது மறுபடியும் கிடைகிறது போலும்.

 நானும் மாமாவுடன் சேர்ந்து சிறு சிறு வேலைகள் செய்வதுண்டு. ஒரு சிறிய ரேடியோ வீட்டில் இருந்தது .செய்திகள், கர்நாடக இசை என்று மதிய வேலை முதல் மாலை வரை ஒலித்துக்கொண்டே இருக்கும். பெரும்பாலும்  பீடி சுற்றும் நபர் அருகில் ரேடியோ ஒலித்துக்கொண்டு இருப்பதை பார்த்திருக்கிறேன். மாமாவுக்கு பழைய  A.M.ராஜா மற்றும் P.B. ஸ்ரீநிவாஸ் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவருடன் சேர்ந்து எனக்கும் பிடித்துபோக "பாட்டு பாடவா பாட்டு  கேட்டகவா" பாடலில் துவங்கி எண்ணற்ற பாடல்கள் மனனம் செய்து பாடிக்கொண்டு இருந்தேன்.

பெரும்பாலும் எனது கிராமத்தில் விளம்பரம் செய்து கொண்டு வரும் ஆட்டோ பின்னால் நான் ஓடி இருக்கிறேன். ஆனால் முதல் முறையாக பீடி விளம்பரம் செய்ய  வில் நானும் மாமாவும் சென்றோம். "இனிக்க மனக்க புகைக்க சிறந்தது ராதா கிர்ஷ்ணா பீடிகள்" , வாங்கி புகைத்து மகிழுங்கள்  ராதா கிர்ஷ்ணா பீடிகள் என்று  ரேடியோவில் தொடர்ந்து  ஒலிக்க எல்லா கிராமங்களுக்கும் சென்றோம். ஆட்டோ பின்னால் ஓடிவந்த குழந்தைகளுக்கு நோடீஸ்சை தூக்கி எரிந்துகொண்டே வந்தேன்.

தொரப்பாடி டென்ட் தியேட்டரில் பழயப்படங்கள்  நிறைய பார்ப்போம். சந்தொரோதயம் M.G.R படம் பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது. ஒரு ரூபாய்  டிக்கெட், தரையில் நன்றாக காலை நீட்டி அம்மர்ந்து கொள்ளலாம். பீடி புகையின் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். இடைவேளையில் முறுக்கும் டீயும் கிடைக்கும். சிறிய  வயதில் என்  அம்மா இந்த தியேட்டரில் படம் பார்த்ததாக சொன்னார்கள். ஆனால் இப்போது தியேட்டர் இல்லை, வீடுகள் ஆகிவிட்டது.

மாமாவும் அந்த வீடும் ஒரு பெரிய மரத்தின் நிழல் போல, தேடி திரிந்து , தொலைந்து , கிடைத்து , மகிழ்ந்து , அழுது , களைத்து அமரலாம் என்று எங்களில் யாருக்கு தோன்றினாலும் நினைவுக்கு வருவது மாமாவும் அந்த வீடும் தான். ஐந்து அக்காமார்கள் , அவர்களின் பதினேழு பிள்ளைகளின் இன்ப துன்ப நிகழ்வுகளில் அவரின் உதவியும் பார்வையும் இருக்கும். என் பெரியம்மா ஒருவர் நோய் வாய் பட்டு இறக்கும் தருவாயில் மாமா தான் பார்த்துக்கொண்டார். இன்றும் என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்றால் மாமா வந்து ஒரு முறை பார்க்க வேண்டும் என்று நினைப்பார். வருடம் தோறும் தன் அக்காக்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் யார் வருகிறார்களோ அவர்களை அழைத்துக்கொண்டு திருப்பதி சென்று வருகிறார்.

எங்கள் மீதும் என் அப்பா மீதும் உள்ள நம்பிக்கையை விட அம்மாவுக்கு தம்பி மீது அதிக நம்பிக்கை உள்ளது.

அம்மாவும் அம்மாவீடும் 

அம்மா அப்பாவின் கல்யாணம் 1970 ல் நடந்திருக்கலாம் .அப்போது அப்பாவுக்கு 30 வயது அம்மாவுக்கு 14 வயது. கல்யாணத்துக்கு முதல் நாள் தான் என் அப்பா, அம்மாவை பார்த்தாராம். அம்மாவும் அப்படியே. பெண் பிடிக்காமல் அப்பா தென்ன தோப்பில் யாருக்கும் தெரியாமல் படுதுக்கொண்டராம். எல்லோரும் சென்று அவரை தேடி சமாதான படுத்தி அழைத்து வந்திருகிறார்கள். இதை அறிந்ததும் அப்பாவின் பழைய புகை படத்தை தேடி எடுத்து பார்த்தேன் . ஒல்லியான உருவம் இயல்பான கருப்பு , தலை முடி கர்லிங் வைத்து பெரிய கிர்தா  வைத்து அந்த கால ஹீரோக்களை பிரதி பலித்தார். அம்மா நல்ல நிறம் அழகும் கூட ஆனால் உலகம் அறியாதவர். வயதில் சிறிவர், ஆதலால்அப்பாவின் கிண்டல் பேச்சு அம்மாவை எளிதில் ஓடிக்கி விட்டது. இன்றும் அது தொடர்கிறது. மற்ற படி அவர்களின் வாழ்வியல் முறை எல்லோரும் போலவே அது வேறு தளம்.  

சமிபத்தில் அம்மாவும் நானும் அவர்கள் வீட்டுக்கு சென்றிருன்தோம். அன்று ஒரு நிகழ்வை கவனித்தேன். அம்மா முகம் எப்போதும் இல்லாமல் மலர்ந்தது. சின்ன சின்ன விசயத்திற்கு கூட வாய்விட்டு சிரித்தார். காலை நீட்டிக்கொண்டு வெகு நேரம் கதை பேசிக்கொண்டு இருந்தார்.  வழக்கத்திற்கு மாறாக அதிகம் சாப்பிட்டார். ஒரு குழந்தை போல நான் என் அம்மாவை அன்று உணர்ந்தேன்.
காலையில் தனக்கு பிடித்த சேமிய வாங்கி வரச்சொன்னார். அது ஒரு சுகந்திரமான மகிழ்வு நிலை. அது அனுபவத்தில் புரியும்.

பிறந்த வீடு சிலருக்கு ஒடுக்கப்படும் அனைத்து  இயல்புகளையும் வெளிப்படுத்தும்  தளமாகவும், வெகு தூரம் சுடும் தரையில் நடந்தபின் கிடைக்கும் ஒருகுடம் குளிர்ந்த நீர் போலவும் இருக்கிறது.

அம்மா இருக்கும் வரைதான் அம்மா வீடு என்றொரு வழக்கு ஆனால் என் அம்மாவுக்கு அது விதிவிலக்கு.






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக