"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், ஜூலை 21, 2014

சாதிகள் உள்ளதடி பாபா

சாதிகள் என்ற அமைப்பு  3000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவையாக இருக்கலாம் என்று படித்திருக்கிறேன். இன்றும் மக்களின் மனங்களின் வழியாக தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கிறது.

எங்கள் தோப்பிலும் வயல்களிலும் வேலை செய்யும் அனைவரும் கிழ் வகுப்பினர். வேலை முடித்து அவர்கள் வீட்டின் பின்புறம் சாப்பிட வருவார்கள். வரும்போது வாழை இலை  அல்லது பூசனை இலை கொண்டுவருவார்கள். சாப்பிட்டு முடித்ததும் அம்மா அவர்கள் கையில் தண்ணிர் ஊற்றுவார். தவறி யாராவது சொம்போடு தண்ணிர் குடித்துவிட்டாள் அந்த சொம்பும் தீண்ட தகாதவை ஆகிவிடும். என் பெற்றோர் யாரும் அவர்களை தொட்டு பேச மாட்டார்கள்.

முதல் தலைமுறையாக நாங்கள் பள்ளிக்கு சென்றதும் அவர்களோடு அருகில் அமர்ந்து பேசவும் தொட்டு விளையாடவும் இயல்பாக பழகிகொண்டோம். எனக்கொரு நண்பன் இருந்தான். அவன் வீடு பாலாற்றங்கரையில் இருந்தது. அதன் பின்புறம் ஒருகொய்யா மரம் இருந்தது. அதில் ஏறி விளையாடவும் பழங்களை பறித்து தின்னவும் அங்கு நான் செல்வேன். பின் புறம் ஒரு ஒரு கினறு இருந்தது. அதில் அடர்கரு நிறத்தில் தண்ணீர் கைகெட்டும் நிலையில் இருக்கும். கரு நிற மீன்கள் நீரினுள் தவழ்வதை நெடுநேரம் பார்த்துகொண்டு கிணற்றின் திட்டில் நாங்கள் இருவரும் அமர்ந்திருப்போம்.

கல்லூரி நாட்களில் சாதிய எண்ணம் தேவைபடவே இல்லை. ஒருவரை ஒருவர் என்ன சாதி என்பதை தெரிந்துகொள்ள விருப்படவே இல்லை. ஒரே தட்டில் உணவருந்தி , ஒருவர் மடியில் ஒருவர் படுத்துரங்கினோம்.

ஆனாலும் சாத்திய எண்ணம் என் மனதின் அடிஆழத்தில் பூஞ்சைகள் போல வாழ்ந்துக்கொண்டே இருக்கிறது. முக்கியமான நிகழ்வுகளில் அது சிறு காளான் போல மேல் எழுகிறது. வீடு கட்ட நிலம் வாங்கினாலும் அருகில் யார் வாங்கி இருக்கிறார்கள் என்று கேட்க தோன்றுகிறது. எவ்வளவோ புத்தகங்கள் படித்தாலும் வேறுபட்ட மனிதர்களிடம் பழகினாலும் அவ்வப்போது எழும் சாத்தியம் சார்ந்த எண்ணங்களை  தவிர்க்கவே முடியவில்லை.

ஆனால் என் மகன் முற்றிலுமாக வேறு சூழ்நிலையில் வளர்கிறான். அவனுக்கு சாதியம் பற்றி தெரியாமலே போகலாம். தெரிந்தாலும் அது அவனுக்கு முக்கியம் இல்லாமல் போகலாம்.

டாக்டர்கள் டாக்டர்களை திருமணம் செய்துகொள்கிறார்கள். எஞ்சினியர்கள் எஞ்சினியர்களை பெரும்பாலும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.  டாக்டர் சாதி  எஞ்சினியர் சாதி என்று கூட உருவாகலாம்.

அவன் காலத்தில் சாதி வேறு பெயரில் வேறு அர்தத்தோடு உருவாகலாம்.

மனித மனதில் " வேற்றுமை " எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
அதன் விளைவாக மனிதன் தன்னை மற்றவர்களை விட சற்று உயர்வாக காட்டிக்கொள்ளவும், வேறுபடுத்தி காட்டிக்கொள்ளவும் விழைகிறான்.

அதற்காகவே அவன் சாதி, மதம் , நிறம், அறிவு , புத்திசாலித்தனம், அதிகாரம் ,கல்வி, பணம்  ..இன்னும் ..,  அனைத்தையும்  பயன் படுத்திக்கொள்கிறான்.

அந்த எண்ணத்தை கொண்டே  பண்பாடு ,கலாச்சாரம், பழக்க வழக்கம் அனைத்தையும் அவன் கட்டமைக்க முயற்சி செய்கிறான்.

அந்த அடிப்படை எண்ணம் மனதில் இருக்கும் வரை சாதியை நம் சமுகத்திலிருந்து அழித்து விட முடியாது. அப்படியே சாதியை ஒழித்தாலும் அந்த எண்ணம் ஏழை , பணக்காரன், படிச்சவன் படிக்காதவன் என்று எதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்துகொண்டே இருக்கும்.

இன்று  "வேற்றுமையில் ஒற்றுமை"  காணவே  உலகம் முழுவதும் அமைதிக்கா போராடுபவர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த உலக மக்கள் அனைவரும் எல்லா விதத்திலும் சமம் என்ற நிலை வரும்போது, ஒட்டு மொத்த மக்கள் இயக்கமும் ஸ்தம்பிக்கும் என்பதே என் எண்ணம். அது மனித இன அழிவின் துவக்கமாக கூட இருக்கலாம்.

சமிபத்தில் நான் படித்த முக்கியமான நாவல் இந்திரா பார்த்தசாரதி  அவர்கள் எழுதிய " குருதிபுனல் " . இது தென் தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எழுதியது.

டெல்லியில் வளர்ந்த இரண்டு தமிழ் இளம் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக தன் பூர்விக கிராமத்துக்கு வருகிறார்கள். அங்கு பெரும் நில பண்ணையார்களுக்கும், அவர்கள் நிலத்தில் கூலி வேலை செய்யும் தலித்துகளுக்கும் இடையில் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளில் தலையிடுகிறார்கள். அந்த பிரச்சனை பெரியதாக மாறி போராட்டமாக உருவெடுக்கிறது. அந்த போராட்டத்தில் தலைமை ஏற்கும் அவர்களையும் அந்த போராட்டத்தையும் எப்படி ஆளும் வர்க்கம் நசிக்கி ஒடுக்குகிறது என்பது கதை.

அந்த இளைஞர்கள் மனதில் எழும் எண்ணவோட்டங்களையும் அந்த எண்ணங்களுக்கான காரணங்களையும் அது செயல் வடிவம் பெரும் முறையும் துள்ளியமா விளக்குவது நம்மை கதையோடு ஒன்றி விட செய்கிறது.

இதில் விவாதிக்கப்படும் தத்துவங்களும், கோட்பாடுகளும் இன்று போராட நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான பாடமாக  அமையும்.

இந்த புத்தகத்தை பற்றிய விரிவான விமர்சனம் கீழ் உள்ள சுட்டியில்

http://puththakam.blogspot.com/2009/10/49_21.html




புத்தகம் : குருதிப்புனல்
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1975
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஆண்டு : 2005
விலை : ரூ 200
பக்கங்கள் : 237

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக