"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், ஏப்ரல் 24, 2014

நண்பனின் மடி - தமிழ்செல்வனும் நானும்

சேலம் -நாமக்கல் சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு ரோட்டில் சேலம் polytechnic  உள்ளது. பசுமை செறிந்த இடம். அதை சுற்றி வெள்ளால கவுண்டர்கள் விவசாயம் செய்யும் விளைநிலங்கள். நான் அங்கு hostelலில் தங்கி படித்துக்கொண்டு இருந்தேன். Hostelலில் சேலத்தை சுற்றி உள்ள பகுதியான மேட்டூர், ஆத்தூர், தருமபுரி, கள்ளக்குருசி பகுதியிலிருந்து வந்து தங்கி படித்துக்கொண்டு இருந்தனர்.

உச்சி வெயில் தகிக்கும் நேரத்தில் அவன் என்னை இயல்பாக பார்த்து விட்டு கடந்து சென்றான். என்னை அறியாமல் ஒரு குறுபுன்னகையுடன் அவனை கடந்து சென்றேன். அந்த புன்னகை எனக்குள் ஏன் எழுந்தது என்று எனக்கு தெரிய வில்லை.

மறுமுறை காணும்போது அவனும் புன்னகை புரிந்து எந்த ஊர் என்றான். நான் ஊரை சொல்லி நீங்க என்றேன், நா கள்ளகுருச்சி என்றான்.

முதல் ஆண்டு முழுவதும் அவனை சரியாக கவனிக்கவில்லை. அவன் வேறு வகுப்பில் இருந்தான். இரண்டாம் ஆண்டு நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் இணைந்த போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

நீள்வட்ட முகம், ஒட்ட வைத்த கருவிழிகள், மாந்தளிர் நிறம், எளிமையாக தோள் மீது கை போட்டுக்கொள்ளும் அளவுக்கு உயரம், புன்னகைப்பது போல பல் வரிசை, எளிய சிநேகமான நடை அவன் என்னை ஒவொவொரு முறையும் புன்னகையோடு கடக்கும் போது இவை ஒவ்வொன்றாக மனதில் பதிந்துக்கொண்டே இருந்தது.

ஒரு விடுமுறை தினத்தில் அவன் துணிகளை துவைத்துக்கொண்டு இருந்தான். நான் துணிகளை ஊறவைத்துவிட்டு அவனிடம் பேசத்துவங்கினேன். நம்ம இன்ஸ்ட்ருமென்ட் department க்கு books இல்லன்னு சொல்றானுங்க எப்படி படிப்பது என்று துவங்கி, நீ வா போ என்று அந்த பேச்சு நீண்டது. துணிய ஊரவைக்கிரமொ இல்லையோ இந்த பொண்வண்டு சோப்ப முதல்ல ஊறவைக்கனும் என்று சிரித்தான். அவன் பேசிய கள்ளக்குருசி தமிழ் , வந்தானுவுவ போனானுவுவ என்று அழகி படத்தில் தங்கர் பச்சான் பேசுவது போல இருந்தது. அவன் பேச்சிலும் செயலிலும் வழக்கத்துக்கு மாறான ஒரு வேகம் இருந்தது. எல்லாம் முடிந்து சரி வா டீ குடிக்க போகலாம் என்று கிளம்பினோம்.

எந்த ஒரு சிறந்த நட்பும் மிக சாதாரணமாகவே துவங்குகிறது.ஒரு ஆன்மாவின் நிரப்ப பாடாத பகுதியை இன்னொரு ஆன்மா தன்னியல்பில் நிரப்பும் போது நட்பு நிகழ்கிறது. பெரும்பாலும் நம் மனம் அறியாமலேயே அது நடந்துவிடுகிறது .

மனம் எப்போதும்  வரவு செலவு கணக்கை பார்த்துக்கொண்டே இருக்கும். மனம் மட்டுமே  இணையும் நட்பில் ஒட்டுதல் எப்போதும் இருப்பதில்லை.

ஓரிரு வாரங்களில் அவன் தோள் மீது கை போட்டு நடக்க துவங்கினேன். எங்களுக்கு இடையான பேச்சு படிப்பு சினிமா பெண்கள் என்று நீண்டு நீண்டு என் உள்வட்டங்களை அவனும், அவன் உள்வட்டங்களை நானும் கடந்து சென்றோம். இறுதியில் அவன் குடும்பத்தை நானும், என் குடும்பத்தை அவனும் அறிந்துகொண்டோம்.

ஒருநாள் நான் என் அறையில் slapன் மீது ஏறி அங்கு இருந்த பேப்பர் புத்தகம் எல்லாம் கிளறிக்கொண்டு இருந்தேன். அவன் அறைனுள் வந்து என்ன தேடுற என்றான். இங்கு ஏற்கனவே தங்கி இருந்த சீனியர் ஏதாவது புத்தகம் விட்டுட்டு போயிருக்கானா என்று பாக்குறேன், அங்க ஒன்னும் கிடைக்காது நீ எறங்கி வா என்றான். கடைசியில் இரண்டு வண்ணத்திரை புத்தகம் கிடைத்தது அதிலும் நடுபக்கத்தை காணாம்.

எங்கள் இருவருக்கும் ஆங்கிலம் நாகில் tongue cleaner வைத்து சுரண்டினாலும் வாராது. நானும் அவனும் தமிழில் தான் polytechnic தேர்வுகளை எழுதினோம். எங்களுக்கு பாடம் எடுத்த அனைவரும் பெண்கள். எங்கள் HOD இளம் பெண், சொக்கி ததும்பும் விழிகள், அதில் கூரிய அலட்சிய பார்வை, தளர்ந்து சாய்ந்த நடை , ஆண்கள் எதிர்பார்க்கும் புதுமை பெண் , குட்டர் கவிதா என்று அனைவரும் கம்பீரமாக அழைத்து மகிழ்ந்தோம் . ஆனால் மற்றவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. அவர்களின் முக்கிய வேளை ஆங்கிலத்தில் இருக்கும் பாடத்தை தமிழில் எங்களுக்கு மொழியாக்கம் செய்து தருவது தான்.

நாங்கள் வகுப்பில் மற்றும் ஒரு நண்பருடன் இணைந்தோம். அவர் மூலமே சேலம் எங்களுக்கு பழக்கம் ஆனது. வருடம் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு தேர்வின் முன்மாதம் அனைத்து பாடங்களையும் வெறிகொண்டு மென்று புரை ஏறி, கண்கள் சிவந்து தேர்வெழுதி முதல் இரண்டு இடங்களை அவர்கள் இருவரும் எடுத்து விடுவார்கள். நான் ஐந்தாம் இடம் ஆறாம் இடம் என்று இருப்பேன்.

பெரும்பாலும் இரவில் சினிமாவுக்கு போவோம். விஜயை அனைவருக்கும் பிடிக்க துவங்கிய படம் பூவே உனக்காக. எங்கள் hostel லில் ஒரு குழு தொடர்ந்து 26 நாட்கள் அந்த படத்தின் இரவு காட்சியை பார்த்தது. நாங்கள் வெவ்வேறு தருணத்தில் ஆறு முறை பார்த்தோம். "உள்ளத்தை அள்ளித்தா" ரம்பா ரசிகர் மன்றம் 15 நாள் தொடர்ந்து அந்த படத்தை பார்த்தது. இளைய ராஜா அவர்கள் SPB, மனோ, சித்ரா, ஜானகி என்ற மூத்தவர்களை வைத்து எங்கள் காதல் உணர்வுகளோடும், கனவின் அதிர்வுகளோடும் விளையாடிக்கொண்டு இருந்தார். பின் இசையின் இளைய மகன் A.R.R   ஆட்சியில் அமர்ந்து எங்கள் காதலையும் கனவுகளையும் மீட்டெடுத்தார். இன்டெர் நெட், செல் போன் , CD இந்த மூன்று  ஆளுமைகளும் அப்போது எங்களுக்கு அறிமுகம் ஆகவில்லை. ஒரு கேசட் முழுவதும்  "எனை காணவில்லையே நேற்றோடு " பாடலை பதிவு செய்து பின்இரவு வரை கேட்டுக்கொண்டு இருந்தோம். DTS தியேட்டர்களில் அறிமுகம் ஆனது. சேலம்  KS தியேட்டரில் ரன்கிலா படம் பார்த்தோம். அதில் ஊர்மிள "தனுக தனுக " பாடலுக்கு ஆடியது எங்களுக்கு தலையில் இசைபித்தேறி ,இரண்டு நாள் உடலும் மனமும் ஆடிக்கொண்டு இருந்தது.


மாலையில் நானும் மற்ற நண்பரும் ஜிம்மில் கிடந்தோம். தமிழ்ச்செல்வன்  வாலிபால் வீரன். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து ரன்னிங் போவான். தினமும் மாலையில் பயிற்சி எடுப்பான். அவன் காற்றில் எழுந்து பந்தை அடிப்பது , வில் வளைந்து விசை எடுத்து அம்பில் செலுத்துவது போல  இருக்கும். அவன் உடலின் மேல் பரப்பு  இலகுவாக இருந்தாலும்  அவன் உடல் முழுவதும் விசை நிரம்பி இருந்தது.

ஒரு முறை அவன் வீட்டுக்கு நாங்கள் முவரும் சென்றிருந்தோம். திருவண்ணாமலை கள்ளக்குருசி சாலையில் ஒரு சிறிய ஊர் தேவபாண்டலம். மீனவர் தெருவில் நுழைந்து ஒரு சிறிய மச்சு வீட்டுக்கு போனோம். அம்மா எங்களை பார்த்ததும் என்னப்பா சிவா நல்லாஇருக்கியா என்று பேச ஆரம்பித்து விட்டார் . இவனுக்கு நான்கு தம்பிகள், இரண்டு அக்காதிருமணம் முடிந்திருந்தது. எல்லாமே தமிழில் துவங்கும் பெயர்கள். அப்பா அரசு விவசாய பண்ணையில் வேளை. முதல் தம்பி நல்ல உயரம் அழகு. கடைசி தம்பியை மடியில் தூக்கிவைத்துக்கொண்டு விளையாடினோம். இவர்கள் ஐவருமே படிப்பில் சுட்டிகள் விளையாட்டில் கில்லிகள். அவர்களை பார்த்த பின்பு தான் வறுமைக்கும் மகிழ்வுக்கும் தொடர்பே இல்லை என்று தெரிந்தது. அவனுங்க ஐந்து பேருமே ஒரு cricket டீம். ஐந்து பேருமே வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிடுகின்றனர். ஆச்சரியமாக இருந்தது.

ஹாஸ்டலில் இரவு உணவு முடித்துவிட்டு பின் புறம் கொட்டி வைத்திருந்த  மணலில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்போம். பெரும்பாலும் அது கனவுகளின் பரிமாற்றமாகவே இருக்கும். சிறிது நேரத்தில் அவன் அப்படியே காலை நீட்டி படுத்துக்கொள்வான். அவன் மடியில் நான் தலைவைத்து படுத்துக்கொள்வேன். அவன் பேசிக்கொண்டு இருப்பான் ஆனால் நான் வாழ்வை பற்றி கனவு கண்டுகொண்டு  இருப்பேன்.

வாழ்வை பற்றி கனவு காண்பதற்கு நண்பனின் மடியை தவிர மிகச்சிறந்த இடம் வேறெதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

இறுதி ஆண்டின் மத்தியில்  செமஸ்டர் விடுமுறை , ஒரு மாதம் கழித்து அவன் ஹாஸ்டலுக்கு திரும்பும் போது உடல் நலிந்திருந்தான். கண்ணக்கள் உள்ளடங்கி தோள்களில் எலும்பு தெரிய வித்தியாசமாக இருந்தான். உடம்பு சரி இல்லையா என்று கேட்டதற்கு வைற்று வலி சரியா போய்டும் என்றான்.

ஏதோ ஒரு வேதனையின் விதை அவனுள் வேர் விட்டிருந்தது. வேதனை மனிதனை அசைவில்லாதவனாக்கிவிடும். அவனது முகம் கனவுகள் இல்லாதவன் முகம் போல கலை இழந்து வாடியது.

அதிலிருந்து மீள அவனுக்கு மூன்று  மாதங்கள் ஆனது. பின் சகஜ நிலைக்கு வந்து மீண்டும் தமிழ் செல்வனானான்.

இறுதி தேர்வு முடித்துவிட்டு எந்த வித பிரிவுத்துயர்  இல்லாமல் பிரிந்தோம். ஏனெனில் எங்களுக்கு தெரியும் நாங்கள் மூவரும் அடிக்கடி சந்திப்போம் என்று.

நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். இன்னொரு நண்பர் பொறியியல் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தார், தமிழ் செல்வன் ஜல்லி மணல் என்று வியாபாரம் தொடக்கி இருந்தான். நாங்கள் மூவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். நாட்கள் சரிய சரிய சந்திப்பு குறைந்து கடிதங்கள் எழுதிக்கொண்டோம். அவன் கையெழுத்து ஓவொன்றும் சின்ன சின்ன குருவிகளை போல 'தா ' வின் மூக்கு நீண்டும் 'ழி ' கொம்பு ரெக்கை போல பறந்தும்  இருக்கும்.

ஒரு நாள் காலை எனக்கு ஒரு போன் வந்தது. அவன்  ஊரிலிருந்து ஒரு நபர் பேசினார். தமிழ் செல்வன் படுக்கையில் இருப்பதாகவும் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னான் நீங்கள் உடனே இங்கு வாருங்கள் என்று சொல்லி அவர் போனை வைத்தார். என்மனதில் யாரோ பாதரசத்தை ஊற்றுவது போல கனம் ஏறியது. என்னிடம் அப்போது பணம் இல்லை. இன்னொரு நண்பன் யோசிக்காமல் பணம் கொடுத்து ஒரு நண்பனையும் துணைக்கு அனுப்பினான்.

பஸ்சில் போகும் போது தொடர்பில்லா எண்ணங்கள் மனதை முறுக்கி பிழிந்தது. வலி தாளாமல் அழுகையின் நுனியை தொடும் நேரத்தில் என்னுடன்  வந்த  நண்பன் என்னை தேற்றி திசை திருப்பினான்.

அந்த ஊர் வந்ததும் இறங்கி தெருவில் நுழைந்ததுமே எனக்கு தெரிந்து விட்டது. சட்டென மனம் மறைந்து ஆன்மா மேலெழுந்து அலறியது. ஒரு பாயில் வெள்ளை துணியில் கழுத்துவரை மூடிய நிலையில் அவன் படுத்திருந்தான். அவன் மீது பூக்களும் ஈக்களும் மொய்த்துக்கொண்டு இருந்தது. தலைமுடி உதிர்ந்து, முகம் சதை இழந்து , அவனை உள்வாங்கி அடையாளப்படுத்திக்கொள்ளவே மனம் திணறியது.

ஓவென்று வாய்விட்டு அவன் கால்களை பிடித்துக்கொண்டு அழுதேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று எனக்கு  தெரியவில்லை. உணர்வு திரும்பி எழும் போது அவன் மடியில் நான் படுத்திருந்தேன்.

இப்பொழுது அந்த காட்சியை தள்ளி நின்று பார்க்கும்போது மனம்முடைந்து அழ நண்பனின் மடியை தவிர வேறெதுவும் சிறந்த இடம் இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

அவனருகில் இருந்த அம்மா என் தலையை தடவி சிவா அவன் சாமி கிட்ட போய்டான்பா என்று உதிரி உதிரியாக உடைந்த குரலில் சொல்லிக்கொண்டு இருந்தார். ஒரு நபர் வந்து என்னை அழைத்து சென்று ஒரு திண்ணையில் அமர செய்தார். அவனுக்கு கான்செர் காப்பாத்த முடியல , கடைசியில் படுக்கையில் அவன் உங்ககிட்ட ஏதோ பேச வேண்டும் என்று சொன்னான் என்றார். அவரை பார்க்காமலே விசும்பிக்கொண்டு இருந்தேன்.  காற்றில் கலக்காத என்னிடம் சொல்ல துடித்த அந்த வார்த்தைகள் என்னவேன்று இன்று வரை உகிக்க முடியவில்லை.

சேலம் நண்பனும் வந்து சேர்ந்தான். அவனும் அழுது துடித்தான். இருவரும் அவனை அடக்கம் செய்யும் வரை இருந்துவிட்டு திரும்பினோம்.

அந்த கனம்   மனதில் வடிந்து வடுவாக மாறுவதற்கு  வெகு நாட்கள் ஆனது.

கடவுள் வாழ்வதற்கு எனக்கு கொடுத்த சிறந்த பரிசு அல்லது சொத்து நண்பர்களின் நினைவுகள்  மட்டுமே அது எனக்கே எனக்கானது என் உடல் போல என் உயிர் போல.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக