"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

ஒரு ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் - 1

அணங்காநல்லூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (வேலூர் மாவட்டம் ).அணங்காநல்லூர், மோட்டூர், கார்னாம்பட்டி, வாத்தியார்பட்டி, பட்டுவாம்பட்டி, ஏரிக்கரை என சுற்றி உள்ள கிராம பிள்ளைகளுக்கு ஒரே பள்ளிக்கூடம்.

என் பாட்டி தான் என்னை பள்ளியில் சேர்த்தாங்க . நுழைவு தேர்வு இல்லை, அப்பா அம்மா படித்திருக்க தேவை இல்லை, ஏங் பாட்டிகூட படித்திருக்க தேவை இல்லை , நன்கொடை ( கொடையே நல்லது நன்கொடை நல்லது அல்ல ) தேவை இல்லை, சிபாரிசு தேவை இல்லை ஆனா நீங்க ஒன்னாவுதுல சேரத்துக்கு ஒரே ஒரு தகுதி வேணும், உங்க வலது கைய அப்படியே உயர்த்தி தலைமேல மடக்கி இடது காத தொடணும் அவுளவுதான்.

தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் நம்ம பக்கத்து ஊர்காரர் , அதனால சுற்று வட்டாரத்தில் அனைவரையும் தெரியும். அப்பா பேர் சொன்னதும் சேர்த்துக்கொண்டார்.

80பதுகளில் ரேடியோ தான் உலக தொடர்பு சாதனம். காலை 7.15க்கு செய்திகள் அதைதொடர்ந்து நிகழ்ச்சி நிரல், 7.40க்கு இன்று ஒரு தகவல் , தென்கட்சி  சுவாமிநாதன் தகவலை சொல்லுவார். நெருக்கமான மொழி நடையில் சிறிய கதையோடு அவர் சொன்ன தகவல்கள் இன்றும் வாழ்வோடு பயணித்து வழிகாட்டுகிறது. 7.45க்கு தமிழ் பாடல்கள் அதை தொடர்ந்து  8 மணிக்கு ஒரு இசை வரும் , அதுவே ம்ம்ம் டைம் ஆச்சு school க்கு ஓடு என சொல்வது போல இருக்கும் , அதற்குள் நானும் செங்கல் போடி அல்லது கரிதூள் அல்லது கோபால் பல்பொடியில் பல்விளக்கி, பம்பு செட்டில் குளித்து, பழயதை தின்று ஓடுவதற்கு தயாராகவே இருப்பேன். ஒரு பை அதில் பலகை மற்றும் பல்பம் போட்டு வைக்கும் டப்பா. ஒரு பக்க சிறகு போல அது தோளில் தொங்க, டப்பாவும் பலகையும் மோதி டங் டங் என சத்தத்துடன் பள்ளிக்கு ஒரு சிறிய பயத்தோடு ஓடுவேன். இன்றும் நான்  காலையில் வேலைக்கு கிளம்பும் போது coffee யில் மெலிதாக எழும் ஆவி போல பயம் எழுவது அதன் நீட்சியாக இருக்கலாம்.

இங்க ஒன்னு கவனிக்கணும், முதல்ல எங்க ஊர்ல "பள்ளிக்கூடம் போகலியா " ? என கேட்பாங்க . ஆனால் தானியார் பள்ளிகளில் கொஞ்சம் வசதியானவங்க புள்ளைங்கள சேர்த்தாங்க. அப்புறம் எங்க பள்ளிக்கூடத்தை  "school " அப்படின்னு கூப்பிட ஆரமிச்சிட்டாங்க.

காலையில் prayer. அதில் தமிழ் தாய் வாழ்த்து ( நீராரும் கடலோடுத்த ) இரண்டு பெண்களே தினமும் பாடும்,ஒருகட்டதில் தாங்க முடியாமல் டேப் ரெகார்டரில் போட்டார்கள்,  அப்போது தான் தெரிந்தது அது எவ்வளவு அழகான பாடல் என்று. ( ஒரு நாள் இந்த பாடலை நீராரும் ஓ !ஓஹோ கடலோடுத்த ஓ !ஓஹோ என மச்சான வச்சிக்கடி முன்தான முடிச்சிலதான் பாட்டு மெட்டில் பாடிக்கொண்டு இருந்தேன் P .T வாத்தியார் தலமேல ஒரு அடிவிட்டார்) . பின்பு ஒரு குறளும் அதன் பொருளும் சொல்வார்கள், தினமணி செய்தித்தாள் வாசிப்பர், உறுதிமொழி ஒருவர் சொல்ல மற்றவர் சேர்ந்து சொல்லவேண்டும். அதில் இருந்த வார்த்தைகள் எனக்கு மறந்து விட்டது, ஆனால் ஒரு பெரிய அரசமரத்தை காற்று உலுக்குவதை போல  500 சிறுவர் சிறுமியர் சேர்ந்து ஒலிக்கும் போது ஏற்பட்ட  அதிர்வு இன்னும் நினைவில் இருக்கிறது. வெள்ளிகிழமை மட்டும் காலையில் தேசிய கொடி ஏற்ற வேண்டும். தேசிய கொடியில் மரமல்லி பூ போட்டு அழகாக மடித்து கட்டி பாதிவரை ஏற்ற பட்டு இருக்கும். ஒரு சிறுவன் மார்ச்பாஸ் அடித்து தலைவர் போல் நிற்கும் ஒரு சிறுவனிடம் கொடியின் கயிறை அவிழ்த்து கொடுப்பான். தலைசிறுவன் மெதுவாக அதை மேல் ஏற்றி கொடியை அவிழ்த்து பறக்க விடுவான். அனைவரின் கர ஒலி முடிந்ததும் தலைசிறுவன் சுதந்திர தியாகி யாராவது ஒருவரை பற்றி பேச வேண்டும். அதன்பின் தேசிய கொடி வாழ்த்து பாடலான தாயின் மணிக்கொடி பாரீர் பாடல் பாடப்படும். 

கிராமத்து சிறுவர்கள் எந்த தன்ஒழுக்க கட்டுக்குள்ளும் வருவது இல்லை. கெட்ட வார்த்தைகளை பெற்றோர் மற்றும் சூழ்லையிலிருந்து எளிமையாக எடுத்து கையாள்வர். வன்முறையில் வலியவன் வகுப்பில் அனைவராலும் மதிக்கபடுவான். ஒரே சாதி சிறுவர்கள் ஒன்றாய் விளையாடுவர். 

படித்தால் மட்டுமே வாழ முடியும் என யாரும் அவர்களை பயமுறுத்துவது இல்லை. ஏனெனில் கிராமத்தில், படித்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை இல்லை.  நகரத்திலிருந்து வரும் ஆசிரியர்கள் இவர்களை ஒழுக்க எல்லைக்குள் நிருத்தவே படாதபாடுபடுவர். அதன்பின் அவர்களுக்கு கல்வி அளிப்பது இன்னும் சிரமமான விஷயம். ஆனாலும் சில ஆசிரியர் மாணவர்களுக்கு பிடித்தமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் பாடங்களை ஒரு சுவாரசியமான கதைகளாக மாற்றி நடத்தினார்கள். 


ஞாயிறு, டிசம்பர் 22, 2013

மகன் வயது ஒன்றரை


காலையில் எழுந்தவுடன்  உடல் முறுக்கி திமிர் விடுகிறான்.

படுக்கைலிருந்து இறங்கி வீட்டில் இருக்கும் இரு அறைகளையும் ஒரு நோட்டம் விட்டுவிட்டு டிவியை எழுப்பி அதில் விளம்பரம்  வருகிறதா என பார்க்கிறான். டிவியில் அவன் விளம்பரங்களை தவிர வேறெதுவும் பார்ப்பது இல்லை. பின்பு விளையாட துவங்கி விடுகிறான்.

எந்த பொருளுக்கும் அவனிடத்தில் எந்த மதிப்பீடும் இல்லை. ஆதலால் அவனை பொருத்தவரை எல்லா பொருளும் விளையாட்டு பொருள்தான்.
வயிறு  நிறைந்தாள் உணவை வைத்து விளையாடுகிறான். சமையல் அறையில் பாத்திரங்கள், குளியல் அறையில் தண்ணீரோடு ,  படுக்கை அறையில் படுக்கையில், அம்மாவின் அழகுசாதன பொருட்கள், என் சுத்தியல், திருப்பிலி , அடுக்கி வைத்த துணிகள் , துப்புரவு பொருட்கள் என அவன் விளையாடும் பொருட்களின் பட்டியல் நீளும். அவன் பொம்மைகளை அதிகம் தொடுவது இல்லை. ஏனெனில் அவன் எங்கள் இருவரை பார்த்து கற்றுக்கொள்ள நினைக்கிறான். ஆதலால் நாங்கள் உபயோகிக்கும் பொருட்களே அவனுக்கும் தேவைபடுகிறது. சில நேரங்களில் நானும் அவனும் விளையாடுவோம். அவன் உற்சாகத்தோடு ஏறி குதித்து , சிரித்து மகிழ்ந்து , ஓடி சுழன்று விளையாடுவான். அந்த உற்சாகம் எனக்குள்ளும் பொங்கும் ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. மறுபடியும் மனம் இறுகி அமைதியாகிவிடும். ஆனால் அவன் தொடர்ந்து அதே நிலையில் இருப்பான். இந்நிலையில் அவன் முன் எஞ்ஞாநியும் அஞ்ஞானியே .

ஒருநாள் parkக்கு அழைத்து சென்றேன். பரந்த புல்வெளியில் விளையாட விட்டேன். திடீரென உற்சாகம் கொண்டு புல்வெளி முழுவதும் கைகளை உயர்த்தி ஓட துவங்கினான். ஆனந்தமாக  ஓடிக்கொண்டே இருந்தான். என்னால் அவனை பிடிக்கவே முடியவில்லை. பெரிய மழைத்துளிகளை போல அவன் பாதங்கள் புல்வெளியில் படர்ந்து கொண்டே இருந்தது. அங்கிருந்த புல்வெளியும், சறுக்கு மரங்களும் , ஊஞ்சலும் மணல் பரப்பும் அவனை ஈர்க்கவில்லை, ஆனால் அந்த திறந்தவெளி அவனை ஈர்த்தது. மூச்சுமுட்ட அந்த திறந்தவெளியை பருகித்திளைத்தான்.

அவன் விரும்பி உண்ணும் உணவு என்று எதும் இல்லை. பசித்தால் பழைய சோறு முதல் பாதாம் பருப்பு வரை தின்பான்.  இப்போது ஊட்டுவது பிடிக்கவில்லை, அவனே இரைத்து பூசி தின்றால் ஒரு திருப்த்தி.

இட்லியை இட்டா அல்லது இட்டி என்பான். ஹலோவுக்கு ஹலா என்பான். இன்னும் சில நாளில் ஒரு புது மொழி எங்கள் வீட்டில் உலாவும் என நினைக்கிறேன்.

தூங்கும்முன் கட்டை விரலை வாயில் வைத்துக்கொள்கிறான். தூக்கத்தை உறுஞ்சி குடிக்கிரானோ என தோன்றும். அம்மா தலைமீது கொஞ்சநேரம், எங்களுக்கு இடையில் கொஞ்சநேரம், குருக்குவெட்டாக கொஞ்சநேரம் என புரண்டுவிட்டு இறுதியில் காலுக்கு அடியில் தூங்கிவிடுவான்.

கோவம் தெரியவில்லை ஆனால் வீம்பு உள்ளது. அழ தெரிகிறது ஆனால் துக்கம் தெரியவில்லை. அவன் நினைத்ததை செய்கின்றான் ஆனால் ஒரே மாதிரி அல்ல. சிரித்தாள் கண்களும் சிரிக்கின்றது.

அவன் விரல் பிடித்து என் உலகத்திற்கு அவனை அழைத்து வர இது வரை எனக்கு தோன்றவில்லை . அவன் மழலையில் திளைத்திடவே எனக்கு நேரம் போதவில்லை.

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

கவனம்


 நானும் என்னோடு வேலை செயும் சவுதி நண்பரும்   காரில்   சென்றுகொண்டு இருந்தோம். நாங்கள் சென்றுகொண்டு இருந்த சாலையின் இருபுறமும் ஆடு மற்றும் ஒட்டகங்களை வளர்க்கும் பண்ணைகள் அதிகம் இருந்தது. பண்ணையை சார்ந்த மனிதர்கள் சவுதியின் பாமர மக்கள் என்று அழைக்கப்படும் பத்து இனமக்கள். அவர்கள் வாகனம் ஓட்டுவது வரையறை இல்லாமல் இருக்கும். அதனால் நான் மெதுவாக வாகனத்தை செலுத்திக்கொண்டு இருந்தேன். எங்களுக்கு இணையாக இன்னொரு வாகனம் வந்துகொண்டிருந்தது. திடீரென அது எங்களை முந்திக்கொண்டு எங்கள் பக்கம் வளைந்து குறுக்கு சாலையில் நுழைய முனைந்தது. நான்  நிலை இழந்து அந்த வண்டியின் பக்கவாட்டில் மோதி நிறுத்தினேன். எனக்கு ஆழ்ந்த பயமும் அதை தொடர்ந்து கடும் கோவமும் ஏற்ப்பட்டது. தமிழிலேயே திட்டி தீர்த்தேன். 

