"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, ஜூலை 24, 2016

"மத்துறு தயிர் "



திரு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய " அறம் "  சிறுகதை தொகுப்பிலிருந்து

 "மத்துறு தயிர் "

வாசிப்பது - கிராமத்தான் 

வெள்ளி, ஜூலை 22, 2016

நீ இல்லாத நாட்களில்


நடு இரவு தாண்டியும் தூக்கம் வரவில்லை

மணமகன் அறையிலிருந்து வெளியே வந்தேன். நாட்டியம் முடித்து அணிகலன் கலைந்து அமர்ந்திருக்கும் மங்கை போல இருந்தது மண்டபம்.

என்னை கடந்து சென்ற தொல் தூரத்து அக்கா ஒருவர் என்ன தம்பி தூங்களையா என்று கேட்டு விட்டு நடந்தார்.

நான் மறுபடியும் அறைக்குள் நுழைந்தேன். லட்டு வாசனை, மூலையில் குவிந்திருக்கும் ரோஜா மாலையின் வாசனை களைத்து குவிக்கப்படட புடவைகளின் வாசனை அங்கு உறங்கிக்கொண்டு இருந்த சொந்தங்களின் வியர்வை நெடி அத்தனையும் நாசியில் ஏறி மூளையை தொட்டது.

அங்கும் இங்கும் தாவி கட்டிலை அடைந்து படுத்துக்கொண்டேன். அந்த கட்டிலில் நான்கு ஐந்து குழந்தைகள் படுத்திருந்தான. அருகிலிருந்த குழந்தை பட்டு பாவாடை சட்டை அணிந்து கண்களில் தீட்டிய மை கலந்து கொழுத்த கரிய கைகளில் மாட்டியிருந்த சிவப்பு வளையல்கள் சரிந்து கிடைக்க குட்டி அம்மன் போல் தூங்கிக்கொண்டு இருந்தது.

வாழ்வின் முக்கியமான நிகழ்வு சாதாரணமாக என்னை கடந்து போவதாக எனக்கு தோன்றியது. அந்த நினைப்பே மனதில் வெறுமையை கூட்டியது.

உன்னிடமிருந்து ஏதாவது குறுந்செய்தி வந்திருக்கிறதா என்று பார்க்க செல்பேசியை எடுத்தேன், திடீரென அழைப்பு வந்தது.

என்ன தூக்கம் வரலையா ......என்றாய்

கவலை படாத "நாளையிலிருந்து நா உன் கூட இருப்பேன்"   என்றாய் 

அப்போது அந்த வார்த்தை எனக்கு சாதாரணமாக இருந்தது

நீயும் சாதாரணமாக தான்  சொல்லியிருப்பாய்

வெகு நாட்களுக்குப்பின் அந்த வார்த்தைகள் இன்று நினைவிலிருந்து இயல்பாக எழுந்து வந்தன ..

கடந்த ஏழு வருடங்களின் முக்கியமான தருணங்களை அந்த வார்த்தைகள் தொட்டு தொட்டு சென்று கொண்டே இருக்கின்றன.

என் காத்திருப்பின் கணங்களை கனமாக்கி மனதை தவிப்பால் நிறப்புகின்றன.

வியாழன், ஜூலை 21, 2016

பியூஸ் மனுஷ்


திரு . பியூஸ் மனுஷ் பிணையில் வெளியே வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த பத்து நாட்களாக  அவர் கைது நிகழ்வு தான் மனதில் அலைக்கழிப்பாக  இருந்தது.

சமூகத்தின் மீது கவனம் கொண்ட பெரும்பாலானவர்கள் கைதை  பற்றி பதிவுகள் இட்டு இந்த கைது நிகழ்வை கண்டித்தது பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

இந்த கைது நிகழ்வாள் ஒரு நல்லதும் நிகழ்ந்திருக்கிறது. சேலத்தில் சிலருக்கு மட்டுமே தெரிந்த மனுஷ்  தமிழகத்தில் இன்று பரவலாக்கப்பட்டுள்ளார்.

அறத்தின் முகத்தை பலர் முதல் முறையாக நேரிலே பார்த்திருப்பார்கள்.

ஆனால் அந்த முகம் அழுவதை இந்த வீடியோ பதிவில் பார்க்கும் போது மனம் வேதனை அடைகின்றது.

அவர் மனமும் உடலும் பெரும் பாதிப்பு அடைந்திருக்கும். அதிலிருந்து அவர் மீண்டு வர வாழ்த்துகிறேன்.

மீண்டும் அறம் வெல்லும் என்றும் அதுவே வெல்லும்.

வியாழன், ஜூலை 14, 2016

வெக்கை - நாவல்






திரு எழுத்தாளர் பூமணி அவர்கள் எழுதிய நாவல் "வெக்கை".

பதின் வயது சிறுவன் சிதம்பரம் தன் அண்ணனை கொன்றவனை பழி கொலை செய்கிறான்.  அதை தொடர்ந்து அவனும் அவன் தந்தையும் எட்டு நாட்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

என் பார்வையில் "வெக்கை" மண்ணை  பற்றிய கதை. கரிசல் மண்ணின் கதை. அந்த மண் உருவாக்கும் உயிர்கள் பற்றிய கதை.

அந்த உயிர்களின் தன்மை பற்றி விவரிப்பதன் வழியே அந்த மண்ணின் தன்மை பற்றி நாவல் நமக்கு விவரிக்கிறது.

அந்த மண்ணின் நீட்சி தான் அந்த உயிர்கள்.

கொலை நடந்த பின் தந்தையும் மகனும் சுற்றி அலையும் மலை, விவசாய நிலங்கள் , கம்மாய் , சுடுகாடு , கோவில் அத்தனை இடங்களின் நுட்ப்பமான விவரிப்பின் மூலம் நம்மையும் அந்த மண்ணில் சுற்றி அலையவைக்கிறது நாவல். அவர்களுக்கு நா வறண்டு தாகமெடுக்கும் போது நமக்கும் தாகமெடுக்கிறது.

இந்த நாவலின் இன்னொரு அழகு உறவுகளுக்கு இடையே உள்ள நுட்ப்பமான பிணைப்பு.

தன் மூத்த மகனை கொன்றவனை பழி தீர்க்க தந்தை வெகு நாட்கள் காத்திருந்து முடியாமல் மருகுகிறார். அதை தன் இளைய மகன் நிகழ்த்திவிட  அவன் மேல் மெல்லிய பொறாமையும் காழ்ப்பும் ஏற்படுகிறது. அதை வெளிப்படுத்தாமல் சரியான சொல்லெடுத்து அவனோடு உரையாடுகிறார். அதே நேரத்தில் அவனை நினைத்து பெருமையும்  கொள்கிறார். அவனை அந்த இக்கட்டிலிருந்து விடுவிக்க அலைந்து திரிகிறார்.

அவன் தாய்  வழி சித்தி மற்றும் மாமா அத்தை உறவுகளுக்கும் அவனுக்கும்  இடையேயான  அன்பும் உரிமையும் பற்றிய சித்தரிப்பு அழகு.

ஒருபுறம் மண்ணையும் உறவுகளையும் பேசும் நாவல் மறுபுறம் சமூக ஏற்றத்தாழ்வு நீதி முறைகள் எது அறம் என்பதை பற்றியும் விவாதிக்கிறது.

 காவல்துறை , நீதிமன்றம் , அரசு பற்றிய எளிய மக்களின் அவதானிப்புக்களையும் அலசுகிறது.

நான் படித்த சிறந்த நாவல்களில் வெக்கையும் ஒன்று 

தமிழகத்தின் வடகோடி கிராமத்தில் பிறந்த நான் மொழியின் மூலம் தென்பகுதியில் உள்ள கரிசல் மண்ணை தொட்டு உணர்ந்தேன்.

நாவல் படைப்பாசிரியருக்கு நன்றி.



சனி, ஜூலை 09, 2016

" தாயார் பாதம் "

திரு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய அறம் சிறுகதை தொகுப்பிலிருந்து " தாயார் பாதம் "

வாசிப்பது - கிராமத்தான்


வியாழன், ஜூலை 07, 2016

நீ இல்லாத நாட்களில்


படுக்கையில் நானும் தனிமையும் படுத்திருந்தோம்

நிசப்தம்

அடுமனையிலிருந்து " நறுக் நறுக் " என்று சப்தம் எழுந்தது.

போர்வையை விளக்கி அங்கு எட்டி பார்த்தேன்

ஒரு சுண்டெலி

முதல் முறையாக நம் வீட்டில்

சிதறிய வேர்க்கடலையை கொரித்துக்கொண்டு இருந்தது

நர நரவென்று ஏறியது கோவம்

கையில் கிடைத்த எவர்சில்வர் கோப்பையை

அதனை நோக்கி வீசி எறிந்தேன்

கண் இமைக்கும் இடைவெளியில்

சாளரம் வழியே வெளியே குதித்தது ஓடிவிட்டது 

விளக்குகளை அணைத்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டேன்

சற்று நேரத்தில் சர சரப்பு ஒலி

காலில் ஏதோ பட்டு விதிர்த்து எழுந்தமர்ந்தேன்

மூன்று பிஞ்சு முற்களின் தொடுகை

வாலின் மென்மயிர் வருடல்

மெல் அதிர்வு அலை ஒன்று உடல் முழுவதும் எழுந்து அடங்கியது

வாழ்வில் முதல் முறையாக உடல் உணர்ந்த புது தொடுகை

வெகுநேரம் வெறுமனே அமர்ந்திருந்தேன்

பின் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டேன்

மனம் அந்த எலியை கொல் கொல் என்று அழற்றியது

அதை எப்படி கொள்வது என்றே வெகுநேரம் யோசித்து

புரண்டு கொண்டு இருந்தேன்

பின் கனவில் ஒரு எலிப்பொறியோடு ஒரு காய்ந்த புல்வெளியில்
முடிவே இல்லாமல் நடந்துகொண்டு இருந்தேன்

 மறுநாள் விழித்தெழுந்த போது முன் மதியம் ஆகியிருந்தது

சன்னலை திறந்ததும் புழுதியும் வெம்மையும் கலந்த காற்று முகத்தில்  அறைந்தது

ஆளில்லா சாலையில் அனல் எழுந்தாடிக்கொண்டு இருந்தது.

அந்த எலி என்றது மனம்

அந்த விழி மணிகள்

சிறு ஓசைக்கும் அசையும் மென்காதுகள்

எந்த நேரத்திலும் ஓடத்துடிக்கும் அதன் பிஞ்சு கால்கள்

சிரிப்பை மூட்டும் அதன் வால்

முகர்ந்து முகர்ந்து முன்னகரும் மூக்குக்கு

அந்த எலியை நினைத்த போது எனக்கு சிரிப்பு வந்தது

ஏன் ஒரு உயிரை கொள்ளவேண்டும் என்று

அவ்வளவு துடித்தது என் மனம்

கொல் கொல் ஏன் வெறி கொண்டு ஆடியது

யோசனையில் வெகு நேரம் சன்னலின் அருகே நின்று கொண்டு இருந்தேன் 

இரவு அந்த எலி  வரவேண்டும் என்று மனம் ஏங்கியது

வந்தால் அதனோடு நான் பழக முடியுமா என்று யோசித்தேன்

சமையல் அறையில் சென்று கடலையை தரைமுழுவதும் கொட்டி வைத்தேன்

ஆனால் அது திரும்பி வரவே இல்லை.