"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

புதன், ஏப்ரல் 30, 2014

கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சி என்னத்த கண்டேன்

கோபாலு : கல்யாண நாள் வருது என்ன ஸ்பெசல் ன்னே ?

நான் : ஒண்ணுமில்ல கோபாலு நமக்கு தினமும் ஸ்பெசல் தான் ...

கோபாலு : பொண்ணு பாக்க போனபோது அண்ணி முதல்ல உன்ன பாத்தப்ப உங்க  மனசுல என்னனே தோனுச்சி ?

நான் : அத ஏன்டா கேக்ர ... அண்டாவ எரிர அடுப்புல வச்சிட்டு கொஞ்ச நேரம் தண்ணி ஊத்தாம இருந்தா அண்டா என்ன பாடுபடும் அந்த மாதிரி இருந்தது என் மனசும் உடம்பும் ... அப்படி ஒரு பார்வ பாத்தாங்க உங்க அண்ணி

வீட்டுக்கு வந்து ஓரம்ப நாள் கழிச்சி அஞ்சி நிமிஷம் என் முஞ்சிய கண்ணாடியில பார்த்துட்டு இருந்தேன்.

நம்ம அன்னம்மா கிழவி தான் என்னை "கருப்பு அழகு" கருப்பு அழகுன்னு கொஞ்சிகிட்டே இருக்கும். அந்த ஒரு வார்த்தைக்காகவே பாக்கெட் மனி ஐம்பது பைசாவுக்கு அதுக்கு பொடி வாங்கி கொடுப்பேன். அந்த வார்த்தைய அப்படியே develop பண்ணி ரொம்ப நாளா பறந்துகிட்டு இருந்தேன். அந்த நெனப்போட செரக வெட்டி சூப்பு வெச்சி குடிச்சிட்டு ஏப்பம் விட்டது அந்த பார்வ ...

சரி மொத முறையா போன் பண்ணலாமுன்னு try பண்ணேன் , ரெண்டு மூனு வாட்டி பண்ணியும் போன் அவங்க எடுக்கல ...., தீடீர்ன்னு வைத்த கலக்கும்போது போக எடம் கெடைக்கலினா நமக்கு ஒரு பயமும் தவிப்பும் வரும்பாரு அந்த மாதிரி இருந்ததுடா கோபாலு ....

கோபாலு : அண்ணே உங்க அகத்தின் அழகு முகத்தில தெரிஞ்சி இருக்கணுமே 

நான் : அட போடா நம்ம அகம் எப்பவும் அழகாவா இருக்கு , கொஞ்ச நாள் கழித்து கொஞ்சம் கொஞ்சம் பேசி அப்டீ தேரி வந்தோம்.

அதுக்கப்புறம்  நாலு மாசம் உடம்ப கொறச்சி 92 kg ல இருந்து 82 kg வந்தேன்.

நாலு மாசம் கழிச்சி அவங்க என்ன மறுபடியும் பார்த்தாங்க .....

நீ என்னோட ஆண் என்று உரிமை கொண்டாடியது அந்த பார்வ ..

அப்ப என்னோட மனசுல ஒரு கர்வம் தோணுச்சிடா கோபாலு , அது நா சாகர வரைக்கும் இருக்கும்முடா

அதுக்கப்புறம் தான் எனக்கே என்ன புடிச்சது

கோபாலு : கல்யாணம் ஆனா  இந்த அஞ்சு வருஷத்துல முக்கியமான தருனங்கள சொல்லுங்கண்ணே 

நான் :  பொண்ணுகள பத்தி  பெருசா ஒண்ணும் நம்ம தெரிஞ்சிகிறது இல்லடா கோபாலு, வெளிய இருந்து பழகுனா கூட பெருசா ஒண்ணும் வெளிபடுத்திக்க மாட்டாங்க , இந்த சினிமாவ  பாத்து பொண்ணுகள பத்தி மிகையா ஒரு பிம்பத்த மனசுல ஏத்திக்கிட்டு அத அவங்க கிட்ட எதிர் பார்த்து  சண்ட போட வேண்டியது , அப்புறம் பெண் மனசு ஆழம் அது இதுன்னு பெனாத்த வேண்டியது.

மொத ரெண்டு வருஷம் ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சிக்கவே  சரியா போச்சு , எல்லார் மாதிரி நானும் அவங்கள அடிமையா வச்சுக்கணும் என்று ஆசைப்பட்டேன். அதுக்காக ஓவரா அவங்க மேல அன்பு காட்டறது இல்ல நா ஆம்பள , நா சம்பாதிறேன் என்று காலாவதி ஆகி போன மேட்டர வச்சி சண்ட போடுறது இப்படி லூசு தனமா பண்ணிக்கிட்டு இருந்தேன். தொடர்ந்து அஞ்சு நாள் கூட என்னோட பேசாம இருந்தாங்க  அப்பெல்லாம் என்ன பத்தி தான் நா நெறையா தெரிஞ்சிகிட்டேன்.

மூனாவது வருஷத்துல குட்டி பையன் உருவானா , அந்த ஒரு வருஷம் அவங்க பட்ட பாடு ஐயோ நாமெல்லாம் அதுக்கு முன்னாடி ஒன்னுமில்லடா கோபாலு, சும்மா அத பத்தி நம்ம ஆளுங்க பாட்டு எழுதுறானுங்க, கவித எழுதுராணுக .ஒன்னுத்துக்குள்ளேயும் அடங்காது அந்த வேதன..அந்த வலிக்கு முன்னாடி நம்ம மண்டியிட்டு தான் ஆகணும்

குட்டி பையன் பொறந்து கொஞ்ச நேரத்தில பிரசவ அறையில இருந்து அவங்க பேசினாங்க , எனக்கு பேச்சு வரல ஏதோ உளறுனே , ஆனா மனசில இருந்த மகிழ்வு எல்லா கட்டையும் அவிழ்த்துவிட்டு ஆதி மனிதனா மாறி நடு காட்டுல நெருப்ப மூட்டி பரவசமா ஆடனுன்னு தோனுச்சி.

அவனோட மொத Birthday க்கு ஒரு சின்ன function பண்ணினோம். நண்பர்கள் எல்லோரும் கலந்துக்கிட்டாங்க. எங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். எல்லோருமே சந்தோசமா இருந்தாங்க , ஒருவேள நண்பர்கள் மட்டுமே கலந்துகிட்டதால அந்த function அவ்வளவு சந்தோஷமா இருந்தது என்று நினைக்கிறேன். பையனுக்கு மொத Birthday, அவங்களுக்கும் அது  மறு ஜென்ம பிறந்த நாள். இதோ பையனுக்கு ரெண்டாவது  Birthday வருது, நானும் என் பையனும் வீட்டுல அட்டகாசம் பண்றோம். ரெண்டு பேரும் திட்டு வாங்குறோம் , கொட்டு வாங்குறோம், ரெண்டு பேருக்கும் அவங்க எல்லா வேலையும் செய்றாங்க. ரெண்டு பேரையும் அவங்க ஒன்னா பாத்துகிறாங்க.

கோபாலு: நம்ம ஒவ்வொருத்தரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பொண்ணு இருக்கா அத கொர சொல்லிகிட்டே , அது கரெக்ட் தானே

நான்: ஆமாண்டா கோபாலு.. நா சின்ன வயசா இருக்கும் போது எங்க அப்பா எங்க அம்மாவெ அப்படி கிண்டல் பண்ணுவாரு, திட்டுவாரு ஆனா அம்மா எந்த விதத்திலும் எங்க கிட்ட அப்பாவெ விட்டே குடுக்க மாட்டாங்க. நம்ம எது சொன்னாலும் கேட்டுகிற எது சொன்னாலும் தாங்கிக்கிற ஜீவன் நமக்கு கீழ இருந்தா நமக்கு ஒரு கெத்து வருமில்ல , அந்த நெனப்பு தான் எங்க அப்பாவுக்கும், நல்லா வெள்ள சட்ட வேட்டி கட்டி வண்டியில ஊர ஒரு ரவுண்டு வருவார், இப்பவும் அப்படிதான்.

ஒரு நாள் வண்டியிலே இருந்து கிழ விழுந்து மூஞ்சி கையெல்லாம் பேத்துக்கிட்டு வந்தாரு , எனக்கு அவர ரத்தத்தோட பார்த்தப்ப நடுங்கி போச்சி. அவரு மெல்ல வந்து திண்ணைல உக்காந்துக்கிட்டு "அம்மா எங்கடா குட்டி" என்னு கேட்டார் , நா அம்மாவே கூட்டி வந்து விட்டதும் அம்மா அலறி பக்கத்தில இருந்த சொந்த காரரை கூப்பிட்டு வண்டியில ஏத்தி hospital க்கு அனுப்பி வச்சாங்க. இப்ப நினைக்கும் போது அப்பா , அம்மாவ எங்கன்னு கேட்ட அந்த வார்த்தையில எந்த அதிகாரமும் இல்ல, ரொம்ப நிதானமா மெதுவா கேட்டார். கஷ்டம் வரும் போது நமக்கான ஜீவனை தேடும் குரல் அது. அந்த ஜீவன் இருக்கும் வரை அப்பா ஜாலியா இருப்பார் கெத்தா இருப்பார்.

ஆனா இப்ப நிலம மாறிபோச்சு. வீட்டுகார அம்மாவுக்கு என்ன பத்தி personal லாவும் தெரியும், பொது வெளியில நா என்ன சீன போட்டு  கெத்து காமிக்கரனும் தெரியும். அதனால நாம என்ன வெட்டி முறிச்சி சாதித்தாலும் அவங்க கரெக்ட்டா  நம்ம எட போடுவாங்க. நமக்கு கரெக்டான விமர்சகர் அவங்க தான். உன்ன ஓவரா புகழ்ந்தா அப்புறம் உன்னோட சீன் அவங்களால தாங்க முடியாது.

நெறைய பேரு நா பொண்டாட்டி புளைங்களுக்காக தான் நாயா உழைக்கிறேன்னு பெனாத்துறாங்க. ஆனா அவங்க கிட்ட ஒரு கோடி ரூபா கொடுத்து வெளியில எங்கும் போகாம வீட்ல இருன்னு சொன்னா  பத்து நாள்ல பைத்தியம் புடிச்சிடும். நம்ம வேல செய்றது மொதல்ல நமக்காக, சாதிகறதும் சம்பாதிக்கிறதும் நம்ம சந்தோஷத்துக்காக , இதுல பொண்டாட்டி கொர சொல்லகூடாது, பாராட்டனும், கொஞ்சனுன்னு நெனைக்கிறது ஓவருடா கோபாலு.

கோபாலு : சரி அதெல்லாம் விடுங்கண்ணே ஆதர்சன தம்பதியா வாழ Idea குடுங்கண்ணே 

நான்: டே கோபாலு அப்படியெல்லாம் யாரும் இருக்க முடியாதுடா. ஒன்னு அவங்க சொல்றத்துக்கெல்லாம் நீ மண்டைய மண்டைய ஆட்டிகிட்டு அடிமையா இருக்கணும் இல்ல அவங்க அப்படி இருக்கணும். அப்படி இருந்தா ஆதர்சன தம்பதியா வெளில தெரிவோம். அப்படி இருப்பது நெறைய பேருக்கு comfortable லா இருக்கு.

ஆனா அதுல எந்த சுவாரசியமும் இருக்காது. இந்த விஷயத்தில யாருக்கும் யாரும் ஐடியாவோ Adviceசோ கொடுக்க முடியாது. ஏன்னா நம்ம ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. மொதல்ல நம்ம பத்தி நம்ம தெரிஞ்சிக்கணும். அவங்கள பத்தி புரிஞ்சிக்கணும். அதுக்கு கொஞ்சமாவது முயற்சி அல்லது மெனகெடனும். காலையில எழுந்து சாப்பிட்டு வேலைக்கு போயிட்டு திரும்பி வந்து காபி குடிச்சிட்டு கால நீட்டி டிவி பார்த்துட்டு குப்புற படுத்து துங்குனா ஒன்னும் நடக்காது.

அவங்களுக்காக கொஞ்சமாவது நம்மள நம்ம மாத்திக்கணும், அவங்களும் நமக்காக அவங்கள கொஞ்சம் மாத்திக்கணும்.

அட ஒன்னும் வேலைக்கு ஆகல, ஒன்னும் புரியல, ஒன்னும் செட் ஆகலன்ன வுட்டு வேற வேலைய பாக்கறது தான் உத்தமம்.

சரி வா நாம டீ சாப்பிடுவோம்.



வியாழன், ஏப்ரல் 24, 2014

நண்பனின் மடி - தமிழ்செல்வனும் நானும்

சேலம் -நாமக்கல் சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு ரோட்டில் சேலம் polytechnic  உள்ளது. பசுமை செறிந்த இடம். அதை சுற்றி வெள்ளால கவுண்டர்கள் விவசாயம் செய்யும் விளைநிலங்கள். நான் அங்கு hostelலில் தங்கி படித்துக்கொண்டு இருந்தேன். Hostelலில் சேலத்தை சுற்றி உள்ள பகுதியான மேட்டூர், ஆத்தூர், தருமபுரி, கள்ளக்குருசி பகுதியிலிருந்து வந்து தங்கி படித்துக்கொண்டு இருந்தனர்.

உச்சி வெயில் தகிக்கும் நேரத்தில் அவன் என்னை இயல்பாக பார்த்து விட்டு கடந்து சென்றான். என்னை அறியாமல் ஒரு குறுபுன்னகையுடன் அவனை கடந்து சென்றேன். அந்த புன்னகை எனக்குள் ஏன் எழுந்தது என்று எனக்கு தெரிய வில்லை.

மறுமுறை காணும்போது அவனும் புன்னகை புரிந்து எந்த ஊர் என்றான். நான் ஊரை சொல்லி நீங்க என்றேன், நா கள்ளகுருச்சி என்றான்.

முதல் ஆண்டு முழுவதும் அவனை சரியாக கவனிக்கவில்லை. அவன் வேறு வகுப்பில் இருந்தான். இரண்டாம் ஆண்டு நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் இணைந்த போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

நீள்வட்ட முகம், ஒட்ட வைத்த கருவிழிகள், மாந்தளிர் நிறம், எளிமையாக தோள் மீது கை போட்டுக்கொள்ளும் அளவுக்கு உயரம், புன்னகைப்பது போல பல் வரிசை, எளிய சிநேகமான நடை அவன் என்னை ஒவொவொரு முறையும் புன்னகையோடு கடக்கும் போது இவை ஒவ்வொன்றாக மனதில் பதிந்துக்கொண்டே இருந்தது.

ஒரு விடுமுறை தினத்தில் அவன் துணிகளை துவைத்துக்கொண்டு இருந்தான். நான் துணிகளை ஊறவைத்துவிட்டு அவனிடம் பேசத்துவங்கினேன். நம்ம இன்ஸ்ட்ருமென்ட் department க்கு books இல்லன்னு சொல்றானுங்க எப்படி படிப்பது என்று துவங்கி, நீ வா போ என்று அந்த பேச்சு நீண்டது. துணிய ஊரவைக்கிரமொ இல்லையோ இந்த பொண்வண்டு சோப்ப முதல்ல ஊறவைக்கனும் என்று சிரித்தான். அவன் பேசிய கள்ளக்குருசி தமிழ் , வந்தானுவுவ போனானுவுவ என்று அழகி படத்தில் தங்கர் பச்சான் பேசுவது போல இருந்தது. அவன் பேச்சிலும் செயலிலும் வழக்கத்துக்கு மாறான ஒரு வேகம் இருந்தது. எல்லாம் முடிந்து சரி வா டீ குடிக்க போகலாம் என்று கிளம்பினோம்.

எந்த ஒரு சிறந்த நட்பும் மிக சாதாரணமாகவே துவங்குகிறது.ஒரு ஆன்மாவின் நிரப்ப பாடாத பகுதியை இன்னொரு ஆன்மா தன்னியல்பில் நிரப்பும் போது நட்பு நிகழ்கிறது. பெரும்பாலும் நம் மனம் அறியாமலேயே அது நடந்துவிடுகிறது .

மனம் எப்போதும்  வரவு செலவு கணக்கை பார்த்துக்கொண்டே இருக்கும். மனம் மட்டுமே  இணையும் நட்பில் ஒட்டுதல் எப்போதும் இருப்பதில்லை.

ஓரிரு வாரங்களில் அவன் தோள் மீது கை போட்டு நடக்க துவங்கினேன். எங்களுக்கு இடையான பேச்சு படிப்பு சினிமா பெண்கள் என்று நீண்டு நீண்டு என் உள்வட்டங்களை அவனும், அவன் உள்வட்டங்களை நானும் கடந்து சென்றோம். இறுதியில் அவன் குடும்பத்தை நானும், என் குடும்பத்தை அவனும் அறிந்துகொண்டோம்.

ஒருநாள் நான் என் அறையில் slapன் மீது ஏறி அங்கு இருந்த பேப்பர் புத்தகம் எல்லாம் கிளறிக்கொண்டு இருந்தேன். அவன் அறைனுள் வந்து என்ன தேடுற என்றான். இங்கு ஏற்கனவே தங்கி இருந்த சீனியர் ஏதாவது புத்தகம் விட்டுட்டு போயிருக்கானா என்று பாக்குறேன், அங்க ஒன்னும் கிடைக்காது நீ எறங்கி வா என்றான். கடைசியில் இரண்டு வண்ணத்திரை புத்தகம் கிடைத்தது அதிலும் நடுபக்கத்தை காணாம்.

எங்கள் இருவருக்கும் ஆங்கிலம் நாகில் tongue cleaner வைத்து சுரண்டினாலும் வாராது. நானும் அவனும் தமிழில் தான் polytechnic தேர்வுகளை எழுதினோம். எங்களுக்கு பாடம் எடுத்த அனைவரும் பெண்கள். எங்கள் HOD இளம் பெண், சொக்கி ததும்பும் விழிகள், அதில் கூரிய அலட்சிய பார்வை, தளர்ந்து சாய்ந்த நடை , ஆண்கள் எதிர்பார்க்கும் புதுமை பெண் , குட்டர் கவிதா என்று அனைவரும் கம்பீரமாக அழைத்து மகிழ்ந்தோம் . ஆனால் மற்றவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. அவர்களின் முக்கிய வேளை ஆங்கிலத்தில் இருக்கும் பாடத்தை தமிழில் எங்களுக்கு மொழியாக்கம் செய்து தருவது தான்.

நாங்கள் வகுப்பில் மற்றும் ஒரு நண்பருடன் இணைந்தோம். அவர் மூலமே சேலம் எங்களுக்கு பழக்கம் ஆனது. வருடம் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு தேர்வின் முன்மாதம் அனைத்து பாடங்களையும் வெறிகொண்டு மென்று புரை ஏறி, கண்கள் சிவந்து தேர்வெழுதி முதல் இரண்டு இடங்களை அவர்கள் இருவரும் எடுத்து விடுவார்கள். நான் ஐந்தாம் இடம் ஆறாம் இடம் என்று இருப்பேன்.

பெரும்பாலும் இரவில் சினிமாவுக்கு போவோம். விஜயை அனைவருக்கும் பிடிக்க துவங்கிய படம் பூவே உனக்காக. எங்கள் hostel லில் ஒரு குழு தொடர்ந்து 26 நாட்கள் அந்த படத்தின் இரவு காட்சியை பார்த்தது. நாங்கள் வெவ்வேறு தருணத்தில் ஆறு முறை பார்த்தோம். "உள்ளத்தை அள்ளித்தா" ரம்பா ரசிகர் மன்றம் 15 நாள் தொடர்ந்து அந்த படத்தை பார்த்தது. இளைய ராஜா அவர்கள் SPB, மனோ, சித்ரா, ஜானகி என்ற மூத்தவர்களை வைத்து எங்கள் காதல் உணர்வுகளோடும், கனவின் அதிர்வுகளோடும் விளையாடிக்கொண்டு இருந்தார். பின் இசையின் இளைய மகன் A.R.R   ஆட்சியில் அமர்ந்து எங்கள் காதலையும் கனவுகளையும் மீட்டெடுத்தார். இன்டெர் நெட், செல் போன் , CD இந்த மூன்று  ஆளுமைகளும் அப்போது எங்களுக்கு அறிமுகம் ஆகவில்லை. ஒரு கேசட் முழுவதும்  "எனை காணவில்லையே நேற்றோடு " பாடலை பதிவு செய்து பின்இரவு வரை கேட்டுக்கொண்டு இருந்தோம். DTS தியேட்டர்களில் அறிமுகம் ஆனது. சேலம்  KS தியேட்டரில் ரன்கிலா படம் பார்த்தோம். அதில் ஊர்மிள "தனுக தனுக " பாடலுக்கு ஆடியது எங்களுக்கு தலையில் இசைபித்தேறி ,இரண்டு நாள் உடலும் மனமும் ஆடிக்கொண்டு இருந்தது.


மாலையில் நானும் மற்ற நண்பரும் ஜிம்மில் கிடந்தோம். தமிழ்ச்செல்வன்  வாலிபால் வீரன். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து ரன்னிங் போவான். தினமும் மாலையில் பயிற்சி எடுப்பான். அவன் காற்றில் எழுந்து பந்தை அடிப்பது , வில் வளைந்து விசை எடுத்து அம்பில் செலுத்துவது போல  இருக்கும். அவன் உடலின் மேல் பரப்பு  இலகுவாக இருந்தாலும்  அவன் உடல் முழுவதும் விசை நிரம்பி இருந்தது.

ஒரு முறை அவன் வீட்டுக்கு நாங்கள் முவரும் சென்றிருந்தோம். திருவண்ணாமலை கள்ளக்குருசி சாலையில் ஒரு சிறிய ஊர் தேவபாண்டலம். மீனவர் தெருவில் நுழைந்து ஒரு சிறிய மச்சு வீட்டுக்கு போனோம். அம்மா எங்களை பார்த்ததும் என்னப்பா சிவா நல்லாஇருக்கியா என்று பேச ஆரம்பித்து விட்டார் . இவனுக்கு நான்கு தம்பிகள், இரண்டு அக்காதிருமணம் முடிந்திருந்தது. எல்லாமே தமிழில் துவங்கும் பெயர்கள். அப்பா அரசு விவசாய பண்ணையில் வேளை. முதல் தம்பி நல்ல உயரம் அழகு. கடைசி தம்பியை மடியில் தூக்கிவைத்துக்கொண்டு விளையாடினோம். இவர்கள் ஐவருமே படிப்பில் சுட்டிகள் விளையாட்டில் கில்லிகள். அவர்களை பார்த்த பின்பு தான் வறுமைக்கும் மகிழ்வுக்கும் தொடர்பே இல்லை என்று தெரிந்தது. அவனுங்க ஐந்து பேருமே ஒரு cricket டீம். ஐந்து பேருமே வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிடுகின்றனர். ஆச்சரியமாக இருந்தது.

ஹாஸ்டலில் இரவு உணவு முடித்துவிட்டு பின் புறம் கொட்டி வைத்திருந்த  மணலில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்போம். பெரும்பாலும் அது கனவுகளின் பரிமாற்றமாகவே இருக்கும். சிறிது நேரத்தில் அவன் அப்படியே காலை நீட்டி படுத்துக்கொள்வான். அவன் மடியில் நான் தலைவைத்து படுத்துக்கொள்வேன். அவன் பேசிக்கொண்டு இருப்பான் ஆனால் நான் வாழ்வை பற்றி கனவு கண்டுகொண்டு  இருப்பேன்.

வாழ்வை பற்றி கனவு காண்பதற்கு நண்பனின் மடியை தவிர மிகச்சிறந்த இடம் வேறெதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

இறுதி ஆண்டின் மத்தியில்  செமஸ்டர் விடுமுறை , ஒரு மாதம் கழித்து அவன் ஹாஸ்டலுக்கு திரும்பும் போது உடல் நலிந்திருந்தான். கண்ணக்கள் உள்ளடங்கி தோள்களில் எலும்பு தெரிய வித்தியாசமாக இருந்தான். உடம்பு சரி இல்லையா என்று கேட்டதற்கு வைற்று வலி சரியா போய்டும் என்றான்.

ஏதோ ஒரு வேதனையின் விதை அவனுள் வேர் விட்டிருந்தது. வேதனை மனிதனை அசைவில்லாதவனாக்கிவிடும். அவனது முகம் கனவுகள் இல்லாதவன் முகம் போல கலை இழந்து வாடியது.

அதிலிருந்து மீள அவனுக்கு மூன்று  மாதங்கள் ஆனது. பின் சகஜ நிலைக்கு வந்து மீண்டும் தமிழ் செல்வனானான்.

இறுதி தேர்வு முடித்துவிட்டு எந்த வித பிரிவுத்துயர்  இல்லாமல் பிரிந்தோம். ஏனெனில் எங்களுக்கு தெரியும் நாங்கள் மூவரும் அடிக்கடி சந்திப்போம் என்று.

நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். இன்னொரு நண்பர் பொறியியல் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தார், தமிழ் செல்வன் ஜல்லி மணல் என்று வியாபாரம் தொடக்கி இருந்தான். நாங்கள் மூவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். நாட்கள் சரிய சரிய சந்திப்பு குறைந்து கடிதங்கள் எழுதிக்கொண்டோம். அவன் கையெழுத்து ஓவொன்றும் சின்ன சின்ன குருவிகளை போல 'தா ' வின் மூக்கு நீண்டும் 'ழி ' கொம்பு ரெக்கை போல பறந்தும்  இருக்கும்.

ஒரு நாள் காலை எனக்கு ஒரு போன் வந்தது. அவன்  ஊரிலிருந்து ஒரு நபர் பேசினார். தமிழ் செல்வன் படுக்கையில் இருப்பதாகவும் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னான் நீங்கள் உடனே இங்கு வாருங்கள் என்று சொல்லி அவர் போனை வைத்தார். என்மனதில் யாரோ பாதரசத்தை ஊற்றுவது போல கனம் ஏறியது. என்னிடம் அப்போது பணம் இல்லை. இன்னொரு நண்பன் யோசிக்காமல் பணம் கொடுத்து ஒரு நண்பனையும் துணைக்கு அனுப்பினான்.

பஸ்சில் போகும் போது தொடர்பில்லா எண்ணங்கள் மனதை முறுக்கி பிழிந்தது. வலி தாளாமல் அழுகையின் நுனியை தொடும் நேரத்தில் என்னுடன்  வந்த  நண்பன் என்னை தேற்றி திசை திருப்பினான்.

அந்த ஊர் வந்ததும் இறங்கி தெருவில் நுழைந்ததுமே எனக்கு தெரிந்து விட்டது. சட்டென மனம் மறைந்து ஆன்மா மேலெழுந்து அலறியது. ஒரு பாயில் வெள்ளை துணியில் கழுத்துவரை மூடிய நிலையில் அவன் படுத்திருந்தான். அவன் மீது பூக்களும் ஈக்களும் மொய்த்துக்கொண்டு இருந்தது. தலைமுடி உதிர்ந்து, முகம் சதை இழந்து , அவனை உள்வாங்கி அடையாளப்படுத்திக்கொள்ளவே மனம் திணறியது.

ஓவென்று வாய்விட்டு அவன் கால்களை பிடித்துக்கொண்டு அழுதேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று எனக்கு  தெரியவில்லை. உணர்வு திரும்பி எழும் போது அவன் மடியில் நான் படுத்திருந்தேன்.

இப்பொழுது அந்த காட்சியை தள்ளி நின்று பார்க்கும்போது மனம்முடைந்து அழ நண்பனின் மடியை தவிர வேறெதுவும் சிறந்த இடம் இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

அவனருகில் இருந்த அம்மா என் தலையை தடவி சிவா அவன் சாமி கிட்ட போய்டான்பா என்று உதிரி உதிரியாக உடைந்த குரலில் சொல்லிக்கொண்டு இருந்தார். ஒரு நபர் வந்து என்னை அழைத்து சென்று ஒரு திண்ணையில் அமர செய்தார். அவனுக்கு கான்செர் காப்பாத்த முடியல , கடைசியில் படுக்கையில் அவன் உங்ககிட்ட ஏதோ பேச வேண்டும் என்று சொன்னான் என்றார். அவரை பார்க்காமலே விசும்பிக்கொண்டு இருந்தேன்.  காற்றில் கலக்காத என்னிடம் சொல்ல துடித்த அந்த வார்த்தைகள் என்னவேன்று இன்று வரை உகிக்க முடியவில்லை.

சேலம் நண்பனும் வந்து சேர்ந்தான். அவனும் அழுது துடித்தான். இருவரும் அவனை அடக்கம் செய்யும் வரை இருந்துவிட்டு திரும்பினோம்.

அந்த கனம்   மனதில் வடிந்து வடுவாக மாறுவதற்கு  வெகு நாட்கள் ஆனது.

கடவுள் வாழ்வதற்கு எனக்கு கொடுத்த சிறந்த பரிசு அல்லது சொத்து நண்பர்களின் நினைவுகள்  மட்டுமே அது எனக்கே எனக்கானது என் உடல் போல என் உயிர் போல.


திங்கள், ஏப்ரல் 07, 2014

எதிர் வினை

kaka thopu vantha kidaikuma illa namma oru ambur leather factory thantha madiri selfish irutnhudu ippo thanjavur dmk pota methane MOU kudukalama? where is nature I think you are a writer publish what you want for your son not what you had ....i will be standing next to you dont worry

வணக்கம் பிரபா , நல்லா இருக்கியா ?

இந்த கமெண்ட் என்னை யோசிக்க வைக்கிறது. என்னை பொறுத்த வரை சமுக அக்கறை உள்ள மனிதர்கள் இரண்டு வகை. 

முதல் வகை 

 நேரடியா களத்தில இறங்கி போராடுபவர்கள். இதில் அக விருப்பம், ஆர்வம் இரண்டும் முக்கியம். இந்த இரண்டும் ஒருவருக்கு சிறு வயது முதலே இயல்பாக இருக்கலாம்,  சிறந்த வழிகாட்டி அல்லது ஆசிரியர் மூலம் உருவாகி இருக்கலாம், ஒரு நல்ல புத்தகங்கள் மூலம்உருவாகி இருக்கலாம், வாழ்வில் நடந்த துர்சம்பவம் அல்லது  நல்ல நிகழ்வின் மூலம் உருவாகலாம். 

அக விருப்பமும், ஆர்வமும் ஒருவனை உந்தி தள்ளுகிறது. அதுவே அவனை போராட வைக்கிறது, சமூக அவலங்களை எழுத வைக்கிறது, சமூக அவலங்களை எதிர்த்து போராட வைக்கிறது. 

ஆனால் அக விருப்பம் இல்லாமல் ஏதோ ஒரு புத்தகத்தை பார்த்துவிட்டு, மேடை பேச்சுகளை கேட்டுவிட்டு, டீவியில் பிளாஷ் நியூஸ் பார்த்துவிட்டு உணர்சிகள் மேல் எழும்பி சேவையில் ஈடுபடும் நபர் விரைவில் நீர்த்து போய்விடுவார். ஒரு கட்டத்தில் தன் சொந்த விருப்பங்களையும், நலனையும் சேவை பாதிக்கும் போது சேவையை விடுத்து அவர் தன் அன்றாட வேலைக்கு திரும்பி விடக்கூடும்.

இரண்டாம் வகை 

மனிதனின் உண்ணுணர்வுகளை பேசுபவர்கள். இரண்டு மனிதர்குள் நடக்கும் உணர்வு வெளிப்பாடு அல்லது தனி மனிதனுக்கும் சமூகத்திற்குமான தொடர்பை பற்றி பேசுபவர்கள். எழுத்தாளர்களாக, கவிஞ்சர்களாக, கலை துறையில், இசைத்துறையில் நான் நிறைய மனிதர்களை அறிந்திருக்கிறேன்.

ஒரு சிறுகதையோ, கவிதையோ, நாவலோ எந்த சமூக கருத்தயும் நேரடியாக முன்வைப்பது இல்லை. படிப்பவரின் அகத்தைக்கொண்டு அவரே ஒரு வாழ்வியல் கருத்தை உருவாக்கிக்கொள்கிறார். அந்த கருத்து மெதுவாக அவரை சிந்திக்க வைக்கிறது. தனிப்பட்ட மனித மனதில் மகிழ்வை உண்டாக்குகிறது. 

இதுவே அவர்கள் சமுகத்திற்கு செய்யும் பணி.

முதல் வகை வேறு தளம், இரண்டாம் வகை வேறு தளம்.

ஆனால் என்னை பொருத்தவரை இந்த இரண்டு வகை மனிதர்களும் சமுகத்திற்கு தேவை.

நான் இரண்டாம் தளத்தில் இருக்கிறேன். சின்ன சின்ன  மனித உணர்வுகளை பதிவு செய்யவே எனக்கு விருப்பம். நமக்குள் இருக்கும் பொதுவான கருத்துகளை, பொது புத்தியை கேள்வி கேட்கவே விளைகிறேன்.

நீ நாட்டுக்காக என்ன செய்தாய் ?, இதுவரை யாருக்காவது உதவி இருக்கிறாயா ? சமுக பிரச்சனைகளில் போராடி இருக்கிறாயா ? அல்லது அதை பற்றி எழுதி இருக்கிறாயா என்று யாராவது என்னை  கேட்டால் எனக்கு குற்ற உணர்வே எழுகிறது.

எனக்கு இன்னும் அதில் ஆர்வம் வரவில்லை அது தான் உண்மை.


                                                                                                                                         -நன்றி 

ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

நீச்சல் குளமும் மீன் குழம்பும்

நீச்சல் குளமும் மீன் குழம்பும்

நேற்று இரவு 8 மணி இருக்கும், ஏதோ ஒரு தேவை  இல்லா எண்ணம் எழுந்து என்னை அழைகளித்தது. ஒற்றை ஈ நம்மை சுற்றி சுற்றி வந்து எரிச்சல்லூட்டுவது போல .

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தேன். தீடீரென அருகில் உள்ள நீச்சல் குளத்துக்கு போகலாம் என ஒரு எண்ணம் வந்தது.

வண்டி எடுக்க வெளியில் வந்தால் வருடும் மென்குளிரில் உடல் சிலிர்த்தது.
குளிர் தேவதை ஒருபிடி குளிரை எடுத்து காற்றில் கலந்துவிட்டிருந்தாள்.

'அந்த  குளிரில் நீச்சல் குளம் மூடி இருக்கும் பாஸ்ச'  என்று மனதின் உள்ளிருந்து ஒருவன் குரல் கொடுத்தான்.

வண்டியை எழுப்பி மெதுவாக சாலையில் முன்னகர்ந்தேன்.

சாலை முழுவதும் நியான் விளக்கின் ஒளி வழிந்தோடியது. மஞ்சள் நிற செயற்கை கானல் நீர் போல

மனம் கொஞ்சம் அமைதியானது. சாலை ஓர  கடைகள் வாங்கும் ஆட்கள் யாரும் இல்லாமல் செயற்கையாக சிரித்துக்கொண்டு இருந்தது.

கொஞ்ச தூரத்தில் நீச்சல் குளம் இருக்கும் இடம் வந்தது. உள்ளே ஒரு கேரளா சேட்டா  லேப்டாப்பில் படம் பார்த்த்துக்கொண்டு இருந்தார். அவரை பார்த்தவுடன் சந்தோஷமாக இருந்தது. அவர் இயல்பாக என்ன என்றார்.

இங்க என்ன பல்லு புடுங்கவா வருவாங்க ?  என்று மனதில் நினைத்துக்கொண்டாளும் குளிக்கனும் சேட்டா என்றேன் பவ்வியமாக

அவர் என் பவ்வியத்தை பார்த்து எழுந்து லேப்டாப்பை கிழே வைத்துவிட்டு , தண்ணீர் ரொம்ப கூலாக இருக்கு என்றார்.

பரவயில்லை என்று காசை கொடுத்துவிட்டு உள்ளே சென்றேன்.

உள்ளே யாரும் இல்லை. நீர் மட்டும் தியானத்தில் மூழ்கி இருந்தது. இந்த தண்ணீர் முழுவதும் உனக்காக என்றது மனம்.

ஊஞ்சலில் அமர்ந்து எம்பி எழும் சிறுமி போல எம்பி நீரினில் குதித்தேன்.

உடல் நீரை தொட்ட தருணம் மின்னல் போல் ஒரு உணர்வெழுச்சி எழுந்து அடங்கியது. தண்ணீர் தண்ணிருக்குள்ளே விலகி என்னை உள் வாங்கியது. அதன்  குளிர்ச்சி மீன் குஞ்சுகள் கடிப்பது இருந்தது.

யாரும் இல்லா நீர் குளம், நான் மட்டும் தண்ணீரோடு , ஏதோ ஒரு பயம் என்னோடு நீந்திக்கொண்டே  இருந்தது. கிராமத்தான் என்றாலும் நீச்சல் முழுமையாக தெரியாது. என்னை காத்துக்கொள்ளும் அளவுக்கு தெரியும்.

தண்ணீரோடும், தண்ணிரிலும்  விளையாடுவது எவ்வளவு மகிழ்வான தருணம். ஒரு சிறுவன் போல குதித்தும் நீந்தியும், கத்திக்கொண்டும் விளையாடிக்கொண்டு இருந்தேன்.

எப்போதும் காற்று நம்மை சூழ்ந்து இருக்கும். ஒரு மாறுதலுக்காக நீர் நம்மை சூழும் போது ஏதேதோ உணர்வுகளை எழுப்பி விடுகின்றது, ஒரு அழகான பெண் நம்மிடம் வந்து பேசும் போது எழும் உணர்வுகளை போல.

கொஞ்ச நேரத்தில் கலைத்துவிட்டது. கரையில் சம்மணம் இட்டு அமர்ந்துகொண்டேன். மனமும் உடலும் நெகிழ்வாக இருந்தது. இது கூட ஒரு வகை தியானமோ என்று எண்ணிக்கொண்டேன்.

நம்ம சேட்டா வந்துவிட்டார். மூட போவதாக சொன்னார். தலையை துவட்டிக்கொண்டு உடை மாறிக்கொண்டேன். வெளியில் வந்து சிறிது நேரம் வண்டியில் அமர்ந்து இருந்தேன். களைப்பு மெல்ல வடிய துவங்கியது.

சிறு வயதில் ஊரில் ஏரிக்கு செல்வோம். நீர் வடியும் தருவாயில் ஆங்காங்கே தண்ணிர் தேங்கி நிற்கும். அது குட்டை என்று அழைப்போம் . ஐந்து பேர் சேர்ந்து தேங்கிய தண்ணிரை வாரி தரையில் இறைப்போம்.  முழுமையாக இறைத்த பின்னர் அதிலிருந்த மீன்கள் துள்ள துவங்கும். அதை அப்படியே வாரி கூடையில் போட்டுக்கொள்வோம்.

ஏதேதோ எண்ணங்கள் எழுந்து அடங்கிய பின் பசி எழுந்தது.

அருகில் ஹோட்டல் தஞ்சை இருந்தது. இது தமிழர்களால் நடத்தப்படும் சிறிய ஹோட்டல். இங்கு ஒரு பையன் இருக்கிறான் , அவன் முகம் எப்போதும் சிரிப்பால் நிரம்பி இருக்கும். அவன் அருகில் வந்ததும் மீன் கறி இருக்கா என்றேன். அவன் முதலில் இல்லை என்றபின் பொறுங்கள் என்று உள்ளே போனான். அங்கு மாஸ்டரிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தான். அப்போதே எனக்கு தெரிந்தது  அவன் மத்திய குழம்பை ரெடி செய்கிறான் என்று.

சிறிது நேரம் கழித்து சூடான பொராட்டாவும் சிறுக வெதுவெதுப்பாக்கிய மீன் குழம்பும் எடுத்துவந்து வைத்தான். பொராட்டா மிருதுவாக கையில் எடுத்தால் உதிர்ந்து விடும் போல் இருந்தது. அதன் மேல் படர்ந்திருந்த மொருமொருப்பு என் நா அடியில் உமிழ் ஊர செய்தது. வெறுமனே கொஞ்சம் எடுத்து சுவைத்துப்பார்த்தேன்.

மாஸ்டர் குண்டானை காலி செய்ய நினைத்திருப்பார் போல, நிரைய குழம்பும் அதில் ஒரு மத்தி மீனும் வைத்திருந்தார். மீன் ; குழம்பில் ஊறி சற்று கனத்திருந்து. செந்நிற குழம்பில் வெண்ணிற எண்ணை துளிகள் மிதந்து நீந்தியது. வயிறில் பசி நெளிய மனதில் சுவை விரிய நாவில் நீர் ஊர ஒவ்வொரு வாயாக, பள்ளிவிழாவில் கொடுத்த ரவா லட்டை கிராமசிறுவன் கொஞ்ச கொஞ்சமாக ரசித்து உண்பது போல உண்டு முடித்தேன்.

அறைக்கு வர இரவு பத்து மணி ஆனது. மனது  மகிழ்வோடு கை கோர்த்து விளையாடிக்கொண்டு இருந்தது. கொஞ்சம் மெனகெட்டால் போதும் மகிழ்வை நமக்குள் நிரப்பிக்கொள்ளலாம் என தோன்றியது.

நான் எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பட்டியலிட முயன்றேன். இனியாளின் கரம் பற்றும் போது, பையனோடு விளையாடும்  போது, பாட்டு பாடும் போது, படிக்கும் போது, சாப்பிடும் போது, தனியாக ஊர் சுற்றும் போது, நபர்களோடு இருக்கும் போது , அட இவ்வளவு தானா ......இந்த பட்டியலை இன்னும் கொஞ்சம் நீட்டலாம் என தோன்றியது.