"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், பிப்ரவரி 16, 2017

மாடு விடும் திருவிழா

ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தபோது தென் தமிழகத்தில் சில கிராமங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு தமிழ் நாடே எழவேண்டுமா என்ற  விவாதம் எழுத்தது.

எங்கள் ஊர் வடதமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே உள்ள மோட்டூர் கிராமம்.

எங்களூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கும் ஆனால் அதற்க்கு பெயர் "மாடுவிடும்  திருவிழா". ஜல்லிக்கட்டு மாட்டுக்கு "குமார் மாடு " என்று  பெயர். தெருவின் ஒருமுனையிலிருந்து மாடுகளை அவிழ்த்து விடுவார்கள். அது எவ்வளவு குறைந்த நேரத்தில் தெருவின் அடுத்த முனையை அடைகிறது என்பது தான் வெற்றிக்கான கணக்கு.

பொதுவாக மாட்டு பொங்கல் அன்று அந்த பஞ்சாயத்தை சேர்ந்த மாடுகாளை  மட்டும் கழுவி அலங்கரித்து தெருவில் விடுவார்கள். இளைஞசர்களும் பெரியவர்களும் தெருவின் இருபுறமும் நின்று மாட்டின் மீது கை போடுவார்கள் ( மாடு ஓடும்போது கையால் தட்டுவார்கள் ).

சிறுவர்கள் பெண்கள் அனைவரும் வீடுகளுக்கு மேல் அல்லது தட்டிகளுக்கு பின்னலிருந்து அதை உற்சாகமாக கண்டுகளிப்பார்கள்.

பெண்கள் சிறுமியரின் வண்ண உடைகள் தெருவின் இரு புறமும் கட்டிய தோரணம் போல இருக்கும்.

ஆண்கள் கபடி விளையாட்டில்  நிற்பதுபோல இருவர் மூவர் என கைகோர்த்து மாடுகளை எதிர்கொள்வர்.
"மகுடி வீட்டு மாடு ", செவிடி ஊட்டு மாடு என்று , சொட்டி காலன் மாடு என்று ஊரில் ஒவ்வொரு மாட்டுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். அந்த மாட்டுவைத்திருப்பவர்களுக்கு ஊரில் தனி மரியாதை உண்டு.
பெரும்பாலான  மாடுகள் அவிழ்த்தவுடன் மின்னல் வேகத்தில் தெருவை கடக்கும். அதன் மீது கை போடவே முடியாது. சில நன்றாக மொத்து வாங்கும். மிகச்சில மட்டும் நின்று விளையாடும். தெருவில் நிற்கும் அத்தனை பெரும் வீட்டு திண்ணைகளில் ஏறி ஒடுங்கிக்கொள்வர்.

இந்த நிகழ்வு முடிந்ததும் ஊரில் உள்ள அனைத்து பசுமாடுகளை ஓரிடத்தில் குழுமச் செய்வார்கள். மாடுகளுக்கு நோய் வாராமல் இருக்க பூசை செய்வார்கள் . சிறுவர்களுக்கு அங்கு அனுமதி இல்லை. பெரிய இலையில் சோறு கொட்டி குங்குமம் சேர்த்து அதை பிசைந்து படைப்பார்கள், பூசை முடிந்ததும் அதை ஊர் முழுக்க வீடுகளில் உள்ள மாட்டு கொட்டகைகளில் "பொலியோ பொலி" "பொலியோ பொலி" என்று கத்திக்கொண்டே வீசுவார்கள். அப்படி வீசுபவரின் எதிரே ஊர்மக்கள் யாரும் வரக்கூடாது.

அதற்க்கு மறுநாள் காணும் பொங்கல் சிறுவர்களுக்கானது. அன்று சிறுவர்கள் கன்று குட்டி விடுவார்கள். நான் சிறுவனாக இருந்த போது எங்கள் பசுமாடு வெள்ளை கன்று குட்டி ஈன்றது. அதை எப்படியாவது குமார் மாடாக ஆக்குவது தான் என் அப்போதைய லட்சியமாக இருந்தது.
அதன் சின்ன திமிலில் சாக்கு பை போட்டு பல்லால்  கடித்து இழுத்தால் அது பெரியதாக வளரும் என்று யாரோ சொன்னார்கள். தினமும் நான்கு முறை அதை செய்ய போக கன்றுக்குட்டி என்னை பார்த்தாலே மிரள ஆரமித்தது.

காணும் பொங்கல் அன்று கன்று குட்டியை குளிப்பாட்டி அதன் மொட்டு கொம்புகளில் வண்ணம் பூசி நான்கைந்து நண்பர்கள் கூடி நடுத்தெருவுக்கு அழைத்து சென்றோம். செல்லும் வழியெல்லாம் தகர டபாவில் நண்பர்கள் மேளம் அடித்துக்கொண்டே வந்தார்கள். பொங்கலுக்கு சேர்ந்த காசு பையில் இருந்தததால் துள்ளிக்கொண்டே வந்தோம். தெருவெல்லாம் சிறுவர்களின் கூட்டம் கன்று குட்டிகளின் கூட்டம். எங்கள் முறை வந்ததும் நாங்கள் அவிழ்த்துவிட்டோம். கன்று குட்டி ஓடவே இல்லை. கீழே குனிந்து மண்ணை மண்ணை முகர்ந்து பார்த்தது. மற்றவர்களுக்கும் கேலியாக இருந்தது. கூட வந்த நண்பர்களும் கழண்டு கொண்டனர். மறுபடியும் கன்று குட்டியை படாத பாடுபட்டு இழுத்து வந்து வீட்டில்கட்டுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

காணும் பொங்கல் முடிந்து அடுத்த மாதத்தில் பரிசு வைத்து மாடுகளை விடும் போட்டி நடக்கும். போட்டிக்கு வெளியூரிலிருந்து மாடுகள் வரும். நிகழ்ச்சி திருவிழா போல நடக்கும்.
ஒவ்வொரு மாட்டுக்கு ஐந்து சுற்றுகள் அனுமதி. மாடு தெருவை கடக்கும் வேகத்தை ஐந்து முறையும் கணக்கிட்டு  அதன் சராசரியை கணக்கிடுவார்கள். குறைந்த நேரத்தில் ஓடிய மாட்டுக்கு முதல் பரிசு.

பல வருடங்களுக்கு பிறகு " மாடுவிடும் திருவிழா " எங்களூரில் அறிவித்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

முதல் பரிசு 25001 ரூபாய்.

இது போன்ற விழாக்கள் தான் கிராம வாழ்வை உயிர்ப்போடு வைக்கிறது.

ஜல்லிக்கட்டுக்காக போராடிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.






 

புதன், பிப்ரவரி 15, 2017

சசிக்கலாவை ஏன் பிடிக்கவில்லை

சசிக்கலாவை ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்வி எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். பதில் தெரியவில்லை என்பது மட்டும்தான்.

ஆனால் கொடும் வெறுப்பு இருந்தது.

பின் நானே சிலகாரங்களை தொகுத்துக்கொண்டேன். அதில் மிக முக்கியமானது அவர்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைப்பது.

முன்பு அரசியல் என்பது அதில் கொஞ்சம் ஈடுபாடு உள்ளவர்கள் மட்டும் கவனிப்பது ஆனால் இன்று அப்படி அல்ல. ஆன்ராய்டு போன் வைத்திருப்பவர் அனைவரும் இந்த இந்த நாட்டில் நடப்பவற்றை கவனிக்கிறார்கள். தன் எதிர்ப்பை அனைவருக்கும் தெரியும்படி முன்வைக்கிறார்கள்.

பெண்களின் ஈடுபாடு இன்னும் அதிகம்.

சசிகலா  தன்னை ஜெ போல அலங்கரித்துக்கொண்டாலும் உடல்மொழியும்  வாய் மொழியும் உள்ளிருப்பதை அப்பட்டமாக காட்டியது.

பெண்கள் அதைத்தான் திரும்ப திருப்ப திட்டிக்கொண்டே இருந்தார்கள்.

சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு கேட்டு

காலையில் எனக்கிறைந்த கொண்டாட்டா மனநிலை வெகு நாட்களுக்கு பின் அனுபவித்தது.

எதோ ஒரு விடுதலையை உணருகிறேன்

கொண்டாடுவோம் 

வெள்ளை யானை - நாவல் - ஒலி புத்தகம்



திரு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய "வெள்ளை யானை" நாவல்

 ஒலி புத்தகம்

நண்பர்களே இது ஒரு அழகிய விருப்பமான உழைப்பு.

இந்த ஒலி புத்தகத்தை முடித்து பதிவேற்றும்போது அவ்வளவு மனநிறைவாக இருக்கிறது.

வெள்ளையானை நாவலை பற்றி நான் என் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்  http://giramathanonline.blogspot.com/2016/03/blog-post.html




PART 1



PART 2
  
PART 3

 

PART 4


PART 5


PART 6



PART 7

 

PART 8

 

PART 9
 

PART 10

PART 11


PART 12


PART13 



PART 14

 

திங்கள், பிப்ரவரி 06, 2017

அன்புள்ள மகளுக்கு


நீ படித்து முடித்தவுடன் உன் வேலைக்காக என் நண்பர்களை அணுகினேன். ஆனால் அவர்களின் நிலை உதவும் நிலையில் இல்லை. மேற்கொண்டு நானும் அதிக சிரத்தை எடுக்கவில்லை. அதற்காக மெல்லிய குற்றவுணர்வை உணர்கிறேன்.

ஆனால் உனக்கு வேலை கிடைத்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. என் வாழ்த்துக்கள்.

நான் இரண்டு விதமான மனிதர்களை பார்க்கிறேன். வேலை கிடைத்தவுடன் தன் தின வாழ்வை வேலைக்கார தேனீ போல மாற்றிக்கொள்பவர்கள்.

அது தேனை பூவிலிருந்து எடுத்து அடையில் சேர்த்துக்கொண்டே இருக்கும். அதற்காக கடுமையாக உழைக்கும். அதற்க்கு வேறு எதுவும் தெரியாது. அந்த தேனை கூட அது ருசிப்பதில்லை.

மக்களில் பெரும்பான்மையோர் இப்படித்தான்.
எழுவார்கள் தின்பார்கள் வேலைக்கு சென்று திரும்புவார்கள் தூங்குவார்கள்.

சமூகத்தின் பெரும் பகுதி இவர்கள்தான்.

இரண்டாவது வகை சமூகத்தில் சொற்பமானவர்கள். அன்றாட வாழ்வியல் நிகழ்விலிருந்து சற்று விலகி யோசிப்பவர்கள் . அவர்கள் கனவு காண்பவர்கள் .  தன்னை இலக்கியம் ,கலை , பயணங்கள், புத்தகங்கள் , இசை , ஆன்மிகம் ....ect , வழியாக தேடிக்கொண்டே இருப்பவர்கள். தேடலையே வாழ்க்கையாக கொண்டவர்கள். அவர்கள் படைப்பாளிகள். படைத்தளின் வழியாக தன்னை கண்டடைபவர்கள்.

தான் செய்யும் தொழிலையே முழுமையாக நேசித்து தன்னையும் தொழிலையும் புதுப்பித்துக்கொண்டே இருப்பவர்கள்.

முதல் வகை பெரும் மரம் என்றால் இரண்டாம் வகை அதில் பூக்கும் மலர்கள் அல்லது கனிகள்.

வாழ்வை ஒரு எளிய சுழற்சியாக மாற்றிக்கொண்டு தொடர்ந்து ஒரே பாதையில் ஓடிக்கொண்டு இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் சலிப்புறுகிறார்கள். ஏன் இந்த வாழ்க்கை என்று தளர்வார்கள்.

தினமும் புதியதாய் பிறப்பவர்கள் வாழ்வை தினமும் கொண்டாட பழகியவர்கள். பிறர் இவர்களை நகையாட கூடும். அதையும் கொண்டாடுபவர்கள் இவர்கள்.

"நீரில் மிதந்து வரும் நீர் குமிழிகள் என் பாதம் தொட்டு உடையும் போது அதனிடம் சொல்லவேண்டும் போல தோன்றும் நானும் உன்னை போல தான் என "

நீ  எழுதிய இந்த வரிகள் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. நீ வாழ்நாள் முழுக்க இரண்டாம் வகையில் இருக்க வாழ்வை தினம் தினம் கொண்டாட வாழ்த்துகள்.







அருவெறுப்பு

மலத்தில் அமர்ந்திருந்த ஒரு ஈ திடீர் என்று என்  வாயில் நுழைந்தது. அதை நான் மென்றும் விட்டிட்டேன்.

காலையிலிருந்து வாயை கழுவிக்கொண்டே  இருக்கிறேன். வாய் தன் இயல்புக்கு வந்தாலும் மனதில் அந்த அருவெறுப்பு போகவே இல்லை.

அது  ( வயதுக்கு கூட மரியாதை தர முடியாது ) அந்த இருக்கையில்  அமர்வது அவ்வளவு அருவெறுப்பாக இருக்கிறது.

வேலைக்காரி முதல்வராகிறார் என்கிறார்கள். தயவுசெய்து வீட்டில் வேலை செய்பவர்களை கேவலப்படுத்த வேண்டாம். வீட்டு வேலை செய்து உழைத்து தன் பிள்ளைகளை படிக்கவைத்து நல்லநிலைமைக்கு கொண்டுவரும் தாய்மார்கள்  இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு கூடிய கூட்டம் நீங்கள் நடத்தும் இந்த நாடகத்துக்கு எதிராக கூடிய கூட்டம் என்று உங்களுக்கு புரியவே இல்லையா ?

அது எந்த தொகுதியில் நின்றாலும் அந்த மக்களை காலை தொட்டு கொஞ்சுகிறோம் தயவு செய்து தர்மத்தை நிலைநாட்டுங்கள்