"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

சனி, ஜனவரி 10, 2015

காதல்



                                             

முதல் வகை காதல்

மனிதனின் ஆதி உணர்வுகளில்  ஒன்று காதல் .  அந்த காதலை நமக்குள் எழுப்புபவள் ஒரு தேவதை. நிலவின் மகள். குளிர்ந்த இளம் பொன்னொளியால் ஆனவள்.

உதிர்ந்த பழுத்த இலை மெதுவாக காற்றில் ஆடி கீழ் இருக்கும் தெளிந்த நீர் நிலை மேல் விழுந்து மெல்லலைகளை எழுப்புவது போல அவள் தன்
பொன்னொளி சிறகை விரித்துப்பறந்து வந்து தன் முயல் பஞ்சு பாதங்களை நம் மனதின் மேல் வைக்கும்போது நாமும் சிறு அலைகளை உணர்வோம்.

அவள் நம் அகங்காரத்துடன் பேசத்துவங்குகிறாள்.

ஒரு பெண்ணின் மனதில் புகும் அந்த தேவதை உனக்கான ஆண் அதோ அங்கே நிற்கிறான். அவன் உன்னை பார்க்கிறான் என்கிறது. அகங்காரம் வரிந்துகொண்டு வாதிடத்துவங்குகிறது. என் அழகு என்ன தெரியுமா, என் தகுதி என்னதெரியுமா அவன் எப்படி எனக்கு ஏற்றவன்.

தேவதை புன்சிரிப்போடு அவனை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறது. அகங்காரம் மெல்ல பணிந்ததும் தேவதை தன் கையில் உள்ள மயில்பீலியால் மனதை வருடி காதலை எழுப்புகின்றது. அதன் பின் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் தேவதை வெளியேறுகிறது.

அதன்பின் அவளுக்குப்பிடித்ததெல்லாம்  செய்யக்கூடிய அவளுக்கு பிடித்த குணம் கொண்ட ஒரு ஆண்மகனை காதல் அவளுக்குள் சமைக்கிறது.

அப்படி சமைக்கப்பட்ட ஆணை அவள் காதலிக்கத்துவங்குகிறாள்.

பெரும்பாலும் காதலிக்கும்  ஆணும் அது போலவே நடந்துகொள்கிறான்.

ஒரு தருணத்தில் ஆணின் உண்மை நிலை வெளிப்படும் போது அந்த பெண்ணினுள் இருக்கும் ஆணின் பிம்பம் நொறுங்கி காதல் குலைந்து, தொடும்போதெல்லாம் வலிக்கும் ஒரு வடுவாக மாறிவிடுகிறது.

வெகு சிலருக்கே இரண்டும் ஒன்று போலவே அமைந்து காலமெல்லாம் காதலில் திளைக்கும் வாய்ப்பு அமைகிறது. அவர்கள் காதலை ஒளிரும் வைரமாக்கி தன் மனப்பேழையில் வைத்து அவ்வப்போது திறந்து பார்த்து பரவசம் கொள்கிறார்கள்.                


இரண்டாம் வகை காதல் 

முதல் வகை காதல் ஒரு தேவதை நமக்குள் தொட்டு எழுப்புவது. ஆனால் இது நாமே நம் மனதில் ஆழ்ந்தா தேடல் முலம் கண்டடைவது.

நம் அகம் எதன்மீது அதீத விருப்பம் கொண்டுள்ளது என்பதை கண்டடைவது.

அந்த அதீத விருப்பத்தை அகத்தின் காதல் எனலாம்.

முதல் சொன்ன காதல் கொடுத்த அத்தனை அனுபவங்களையும் இந்த காதலும் கொடுக்கும். இன்பம், துயரம், உவகை, காத்திருப்பு , இழப்பு அனைத்தும்.

பயணத்தின் மீது காதல் கொண்டவன் நிலையாமல் ஊர்தோறும் அலைவதை பார்க்கிறோம்.

அறிவியல் மீது காதல் கொண்டவன் ஊண் மறந்து , உணர்வு மறந்து ,காலம் அழிந்து அதுவாகவே ஆவதை பார்க்கிறோம்.

கலை, இலக்கியம் மீது  காதல் கொண்டவர்கள்   தன் வாழ்வின் இருதித்துளியையும் அதற்காகவே செலவிடுவதை நாம் பார்க்கிறோம்.

புத்தகத்தின் மீது பெரும் விருப்பம் கொண்டவன் தன் வருவாயின் பெரும்பகுதியை அதற்க்கு செலவிடுவதை நாம் பார்க்கிறோம்.

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?



இது மொழின் மீதும் இந்த சமுகத்தின் மீதும்   காதல் கொண்ட பாரதியின் வரிகள்.இன்று நாம் பார்க்கும் அனைத்து உன்னதங்களும், அனுபவிக்கும் அனைத்து கண்டுபிப்புகளும் தன் அகத்தின் காதலை கண்டடைந்தவர்களால் உருவாக்கப்பட்டது.நம் பெரும் விருப்பத்தை கண்டடைவோம். காதலை கண்டடைவோம்.  















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக