"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், ஜனவரி 20, 2015

மகன் வயது 2.8

மகன் வயது 2.8

என் குழந்தையாக இருந்தவன் இப்பொழுது என் பையனாக மாறிவிட்டான்.

"ஒரு விதை எப்படி முளைக்க வேண்டும் என்ற அறிவை மட்டுமே கொண்டு தன் வாழ்வை துவங்குகிறது. தன் புலன்களின் வழியாக வளர்வதற்கான அறிவை வாழ்நாளெல்லாம் அது அடைந்துகொண்டே இருக்கிறது"

ஒற்றை சொல்லாக இருந்த அவன் மொழி , இப்போது சொற்களெல்லாம் கோர்த்து பதம் அமைத்து பேசத்துவங்கி இருக்கிறான்.
வார்த்தைகள் அவனுக்குள் ஒலி வடிவாக பதிந்திருக்கிறது. என்றோ எப்போதோ அவன் பேசத்துவங்கியதற்கு முன் நாங்கள் பேசிய சொற்கள், பெயர்கள் அனைத்தும் இப்போது பேசத்துவங்கி இருக்கிறான்.
குழல் இனிது யாழ் இனியது என்று யார் சொன்னது ? என்ற கேள்வி அவன் பேசும் போதெல்லாம் எழுகிறது.

அப்பா "இது " , அப்பா " இது " , அப்பா " அது " , ஸ்வீட்டா ? என்ன ஸ்வீட்டு ? அப்பா யாரு என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறான். கேள்விகள் மூலம் அவன் அறிதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
சலிப்பு என்ற ஒன்று அவன் மனம் இன்னும் அறியவே இல்லை. அவனுக்கு தேவையான ஒன்றை நூரு முறைக் கூட அவனால் தொடர்ந்து கேட்க முடிகிறது.சலிப்பு என்ற ஒன்றை ஒருவன் வாழ்நாளெல்லாம் அறியாமலே இருந்தால் அவன் நினைப்பதெல்லாம் அவனுக்கு கிடைத்துவிடும்.

அனைத்தையும் கண்டு வியந்துக்கொண்டே இருக்கிறான்.  பொம்மை , உணவு மனிதர்கள், திறந்த வெளி , கடல் , வானம் , குருவிகள் அனைத்தும்.
ஒவ்வொரு கணமும் உலகத்தை கண்டு வியந்துகொண்டே இருக்கும்  வியந்து வியந்து கொண்டாடிக்கொண்டே இருக்கும் அவனை காணும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது.

அவன் முதல் முறையாக பொய் சொன்னது  நினைவில் நிறைந்து இருக்கிறது.
ஒரு டீ கப்பை உடைத்துவிட்டு யாருடா உடைத்தது என்று அவன் அம்மா கேட்க விழிகளை ஒரு ஓரமாக நிறுத்தி அதற்கு எதிர் திசையில் உதடுகளை சுழித்து முகத்தில் சிரிப்பை தவழவிட்டு " அப்பா " என்று என்னை கை காண்பித்தான்.
குழந்தைகளின் பொய்யைவிட அதை சொல்லும்போது அவர்கள் செய்யும் பாவனைகள் அழகோ அழகு. குழந்தைகளின் பொய்யை நாம் ரசிக்கிறோம். ஒருகட்டத்தில் அதை உண்மை என நம்பி நாம் ஏமாறும் போது பொய் சொல்லுவது தவறு என்று உபதேசிக்கத்துவங்கி விடுகிறோம்.

உணவை பொருத்தவரை ,  வெந்நீர் தான் குடிக்க  வேண்டும் , மூலை மற்றும் உடல் வளர்ச்சிக்கு ஹோர்லிக்ஸ், ஐஸ் கிரீம் சாப்பிட கூடாது, மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு எந்த வரையறையும் நாங்கள் விதிக்கவில்லை பசித்தால் சாப்பிடு , எது வேண்டுமானாலும் சாப்பிடு அவ்வளவு தான். அதனால் கம்பகூழும் குடித்து விடுகிறான் , பிசாவும் தின்றுவிடுகிறான். கொஞ்சநாள் முன்புவரை அவனுக்கு உணவு என்பது பசியை ஆற்றும் ஒரு பொருள். அதில் உள்ள சத்து, சுவை, நாகரீக அடையாளம் என்று எந்த மதிப்பீடும் இல்லை. ஆனால் சமிப காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை பார்த்துவிட்டு " அப்பா KFC என்று கேட்க துவங்கி இருக்கிறான்.

நான் எப்போதுமே என் மனைவியிடம் தான் அவன் சாப்பிட்டான என்று கேட்ப்பேன். நம் சமுகத்தில் அம்மா தான் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கவேண்டும், அது அவர்களின் கடமை என்று நம்புகிறோம். பிள்ளைகள் சாப்பிடவில்லை என்றால் பழி அம்மாவுக்கே. அந்த அழுத்தம் அம்மாக்களுக்கு  இருப்பதனால் பிள்ளைகள் சாப்பிட மறுக்கும்போது  அவர்களுக்கு   கோவம் எழுகிறது.

Tap ல் YOUTUBE வழியாக குழந்தைகளுக்கான ஆங்கில பாடல்களை கற்றுக்கொண்டு இருந்தான். அதில் ஒரு அப்பா  மகனை "ஹாய் சாமீய் " How are You என்று கேட்டு பொம்மை கடைகளுக்கு  சென்று பொம்மைகள் , சாக்லைட்  எல்லாம் வாங்கி கொடுக்கிறான். இருவரும் அதை பிய்த்து கொட்டி விளையாடுகிறார்கள். அதே போல பொம்மைகள் கடைகளில் எங்காவது இவன் பார்த்தால் அங்கேயே  அழுது அடம் பிடித்து அது வேண்டும் என்கிறான்.

பொதுவாக எங்களை போல குருங்குடும்பங்களில் ( அம்மா , அப்பா, ஒரு பிள்ளை ) பெரியவர்கள்  இல்லை என்பதால் அம்மா அல்லது அப்பா யாரவது ஒருவர் பிள்ளைகளோடு  எப்போதும் இருக்க வேண்டும். அதனால் அவர்கள் வீட்டு வேலைகளும் மற்ற வேலைகளும் பாதிக்கும் என்பதால் பிள்ளையை  டிவி பார்க்கவும் , TAP ல் ஏதாவது பார்க்கச்சொல்லுகிறோம்.

இன்று டிவியும் இண்டர்நெட்டும் குழந்தைகளின் பொது புத்தியையும், வாழ்வின் அடிப்படைகளையும் வடிவமைத்து அவர்களை வேறெதையும் சிந்திக்காத நுகர்வோனாக மாற்றுவதை நாங்கள் கண்முன்னே காண்கிறோம்.

இப்போதைக்கு அவன் முழுமையாக நம்புவது எங்கள் இருவரைமட்டுமே. அதனால் அவனை சமாதானம் செய்ய நாங்கள் சொல்லும் சில பொய்கள் அவனுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. நான் ஆபீஸ்க்கு செல்லும் போதுகூட அவனுக்கு தெரியாமல் ஒளிந்து தான் செல்வேன். அவன் அம்மா ஒரு முடிவெடுத்துவிட்டார். அவனை ஏமாற்றும் படி எதுவும் பொய் சொல்லுவது இல்லை என்று. தேவையில்லாமல் ஏதாவது கேட்டால் பின்பு வாங்கி தருகிறேன் என்று சொல்வதை விடுத்து அவன் அழுதாலும்  பரவாயில்லை என்று 'முடியாது' என்று சொல்லிவிடுகிறார். இப்போதெல்லாம் அவன் கண்முன்பாக தான் ஆபீஸ்க்கு கிளம்புகிறேன். சிலநாள் அழுதான், இப்போது அவனே வழியனுப்பி வைக்கிறான்.

ஒவ்வொன்றையும் வியக்கும், ஒவ்வொன்றையும் புதியதாய் பார்க்கும், ஒவ்வொரு கணமும் துள்ளிக்கொண்டே , கொண்டாடிக்கொண்டே இருக்கும் ஒருவன், நம்மை கோவத்தின் உச்சிக்கும் ஆனந்தத்தின் உச்சிக்கும் கொண்டு செல்லும் ஒருவன் நம்மோடு எப்போதும் இருப்பது ஒரு வரம்.

அவன் வாழ்க!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக