"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், ஜனவரி 26, 2015

விசும்பல் -2

அவள் மண்வெட்டியை பிடித்த சில நிமிடத்தில்  கைகால்கள் நடுங்கத்துவங்கி விட்டன. முதுகு நனைய தளர்ந்து அமரும் தருவாயில் " ருக்கு இதா அந்த மரத்தாண்ட போய் ஒக்காரு போ " என்றாள் மணி. கணவன் இறந்தபின் நூறு நாள் வேலைக்கு வந்துவிட்டாள் ருக்கு. ஒரே மகன் வேலு பத்தாம் வகுப்பில் தவறிவிட்டு , வெல்டிங்க் கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டான்.

ருக்குவும், மணியும் பின் மத்தியத்தில் வீடு நோக்கி நடந்தனர். மணி மெதுவாக சரோஜாவீட்டுக்கு போகலாமா என்று கேட்டாள். வெம்மையில் ஊறி இறுகிய கரும்பாறை போல் இருந்தாள் ருக்கு.

சரோஜா வீட்டில் அவன் புருஷன் மட்டும் இருந்தான். காலில் விழும் நிலையில் அவனை கெஞ்சிக்கொண்டு இருந்தாள் மணி. " சனியனுங்க சடாவுல அடிச்சாலும் திரும்பிவந்து நிக்கும்க " , கடன் இல்லன்னு சொன்ன கேக்காதுங்க ". கொஞ்ச நேரத்தில் இரண்டு பாட்டிலோடு நமட்டு சிரிப்போடு வெளியில் வந்தாள் மணி.

ருக்குவின் தலை சும்மாடு துணியை வாங்கி அவசரமாக அதை சுற்றி அவள் கைகளில் கொடுத்தாள்.

இரவு ருக்குவின் உடலில் அங்கங்கு நீர் போல உறி எழுந்த வலி  கைகோர்த்து ஒற்றை வலியாக மாறியது.

வலி ஒலியாக மாறி அவள் உதடுகளில் முனங்கலாக வழிந்தது.

உடல் முழுவதும் நடுங்கத்துவங்கியது. மணியின் முகம் அவள் நினைவில் எழுந்தது. மூலையில் சுருட்டி வைத்திருந்த சும்மாட்டு துணியை பார்த்தாள்.

வேலு ஊருக்கு வந்தான். நடுத்தெருவை அடைந்ததும் சரோஜா வீட்டு முன்னால் உடைகள் கலைந்திருக்க,  புழுதியேறிய தலையுடன் அம்மா கத்திக்கொண்டு இருந்தாள். அவன் ஓட்டமும் நடையுமாக அவளை நெருகும்போது சரோஜாவின் கணவன் வீட்டுனுளிருந்து அவளை உதைக்க காளைதூக்கிக்கொண்டு ஓடி வந்தான். இவனை பார்த்ததும் " தே..........வ்வ்டியா" சனியன் தெனாமும் காலையில வந்திடுது கடன் கேக்க ,  என்றபடி உள்ளே சென்றான். இவனை  கண்டதும் அங்கு எதுவும் நடக்காதது போல  " எப்ப குட்டி வந்தே " என்று சிரித்த முகத்தோடு கேட்டாள் ருக்கு. அவள் கண்கள் கலங்கி கைகால்கள் நடுங்கிக்கொண்டு இருந்தன.

இரவு இருவருமே சாப்பிடவில்லை. இவள் ஒரு மூலையில் அவன் ஒரு மூலையில் படுத்துக்கொண்டு இருந்தனர்.

இவனுக்குள் கோவம் ஏறி ஏறி வந்தது. அம்மாவை அவன் திட்டிய போது நான் ஏன் சும்மாவே இருந்தேன் ? திரும்பத்திரும்ப இதே கேள்வி மனதில் எழுந்துக்கொண்டே இருந்தது. அம்மாவின் மஞ்சள் பூசிய முகமும் நெற்றியிலிட்ட பொட்டும் சிரித்த முகமும் அவன் கண்முன்னே எழும் தோறும் கோவம் உச்சிக்கு ஏறியது. இப்போதே அவனை வெட்டி சாய்க்க வேண்டும் போலிருந்தது. அம்மாவை பார்த்தான், அவள் கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தது. கண்கள் இருண்டு நிலைத்து இருந்தது. அவள் முனங்கள் சத்தம் ஏறிக்கொண்டே வந்தது. செய்வதறியாமல் படுத்திருந்தான்.

பின் மெதுவாக எழுந்து தான் கொண்டுவந்த பையை திறந்து ஒரு பாட்டிலை எடுத்து அவள் முன் வைத்துவிட்டு வெளியில் திண்ணையில் படுத்துக்கொண்டான்.

ருக்கு ருக்கு என்று அழைப்பதை கேட்டு மெதுவாக விழித்தெழுந்தான் .                  " எப்படா குட்டி வந்த" அம்மா வேலைக்கு வரளா கேளு என்று மணி  கூறியதும், விட்டுக்குள் நுழைந்தான் வேலு.

பாட்டில் வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. அம்மாவின் கண்கள் அதன் மீது நிலைகுத்தி இருந்தது. இரவெல்லாம் அழுத கண்ணீரின் தடம் அவள் மூக்குவரை நீண்டு இருந்தது.

அனிச்சையாக அவள் நெற்றியை தொட்ட வேலுவின் கைகள் குளிர்ச்சியை உணர்ந்து நடுங்கத்துவங்கியது.

செவ்வாய், ஜனவரி 20, 2015

மகன் வயது 2.8

மகன் வயது 2.8

என் குழந்தையாக இருந்தவன் இப்பொழுது என் பையனாக மாறிவிட்டான்.

"ஒரு விதை எப்படி முளைக்க வேண்டும் என்ற அறிவை மட்டுமே கொண்டு தன் வாழ்வை துவங்குகிறது. தன் புலன்களின் வழியாக வளர்வதற்கான அறிவை வாழ்நாளெல்லாம் அது அடைந்துகொண்டே இருக்கிறது"

ஒற்றை சொல்லாக இருந்த அவன் மொழி , இப்போது சொற்களெல்லாம் கோர்த்து பதம் அமைத்து பேசத்துவங்கி இருக்கிறான்.
வார்த்தைகள் அவனுக்குள் ஒலி வடிவாக பதிந்திருக்கிறது. என்றோ எப்போதோ அவன் பேசத்துவங்கியதற்கு முன் நாங்கள் பேசிய சொற்கள், பெயர்கள் அனைத்தும் இப்போது பேசத்துவங்கி இருக்கிறான்.
குழல் இனிது யாழ் இனியது என்று யார் சொன்னது ? என்ற கேள்வி அவன் பேசும் போதெல்லாம் எழுகிறது.

அப்பா "இது " , அப்பா " இது " , அப்பா " அது " , ஸ்வீட்டா ? என்ன ஸ்வீட்டு ? அப்பா யாரு என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறான். கேள்விகள் மூலம் அவன் அறிதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
சலிப்பு என்ற ஒன்று அவன் மனம் இன்னும் அறியவே இல்லை. அவனுக்கு தேவையான ஒன்றை நூரு முறைக் கூட அவனால் தொடர்ந்து கேட்க முடிகிறது.சலிப்பு என்ற ஒன்றை ஒருவன் வாழ்நாளெல்லாம் அறியாமலே இருந்தால் அவன் நினைப்பதெல்லாம் அவனுக்கு கிடைத்துவிடும்.

அனைத்தையும் கண்டு வியந்துக்கொண்டே இருக்கிறான்.  பொம்மை , உணவு மனிதர்கள், திறந்த வெளி , கடல் , வானம் , குருவிகள் அனைத்தும்.
ஒவ்வொரு கணமும் உலகத்தை கண்டு வியந்துகொண்டே இருக்கும்  வியந்து வியந்து கொண்டாடிக்கொண்டே இருக்கும் அவனை காணும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது.

அவன் முதல் முறையாக பொய் சொன்னது  நினைவில் நிறைந்து இருக்கிறது.
ஒரு டீ கப்பை உடைத்துவிட்டு யாருடா உடைத்தது என்று அவன் அம்மா கேட்க விழிகளை ஒரு ஓரமாக நிறுத்தி அதற்கு எதிர் திசையில் உதடுகளை சுழித்து முகத்தில் சிரிப்பை தவழவிட்டு " அப்பா " என்று என்னை கை காண்பித்தான்.
குழந்தைகளின் பொய்யைவிட அதை சொல்லும்போது அவர்கள் செய்யும் பாவனைகள் அழகோ அழகு. குழந்தைகளின் பொய்யை நாம் ரசிக்கிறோம். ஒருகட்டத்தில் அதை உண்மை என நம்பி நாம் ஏமாறும் போது பொய் சொல்லுவது தவறு என்று உபதேசிக்கத்துவங்கி விடுகிறோம்.

உணவை பொருத்தவரை ,  வெந்நீர் தான் குடிக்க  வேண்டும் , மூலை மற்றும் உடல் வளர்ச்சிக்கு ஹோர்லிக்ஸ், ஐஸ் கிரீம் சாப்பிட கூடாது, மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு எந்த வரையறையும் நாங்கள் விதிக்கவில்லை பசித்தால் சாப்பிடு , எது வேண்டுமானாலும் சாப்பிடு அவ்வளவு தான். அதனால் கம்பகூழும் குடித்து விடுகிறான் , பிசாவும் தின்றுவிடுகிறான். கொஞ்சநாள் முன்புவரை அவனுக்கு உணவு என்பது பசியை ஆற்றும் ஒரு பொருள். அதில் உள்ள சத்து, சுவை, நாகரீக அடையாளம் என்று எந்த மதிப்பீடும் இல்லை. ஆனால் சமிப காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை பார்த்துவிட்டு " அப்பா KFC என்று கேட்க துவங்கி இருக்கிறான்.

நான் எப்போதுமே என் மனைவியிடம் தான் அவன் சாப்பிட்டான என்று கேட்ப்பேன். நம் சமுகத்தில் அம்மா தான் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கவேண்டும், அது அவர்களின் கடமை என்று நம்புகிறோம். பிள்ளைகள் சாப்பிடவில்லை என்றால் பழி அம்மாவுக்கே. அந்த அழுத்தம் அம்மாக்களுக்கு  இருப்பதனால் பிள்ளைகள் சாப்பிட மறுக்கும்போது  அவர்களுக்கு   கோவம் எழுகிறது.

Tap ல் YOUTUBE வழியாக குழந்தைகளுக்கான ஆங்கில பாடல்களை கற்றுக்கொண்டு இருந்தான். அதில் ஒரு அப்பா  மகனை "ஹாய் சாமீய் " How are You என்று கேட்டு பொம்மை கடைகளுக்கு  சென்று பொம்மைகள் , சாக்லைட்  எல்லாம் வாங்கி கொடுக்கிறான். இருவரும் அதை பிய்த்து கொட்டி விளையாடுகிறார்கள். அதே போல பொம்மைகள் கடைகளில் எங்காவது இவன் பார்த்தால் அங்கேயே  அழுது அடம் பிடித்து அது வேண்டும் என்கிறான்.

பொதுவாக எங்களை போல குருங்குடும்பங்களில் ( அம்மா , அப்பா, ஒரு பிள்ளை ) பெரியவர்கள்  இல்லை என்பதால் அம்மா அல்லது அப்பா யாரவது ஒருவர் பிள்ளைகளோடு  எப்போதும் இருக்க வேண்டும். அதனால் அவர்கள் வீட்டு வேலைகளும் மற்ற வேலைகளும் பாதிக்கும் என்பதால் பிள்ளையை  டிவி பார்க்கவும் , TAP ல் ஏதாவது பார்க்கச்சொல்லுகிறோம்.

இன்று டிவியும் இண்டர்நெட்டும் குழந்தைகளின் பொது புத்தியையும், வாழ்வின் அடிப்படைகளையும் வடிவமைத்து அவர்களை வேறெதையும் சிந்திக்காத நுகர்வோனாக மாற்றுவதை நாங்கள் கண்முன்னே காண்கிறோம்.

இப்போதைக்கு அவன் முழுமையாக நம்புவது எங்கள் இருவரைமட்டுமே. அதனால் அவனை சமாதானம் செய்ய நாங்கள் சொல்லும் சில பொய்கள் அவனுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. நான் ஆபீஸ்க்கு செல்லும் போதுகூட அவனுக்கு தெரியாமல் ஒளிந்து தான் செல்வேன். அவன் அம்மா ஒரு முடிவெடுத்துவிட்டார். அவனை ஏமாற்றும் படி எதுவும் பொய் சொல்லுவது இல்லை என்று. தேவையில்லாமல் ஏதாவது கேட்டால் பின்பு வாங்கி தருகிறேன் என்று சொல்வதை விடுத்து அவன் அழுதாலும்  பரவாயில்லை என்று 'முடியாது' என்று சொல்லிவிடுகிறார். இப்போதெல்லாம் அவன் கண்முன்பாக தான் ஆபீஸ்க்கு கிளம்புகிறேன். சிலநாள் அழுதான், இப்போது அவனே வழியனுப்பி வைக்கிறான்.

ஒவ்வொன்றையும் வியக்கும், ஒவ்வொன்றையும் புதியதாய் பார்க்கும், ஒவ்வொரு கணமும் துள்ளிக்கொண்டே , கொண்டாடிக்கொண்டே இருக்கும் ஒருவன், நம்மை கோவத்தின் உச்சிக்கும் ஆனந்தத்தின் உச்சிக்கும் கொண்டு செல்லும் ஒருவன் நம்மோடு எப்போதும் இருப்பது ஒரு வரம்.

அவன் வாழ்க!!!

சனி, ஜனவரி 10, 2015

காதல்



                                             

முதல் வகை காதல்

மனிதனின் ஆதி உணர்வுகளில்  ஒன்று காதல் .  அந்த காதலை நமக்குள் எழுப்புபவள் ஒரு தேவதை. நிலவின் மகள். குளிர்ந்த இளம் பொன்னொளியால் ஆனவள்.

உதிர்ந்த பழுத்த இலை மெதுவாக காற்றில் ஆடி கீழ் இருக்கும் தெளிந்த நீர் நிலை மேல் விழுந்து மெல்லலைகளை எழுப்புவது போல அவள் தன்
பொன்னொளி சிறகை விரித்துப்பறந்து வந்து தன் முயல் பஞ்சு பாதங்களை நம் மனதின் மேல் வைக்கும்போது நாமும் சிறு அலைகளை உணர்வோம்.

அவள் நம் அகங்காரத்துடன் பேசத்துவங்குகிறாள்.

ஒரு பெண்ணின் மனதில் புகும் அந்த தேவதை உனக்கான ஆண் அதோ அங்கே நிற்கிறான். அவன் உன்னை பார்க்கிறான் என்கிறது. அகங்காரம் வரிந்துகொண்டு வாதிடத்துவங்குகிறது. என் அழகு என்ன தெரியுமா, என் தகுதி என்னதெரியுமா அவன் எப்படி எனக்கு ஏற்றவன்.

தேவதை புன்சிரிப்போடு அவனை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறது. அகங்காரம் மெல்ல பணிந்ததும் தேவதை தன் கையில் உள்ள மயில்பீலியால் மனதை வருடி காதலை எழுப்புகின்றது. அதன் பின் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் தேவதை வெளியேறுகிறது.

அதன்பின் அவளுக்குப்பிடித்ததெல்லாம்  செய்யக்கூடிய அவளுக்கு பிடித்த குணம் கொண்ட ஒரு ஆண்மகனை காதல் அவளுக்குள் சமைக்கிறது.

அப்படி சமைக்கப்பட்ட ஆணை அவள் காதலிக்கத்துவங்குகிறாள்.

பெரும்பாலும் காதலிக்கும்  ஆணும் அது போலவே நடந்துகொள்கிறான்.

ஒரு தருணத்தில் ஆணின் உண்மை நிலை வெளிப்படும் போது அந்த பெண்ணினுள் இருக்கும் ஆணின் பிம்பம் நொறுங்கி காதல் குலைந்து, தொடும்போதெல்லாம் வலிக்கும் ஒரு வடுவாக மாறிவிடுகிறது.

வெகு சிலருக்கே இரண்டும் ஒன்று போலவே அமைந்து காலமெல்லாம் காதலில் திளைக்கும் வாய்ப்பு அமைகிறது. அவர்கள் காதலை ஒளிரும் வைரமாக்கி தன் மனப்பேழையில் வைத்து அவ்வப்போது திறந்து பார்த்து பரவசம் கொள்கிறார்கள்.                


இரண்டாம் வகை காதல் 

முதல் வகை காதல் ஒரு தேவதை நமக்குள் தொட்டு எழுப்புவது. ஆனால் இது நாமே நம் மனதில் ஆழ்ந்தா தேடல் முலம் கண்டடைவது.

நம் அகம் எதன்மீது அதீத விருப்பம் கொண்டுள்ளது என்பதை கண்டடைவது.

அந்த அதீத விருப்பத்தை அகத்தின் காதல் எனலாம்.

முதல் சொன்ன காதல் கொடுத்த அத்தனை அனுபவங்களையும் இந்த காதலும் கொடுக்கும். இன்பம், துயரம், உவகை, காத்திருப்பு , இழப்பு அனைத்தும்.

பயணத்தின் மீது காதல் கொண்டவன் நிலையாமல் ஊர்தோறும் அலைவதை பார்க்கிறோம்.

அறிவியல் மீது காதல் கொண்டவன் ஊண் மறந்து , உணர்வு மறந்து ,காலம் அழிந்து அதுவாகவே ஆவதை பார்க்கிறோம்.

கலை, இலக்கியம் மீது  காதல் கொண்டவர்கள்   தன் வாழ்வின் இருதித்துளியையும் அதற்காகவே செலவிடுவதை நாம் பார்க்கிறோம்.

புத்தகத்தின் மீது பெரும் விருப்பம் கொண்டவன் தன் வருவாயின் பெரும்பகுதியை அதற்க்கு செலவிடுவதை நாம் பார்க்கிறோம்.

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?



இது மொழின் மீதும் இந்த சமுகத்தின் மீதும்   காதல் கொண்ட பாரதியின் வரிகள்.இன்று நாம் பார்க்கும் அனைத்து உன்னதங்களும், அனுபவிக்கும் அனைத்து கண்டுபிப்புகளும் தன் அகத்தின் காதலை கண்டடைந்தவர்களால் உருவாக்கப்பட்டது.நம் பெரும் விருப்பத்தை கண்டடைவோம். காதலை கண்டடைவோம்.