"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், மார்ச் 31, 2015

மகன் வயது 2.10

பகுதி -1 கண்டிப்பு 

ஒரு குழந்தையை எந்த வயதிலிருந்து  கண்டிக்கத்துவங்களாம் என்ற கேள்வி என்மனதில் நீண்ட நாள் இருந்து கொண்டே இருந்தது. என் கணக்கு மூன்று வயது. குழந்தைக்கு நீ செய்வது தவறு என்று சொன்னால் புரிந்துகொள்கின்ற பக்குவம் இருந்தால்  நாம் கண்டிக்கத்துவங்கலாம்.

அதேபோல செய்யாத தப்புக்கு கண்டிப்பது அல்லது தண்டிப்பது குழந்தைகளின் ஆழ்மனதில் எதிர்மறையாக பதியும். அந்த தருணத்தில் நாம் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது அவசியம் என்று நினைக்கிறேன் .

அதே போல அவன் தவறு செய்யும் போது கோவம் அனைத்தையும் அவன்மீது கொட்டாமல் முதலில் நம்மை நாம்  கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையெனில் அவன் மீது மூர்கமான தாக்குதலாக அது அமைந்துவிடும்.

எங்கள் வீட்டில் என்னோடு பிறந்தவர்கள் நான்கு பேர். என் அம்மா என்னை அடித்திருக்கிறார். அப்பா அடித்ததில்லை ஆனால் ஒரு பார்வை பார்த்து அதட்டினாலே நாங்கள் பயந்து நடுங்கிவிட்டுவோம். என் பெரியப்பா வழி அண்ணன்கள் எங்களை அதட்டி அடித்து வழிக்கு கொண்டுவருவது உண்டு. பெரும்பாலான வீடுகளில் மாமா ,சித்தப்பா அந்த வேலையை செய்வார்கள்.

அதே போல குழந்தைகளும் அவர்கள் மீது பாசமாக இருப்பார்கள். பள்ளியில் ஏதாவது சிறுவர்களுக்குள் சண்டை வந்தாள் " இர்ரா மகனே என் சித்தப்பாவை கூட்டி வர்ரேன் " என்று ஓடுபவனை நான் பார்த்து இருக்கிறேன். என் அப்பா ஒரு முறை என் பள்ளிக்கு வந்து வழக்கமாக எல்லோரும் சொல்லும் வசனத்தை என் தமிழ் வாத்தியாரிடம் சொல்லிவிட்டு போனார் " கண்ணு ரெண்ட விட்டுட்டு மத்த எந்த எடத்தில வேண்ணா அடிங்க சார்".

ஆனால் இன்று ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் , பெற்றவர்கள் தன் குழந்தைகளை மற்றவர்கள் கண்டிப்பதையும் அடிப்பதையும் விரும்புவது இல்லை. நேரடியாகவே அதை அவர்களிடம் சொல்லிவிடுகிறார்கள். அதே போல பள்ளியிலும் கண்டிப்பதும் அடிப்பதும் நிறுத்திவிட்டோம். ஆதலால் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள்  அதிக கவனம் செலுத்தவேண்டி இருக்கிறது.

என் மகனுக்கு என் மீது அபார நம்பிக்கை இருக்கிறது. அவனுக்கு எது நடந்தாளும் நான் காப்பாற்றி விடுவேன் என்று நம்புகிறான். யாரவது அவனை கண்டித்தால் முகம் வெம்பி என்னை திரும்ப்பி பார்ப்பான். நான் அவனை கண்டுகொள்ளாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டால் வெடித்து அழுது விடுவான்.
நான் இப்போது தான் கண்டிக்கத்துவங்கி இருக்கிறேன்.கண்டிக்கும் போது அமைதியாக இருப்பான். அவன் அம்மா வந்ததும்  "அம்மா அப்பா அடிச்சிட்டான் "  என்று வெடித்து அழுவான். கண்டிப்பதை இன்னும் எப்படி எதிர்கொள்வது என்று அவனுக்கு தெரியவில்லை.

பகுதி -2 தைரியம் 

பொதுவாக அவன் பயந்த சுபாவம். யாரவது புதியதாக வீட்டுக்கு வந்தாலே அழுவான். இந்த தொகுப்பு வீட்டில் எந்த ஆட்களை கண்டாலும் முகத்தை திருப்பிக்கொண்டு பயந்து ஒடுங்குவான். வீட்டு க்கு வெளியில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது ஏதாவது ஒரு வீட்டின் கதவு திறக்கும் ஒலி கேட்டால் போதும் வீட்டுக்குள் ஓடிவந்து விடுவான் , ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக தைரியம் வந்துவிட்டது . எல்லோரையும் இவனே கூப்பிட்டு பேசுகிறான்.

அவன் பக்கத்து வீட்டு குழந்தைகளோடு விளையாடும் போது நான் வீட்டில் இருந்தால் அவனுக்கு அளவற்ற தைரியம் வந்துவிடுகிறது . அவர்களிடம் சத்தமாக பேசுவான் சண்டையிடுவான்.

 வெள்ளி கிழமை எனக்கு விடுமுறை நாள். வழக்கமாக நானும் கவிதாவும்          ( மனைவி ) அவனை விளையாட பூங்காவுக்கு அழைத்து சென்றோம்.

நாங்கள் வழக்கமாக செல்லும் பூங்கா , வண்ண பூக்களால் நிறைந்து இருந்தது. அந்த பூக்களுக்கு என்ன உவமை கூரலாம் என்று யோசித்து பார்த்தேன் , அதற்க்கு நிகராக எதுவும் தோன்றவில்லை. கடற்கரை , புல்வெளி என்று மனதுக்கு இதமான இடம். குழந்தைகள் விளையாட மணல் வெளியும் அதில் உஞ்சலும் , சறுக்கு மேடைகளும் உண்டு.

அங்கே கார் ஸ்டேரிங் ஒன்று குழந்தைகள் விளையாட வைத்திருந்தனர். இவனுக்கு நான் கார் ஓட்டும் போது ஸ்டேரிங்கை சுற்றுவது வேடிக்கையாக இருக்கும். அதையே பார்த்துக்கொண்டு இருப்பான்.

அன்று அந்த பூங்காவில் இருந்த  கார் ஸ்டேரிங்கை ஓடிப்போய் பிடித்துக்கொண்டான். பத்து நிமிடங்கள் அங்கிருந்து நகரவில்லை. அந்த பூங்காவில் சவூதி, பாகிஸ்தானி , பிலிப்பைனி, இந்தியா மற்றும் சுடானி குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தனர். ஒரு எகிப்து பெண்குழந்தை இவன் வயதே இருக்கும். அவனிடம் வந்து அந்த ஸ்டேரிங்கை கேட்டது. இவன் தரவே இல்லை. கேட்டு கேட்டு இவனை அடிக்க ஆரம்பித்தது. நான் பஞ்சாயத்துக்கு போகலாம் என்று எழுந்தேன். கவிதா வேண்டாம் என்று தடுத்து அவன் என்ன தான் செய்கிறான் பார்ப்போம் என்றவுடன் நான் போகவில்லை. அந்த பெண் கொஞ்ச நேரம் நின்று விட்டு போய்விட்டது. அதன் பின் யார் அவனிடம் போனாலும் 'NO NO GO' என்று கையை காட்டி மிரட்டிக்கொண்டு இருந்தான். எங்களுக்கு சிரிப்பாக இருந்தது. பின் ஒரு வழியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்தான். இரவு துங்கிய பின் கூட " அக்கா சண்ட போட்டா " , " அக்கா சண்ட போடா " என்று உளறி கொண்டு இருந்தான்.

அண்ணன் தம்பிகள் சண்டையிட்டால் அம்மா அப்பா அதில் உள்ளே நுழையக்கூடாது என்பார்கள். ஏனெனில் அபோதுதான் தைரியமும் எதிர்த்து நிற்கும் தன்மையும் அவர்களுக்கு இயல்பாக கைகூடும். அந்த தைரியம் மூர்கமாக மாறாமல் பார்த்துக்கொள்வதே நம் கடமை.

பகுதி -3 யுத்தி 

கடந்த வாரம் கவிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. படுக்கையில் போர்த்திக்கொண்டு படுத்திருக்கும் போது விழுந்து விழுந்து கவனித்துக்கொண்டான். கொஞ்சம் இரும்பினாலே அம்மா தண்ணி குடி , அம்மா மாத்திரை குடி என்று அன்பு மழை. பின் மருத்துவமனைக்கு சென்று வரும் வழியில் ஒரு கடைகயில்  அவனுக்கு சாக்லெட் ( கிண்டர் ஜாய் ) வாங்கி கொடுத்தோம்.

இந்த வாரம் அதே உத்தியை அவன் பயன்படுத்தினான். காலில் லேசாக இடித்துக்கொண்டு கட்டிலில் போர்த்தி படுத்துக்கொண்டான் . "அம்மா வக்கிதே அம்மா வக்கிதே " மருந்து வேணும் , தண்ணி வேணும் , ஹோஸ்பெட் போகணும் , கக்கி ( கடைக்கு ) போனம் , கின்ஜா வாங்கணும் என்று கேட்டுக்கொண்டே இருந்தான்.  ஒரு வழியா சமாதானம் செய்து அவனை எழுப்ப வேண்டியதாகிவிட்டது.

அவனுக்கு வெளிவுலம் பார்க்க ஆசை. முடிந்த அளவுக்கு வெளியில் அழைத்து செல்கிறேன். உலகம் முழுவதும் பொது இடங்கள் அனைத்தும் வளர்ந்த பெரியவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. நம் வீடும் அப்படித்தான். அவனே பயன்படுத்தும் வகையில் உள்ள பொது இடம் பூங்கா மற்றும் ஹைபர் மார்கெட்டில் சாக்லெட் வைத்திருக்கும் இடம் மட்டும் தான்.

வெள்ளி, மார்ச் 20, 2015

இளைய ராஜா



இளைய ராஜா

தமிழ் சமுகத்தில் பிறந்த , மகத்தான கலைஞ்சர்களில் ஒருவர் இளைய ராஜா.

ஒரு தனிப்பட்ட மனிதனை பற்றி பேச வேண்டும் என்றாள் அவரின் சொந்த வரலாற்றை பற்றி பேசலாம் அல்லது அவரிருக்கும் துறையில் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் மற்றும் சாதனைகள் பற்றி பேசலாம் அல்லது சமுகத்தின் மகிழ்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பை பேசலாம்.

நான் அவர் திரை இசையில் கொண்டுவந்த மாற்றங்களையும் சமுக மகிழ்ச்சிக்கு அவர் பங்களிப்பையும் மாற்றி பேச விழைகிறேன்.

1976 ல் அவர் "அன்னக்கிளி" படத்தின் மூலம் திரை இசையில் நுழைந்தார்.

தமிழ் திரை துறை நம்  நாடக மரபின் நிட்சி எனலாம். முன்தன் முதலில் திரைப்பட தொழில் நுட்பம் நமக்கு அறிமுகம் ஆனா போது  நமக்கு நன்கு  பரிச்சியமான தெருக் கூத்தை அடிப்படையாக கொண்டு திரை படங்களை உருவாக்கத்துவங்கினோம். பின்பு அரங்க அமைப்பு, இசை , கதை , ஓவியம் என்று கூட்டு கலையாக தமிழ் திரைப்படங்கள்  பரிணமித்தது.

அதில் இசை பிரதானம்.

1931ல் முதல் பேசும் படம் " காளிதாஸ் " வெளி வந்தது. அதில் 50 பாடல்கள் இடம் பெற்றன.  அனைத்தும் கர்னாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டது.

பின் நாட்டுபுற இசை, கர்னாடக இசை , இந்திய மரபிசை , மேற்கத்திய இசை அனைத்தும் ஒன்று கலந்து தனியான ஒரு திரை இசை மரபு ஒன்று உருவானது.

1950, 60 களில் திரை இசையில் உச்சத்தை தொட்டவர்கள் விஸ்வநாதன் - ராமமுர்த்தி அவர்கள்.

70 வதுகளில்  தமிழ் திரை இசை ஒரு தொய்வை அடைந்தது. இந்தி பாடல்கள் இங்கு அதிகம் ஒலிக்கத்துவங்கியது.

சரியான தருணத்தில் இளைய ராஜா அறிமுகம் ஆனார்.

அவருக்கு முன்பிருந்த இசை அமைப்பாளர்கள் பாடல் வரும் தருணத்தை மட்டும் கேட்டு மெட்டமைத்து கொடுப்பார்கள்.

ஆனால் ராஜா அப்படி அல்ல முழு கதையையும் கேட்ப்பார். அதை காட்சிகளாக விரியச்செய்து அந்த காட்சி க்கு ஏற்றார் போல இசையை உருவாக்குவார்.

பழைய படங்களில் உணர்சிகளை வெளிக்காட்ட உச்ச ஒலியில் வசனங்கள் பேசுவார்கள்  , மிகை நடிப்பில் கொந்தளிப்பார்கள். படம் பார்ப்பவரும் அந்த உணர்சிகளை அதே வேகத்தில் அடைவர்.

80 பதுகளில்  தமிழ் திரைப்படங்கள் எதார்த்தத்தை நோக்கி நகரத்துவங்கியது.
அந்த படங்களில் கட்சிகளுக்கு தேவையான உணர்வுகளை ராஜாவின் இசை ரசிகனின் மனதில் உருவாக்கியது.

பின்னணி இசைக்கு தனி மொழியை உருவாக்கி திரை படத்தில் அதன் முக்கியத்துவத்தை  மேம்படுத்தியவர் ராஜா.

 புதிய திரை மொழியோடு திரை துறையில் நுழைந்த எண்ணற்ற
இயக்குனர்களின் கனவுகளை இசையாக செதிக்கியவர் ராஜா.

பாரதிராஜா, மணிரத்தினம் , பாக்கியராஜ் , பாலுமகேந்திரா , பாலா , மிஸ்கின்  பட்டியல் நீளும்.

பாடல்கள் பற்றி ஒரு சாதாரன ரசிகனாக சொன்னால் அவை நேரடியாக அகத்துடன் பேசுபவை.

பாடலை ஒலிக்கவிட்டு நான் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டு இருப்பேன். என் கவனம் அதில் இருக்காது ஆனால் என் அகம் அதை
கேட்டுக்கொண்டு இருக்கும். எதோ ஒரு கணத்தில் அந்த பாடலை நான் முணுமுணுத்துக்கொண்டு இருப்பேன்.

மனிதனின்  அகம் கேட்காத எந்த பாடலும் சில நாள் கழித்து மனதிலிருந்து அழிந்து விடும். மாறாக ராஜாவின் பாடல்கள் எப்போதும் கேட்டுக்கொண்டு இருப்பதற்கு காரணம் அது நம் ஆன்மாவோடு பேசுபவை.

தீரா துயரத்திலிருந்து, கொள்ளும் தனிமையிலிருந்து நம்மையறியாமலே நம்மை மீட்டெடுப்பது ராஜாவின் இசை.

ராஜாவின் இசையை காட்சிகளாக பார்க்காதிர்கள், ஏனெனில் காட்சியில் நாயகனும் நாயகியும் வெறுமனே மரத்தை சுற்றி ஆடிக்கொண்டு இருப்பார்கள் , ஆனால் இசை வேறு தளத்தில் அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கும்.

ராஜாவின்  5 நிமிட பாடலை எந்த கவன சிதறலும் இல்லாமல் நம்மால் முழுமையாக கேட்க முடிந்தால்  அது நமக்குள் அற்புதங்களை நிகழ்த்திவிடும்.

அந்த மகத்தான மனிதனை போற்றுவோம்.
நன்றி.


செவ்வாய், மார்ச் 17, 2015

ஆங்கிலம் தெரியாத முட்டாள்

என்னை யாரவது திட்டினால்  அதிலிருந்து கடந்து வருவது எனக்கு ரொம்ப எளிது. திட்டுபவரை உடனே என் எதிரியாக  பாவித்து அவன்   மட்டும் யோக்கியமா ? அவனை பத்தி எனக்கு  தெரியாதா என்று திருப்பி திட்டினால் போதும் மனம் சாந்தி ஆகிவிடும்.

என்னை யாராவது  பாராட்டினால்   நான்  நெளியத் துவங்கிவிடுவேன். அதை எப்படி எதிர் கொள்ளவது என்று எனக்கு தெரிவது இல்லை.

அதே போல எனக்கு யாரவது அறிவுரை சொன்னா அதையும்  எப்படி கடந்து போவது என்று தெரியாது.

அட்வைஸ் பண்ணுபவர் பெரும்பாலும் நெருக்கமானவராக இருக்கலாம், உன் நல்லதுக்கு தான் சொல்றேன் என்று அவர் ஆரம்பிக்கும் போது சப்த நாடியும் அடங்கி சரிங்க சரிங்க என்று சொல்லத்துவங்கி விடுவேன்.

அட்வைஸ் பண்ணும் போது என் சுயம் ( ஈகோ ) உரசப்படும். முன்பெல்லாம் மனம் கொந்தளிக்கத்துவங்கிவிடும். ச்ச்சே  இப்படி பண்ணிட்டோமே என்று புலம்பி, குழம்பி, ததும்பி , வெம்பி இரண்டு நாள் பித்தொடு அலைந்து பின் மறந்து விடுவேன்.

ஆனால் இப்போது வேறு விதமாக முயன்று வருகிறேன். அப்படி அட்வைஸ் செய்து என் சுயம் அடிபடும்போது வழக்கம் போல மனம் கொந்தளிக்கத்துவங்கும். அவன் யாரு அதை சொல்வதற்கு எனக்கு தெரியாதா ? நா மட்டுமா இப்படி இருக்கேன் ? மத்தவங்களுக்கு நா மேல்  என்று துவங்கி பெனாத்த ஆரம்பிக்கும் , கொஞ்ச நேரம் கழித்து இல்ல இல்ல நா பண்ணது தப்பு , அப்படி இனி பன்னக்கூடாது என்று புலம்பும். கொஞ்ச நேரம் அதை கவனித்தால் செம காமடியா இருக்கும். அதிக பட்சம் அரை  மணி நேரம் மனதை கவனித்துக்கொண்டே இருந்தால் மனம் ஒரு முடிவுக்கு வரும். நான்  வேறு வேலை பார்க்க  சென்று விடுவேன்.

எனக்கு அதிகம் அட்வைஸ் பண்ணப்படுவது என்  ஆங்கில  அறிவை பற்றித்தான்.

எங்கள் கிராமத்து பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது A , B , C , D தடை இல்லாமல்  நான் மட்டுமே சொல்லி கைதட்டல் வாங்கினேன்.

அதன் பின் பொறியியல் படிப்பு முதலாண்டு முடியும் வரை ஆங்கில வாத்தியார் தான் என் முதல் எதிரி.

பொறியியல் படிக்கும் போது நண்பர்கள் அனைவரும் திட்டுவார்கள். ஏனோ அது மண்டையில் ஏறவே இல்லை. என்னோடு படித்த கிராமத்து நண்பர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி அடைந்தார்கள்.  நான் மட்டும் தேங்கிவிட்டேன்.

வேலைக்கு வந்தவுடன் ஆங்கிலம் பேச நன்றாக வந்துவிட்டது. ஆனால் எழுத ம்ம்ம்ம்ம் ...spell checking  கொஞ்சம் என்னை காத்துவருகிறது. மறந்தது spell check பண்ணாமல் மெயில் அனுப்பிவிட்டால் அதோ கதி தான். சில நேரம் அதுவும் என்னை காலை வாரி கழுத்தறுக்கிறது.

ஆங்கிலம் மட்டும்மில்லை தமிழும் எனக்கு இதே பிரச்சனைதான் 'ல' ள , 'ர' , ற , ன , ண  மாத்தி மாத்தி போட்டு " உன் தமிழில் கொள்ளிகட்டைய வைக்க " என்று திட்டு வாங்கினேன். " மாலை இட்ட மங்கை " என்று எழுதுவதற்கு            " மாலை இட்ட மாங்காய் " என்று எழுதி தொலைத்து பல நாள் கிண்டலுக்குள்ளானேன்.

ஆனால் தினமும் தமிழில் நல்ல கட்டுரைகள் , நாவல்கள் படித்துக்கொண்டே இருக்கிறேன். அவ்வபோது தொழில் சார்ந்து ஆங்கிலத்தில் படிக்கிறேன்.
மேடையில் தடையில்லாமல் தமிழில் பேச வருகிறது. தொழில் சார்ந்து ஆங்கிலத்தில் உரையாட முடிகிறது. ஆனால் எழுதும் போது சரியான எழுத்தை பயன் படுத்த மூளை  முட்டி முணங்குகிறது.

நம் மூளை  ஒரு வார்த்தையின் முதல் மற்றும் இறுதி எழுத்தை மட்டுமே படிக்கும். அதைகொண்டு அந்த வார்த்தையை அடையாளம் கண்டுவிடும்.
தொடர்ந்து படிப்பதனால் மட்டும் சரியான எழுத்துக்களோடு நம்மால் எழுத முடியாது. சிறு வயதிலிருந்தே பள்ளியில் அதற்கான பயிற்சி இருக்கவேண்டும். ஆழ்மனதில் துளி துளியாக படிந்து அது ஒரு அறிவாக வளர வேண்டும். அல்லது நாம் வளர்ந்த பின் ஒரு தனியான ஈடுப்பாட்டோடு அந்த பயிற்சியை எடுக்க வேண்டும். அப்போதுதான் எந்த தனிகவனமும்  இல்லாமல் எழுத்துப்பிழை இல்லாமல் சரளமாக எழுத முடியும். இன்றைய நகர மற்றும் சிறு நகர குழந்தைகளுக்கு இந்த அறிவு பள்ளிகளில் எளிமையாக கிடைக்கிறது.

தொழில் நுட்ப வளர்ச்சி  மனிதனின் சிறு சிறு அறிவு குறைகளை நிவர்த்தி செய்து கொண்டே இருக்கிறது. இப்போது voice to text converter சாப்ட்வேர்கள்  கிடைக்கிறது. இவை வளர்ச்சி அடைந்தால் இதை பற்றி அதிகம் யோசிக்கத்தேவை இல்லை. ஆனாலும் யாருக்கு என்ன எழுத வேண்டும் , எங்கு எப்படி எழுத வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
" kind request " என்பதற்கு பதில் " kind information " என்று போட்டால் Manager திட்டாமல் என்ன பண்ணுவார்.

இதோ நான் நூறாவது முறை உறுதி எடுக்கிறேன். ஆங்கிலம் பிழையில்லாமல் எழுத கற்றுக்கொள்வேன். என் மகனை இன்னும் இரண்டு மாதத்தில் LKG சேர்க்க இருக்கிறேன். அவனோடு சேர்ந்து படிக்க இருக்கிறேன். வாழ்க ஆங்கிலம் , வளர்க என் ஆங்கில அறிவு , வெற்றி வேல் , வீர வேல், வெற்றி வேல் , வீர வேல்.

வியாழன், மார்ச் 05, 2015

பொது புத்தி



கிறுக்கு புத்தி கேள்வி பட்டு இருக்கிறோம் அது என்ன  பொது புத்தி.

பசி வயிரின்னுடையது , தேடல் மனதின்னுடயது.

அடிப்படையான தினவாழ்விற்கு தேவையான தவகவல்களை நாம் சேகரித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் நம் மனம் அதோடு நின்று விடுவதில்லை. உலகத்தில் உள்ள அனைத்து பெரிய விசயங்களிலும் தெரிந்துகொள்ள ஆசை மட்டும் படுகிறது.

அந்த விசயங்களை எளிமை படுத்தி , பொதுமை படுத்தி, ஒரு பொது புத்தியாக நாம் மாற்றிக்கொள்கிறோம்.

எடுத்துக்காட்டாக அரசியல் என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டால் அது வன்முறையாளனுக்கு உரியது என்று எளிமை படுத்துகின்றோம், நல்லவர்கள் அதில் ஈடுபட முடியாது என்று பொதுமை படுத்துகின்றோம், அது ஒரு சாக்கடை என்று பொது புத்தியாக மாற்றிக்கொள்கிறோம்.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஊசி போடுபவன் நல்ல டாக்டர் , போடாதவன் டாக்டரே இல்லை.

இப்படி பொதுவான விசயங்களை பற்றி , மனிதர்களை பற்றி , நாடு நிலங்களை பற்றி நமக்குள் ஒரு பொது புத்தி இருக்கிறது.

சற்று சிந்தித்து பாருங்கள் மலையாளிகள் பற்றி நம் பொது புத்தி என்ன , பாகிஸ்தானிகளை பற்றிய நமது பொது புத்தி என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.

பொது புத்தியை இரண்டாக பிரித்துப்பார்க்கலாம். ஒன்று நாமே உருவாக்கிகொள்கிற பொது புத்திகள். அது அதிக அளவு நம்மை பாதிப்பது இல்லை. ஆனால் திட்டமிட்டு வியாபார நோக்கில் நமக்குள் ஏற்றப்படும் பொது புத்திகள் நமக்கும் சமூகத்திற்கும் ஆபத்தானவை.

சமிபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சியில் ஒரு குழந்தையிடம் உன் அம்மாவிடம் ஒரு வேண்டுகோள் வைக்க வேண்டும் என்றால் என்ன கேட்பாய் என்று அதை நடுத்துபவர் கேட்கிறார். அந்த குழந்தை சொல்கிறது தினமும் என் அம்மா இரவு தூங்கும் போது ஒரு ஊட்ட சத்து பானம் ( health drink ) கொடுப்பார்கள். அது எனக்கு பிடிக்கவே பிடிக்காது. குடிக்கவில்லை என்றால் அடிப்பார்கள். அதை எனக்கு கொடுக்க வேண்டாம் என சொல்லுங்கள் என்றது. நிகழ்ச்சி நடத்துனர் அம்மாவிடம் திரும்பி ஏன் என்று வினவ அதை குடித்தால் தான் நன்றாக வளருவாள் என்றார். யார் அதை சொன்னது என்றால் டிவியில் சொன்னார்கள் என்றார்.

இது தான் திட்டமிட்டு நம் மனதில் ஏற்றுகின்ற பொது புத்தி. இதை பார்க்கும் வளர்ச்சி குறைவான குழந்தை தாழ்வு மனப்பான்மை கொள்ளும்.

ஒரு குழந்தை நன்றாக வளர்ந்தால் மட்டுமே இந்த சமுகத்தில் வாழமுடியுமா ? உயரம் குறைவாக இருந்தால் சாதிக்க முடியாதா ?

இன்னொரு விளம்பரம் சில குழந்தைகள் பழங்களை தட்டிவிட்டு செல்கின்றன. ஒரு அம்மா வந்து இந்த காலத்தில் யார் பழங்களை சாப்பிடுகிறார்கள். எங்கள் பழச்சாறை கொடுங்கள் என்று குழந்தைகள் குடிப்பார்கள் என்கிறார்.

வியாபாரிகள் மட்டும் இல்லை பெரும் தலைவருகளும் அதையே தன் செய்கிறார்கள்.

இணையம் வழியாக கொஞ்ச கொஞ்சமாக தன்னை பற்றி மிகையான செய்திகளை பரப்பி ஒரு பொது பிம்பத்தை உருவாக்கி வெற்றி பெறுகின்றார்கள்.

எந்த ஒரு பெரிய விசயத்தையும் பொது புத்தியாக மாற்றி விட்டால் மேற்கொண்டு அதை பற்றி சிந்திக்க தேவை இல்லை என்று நாம் நினைக்கிறோம்.

ஒரு நாட்டை பற்றி ஒரு சாதியை பற்றி அண்டை மாநில மக்களை பற்றி ஒரு பொது புத்தி நம் மனதில் படிந்து இருக்கிறது.

சற்றேனும் விழிப்போம்

நன்றி வணக்கம்.

- கிராமத்தான்