இந்த ஊரில் வண்டிகள் மோதிக்கொண்டால் யார் மீது தவறு என்று ஒருவரை ஒருவர் சண்டையிட்டு  பணம் கேட்க்க தேவையில்லை. போலீஸுக்கும் , இன்சூரன்ஸ் companyக்கும்  phone செய்தாள் போதும் அவர்களே வந்து யார் மீது தவறு என்று உறுதி செய்து    இன்சூரன்ஸ் பணத்துக்கு ரசிது தருவார்கள் அதை கொண்டு நாம் வண்டியை சரிசெய்து கொள்ளலாம். உயிர் சேதம் வந்தாள் தவறு செய்தவர் மீது கேஸ் போடுவர். அதனால் சிறியதாக மோதிகொண்டவர்கள் சண்டையிடாமல் கை கொடுத்து போலீஸ் வரும்வரை பேசிக்கொண்டு இருப்பர்.

நான் இடித்த வண்டியில் இருந்து ஒரு வயதான பெரியவர் இறங்கி வந்தார். அவரை பார்த்தவுடன் என் கோவம் சற்று தனிந்தது. அவர் மெல்லிய புன்னகையுடன் கை கொடுத்தார். நானும் கை கொடுத்தேன். அவர் ஏதோ அரபியில் பேசினார்  ஆனால் எனக்கு புரியவில்லை. ஆனால் அவர் புன்னகையை , மன்னித்துவிடு நான் தெரியாமல் வண்டியை வளைத்து விட்டேன் என்பதாக புரிந்து கொண்டேன். என் புன்னகையின் அர்த்தம் , பரவாயில்லை வண்டிக்கும் எனக்கும் எதுவும் ஆகவில்லை என்பதாக இருந்தது. 

அவரே போலீஸ்க்கும் , இன்சூரன்ஸ் companyக்கும் phone செய்தார். தொழுகை நேரம் என்பதால் அருகில் இருக்கும் மசுதிக்கு சென்று தொழுகை முடித்து திரும்பி வந்தார்.

போலீஸ் வந்ததும் முதலில் அவரிடம்  நடந்ததை பற்றி விசார்த்தனர். பின்பு என்னிடம் வந்தனர் நானும் நடந்ததை விளக்கினேன். அவர் மறுபடியும் போலீசிடம் பேசினார். நான் அருகில் இருந்த அரபிநண்பரிடம் அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டேன். நீ பொய் சொல்லுவதாகவும் நீயும் அதே வழியில் திரும்புவதாக சென்று திரும்பாமல் நேராக வந்து அவரை மோதியதாக அவர் சொல்கிறார் என்றார். எனக்கு மறுபடியும் கோவம் தலைக்கு ஏறியது. ஆனால் போலீஸ் அவர் மீது தான் தவறு என்று சிட்டு எழுதி கொடுத்துவிட்டு களைந்து செல்லுமாறு கூரினர். அவர் போலீசை திட்டிக்கொண்டே அங்கிருந்து சென்றார்.

ச்சே என்ன பெரிய மனுஷன் இவன் தப்பு பண்ணிட்டு இப்படி பொய் சொல்றான் என்று திட்டிக்கொண்டே நானும் வண்டியை எடுத்துக்கொண்டு officeக்கு கிளம்பினேன். அவர் முதலில் என்ன நினைத்து என்னிடம் கை கொடுத்திருப்பார் என்று யோசித்தேன் இன்னும் கோவம் அதிகமானது. 

இரவு படுக்கும்போது இதைபற்றி யோசித்துக்கொண்டு இருந்தேன். ஏன் எந்த ஊரிலும் தவறை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள், அறம் என்பது எல்லா மனிதருக்கும் நாடு, நிறம், மொழி , மதம் தாண்டி பொது தானே என்று மனம் அலை பாய்ந்து கொண்டே இருந்தது.  அப்போது ஒரு எண்ணம் தோன்றியது ஒருவேளை அவர் பார்வையில் அவர் சொல்வது உண்மையாக இருக்குமோ, அவரும் என்னை திட்டிக்கொண்டே தான் சென்றிருப்பார். நான் இன்னும் சற்று வேகமாக வந்திருந்தாலும் அவருக்கு பலத்த அடி பட்டிருக்கும். இப்படி மனம் மாற்றி யோசித்த பின்னே மனம் அமைதியானது , தூக்கம் வந்தது.

கவனக்குறைவு விபத்தின் முதற்முக்கிய காரணம். வேகம், வண்டியின் நிலை, சாலை, ஓட்டுனரின் உடல்நிலை அடுத்தடுத்த காரணங்களாகின்றன.   


திங்கள், நவம்பர் 11, 2013

அப்பா என்னால வர முடியாது

அஸ்வின் அவன் நினைத்தது போலவே காலை ஆறு மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்தான்,  இரண்டு கைகளை உரசி கண்களில் ஒற்றிக்கொண்டான், மெதுவாக கண் திறந்து உள்ளங்கையை பார்த்தான். அவன் எப்போதும் அலாரம் வைத்து தூங்குவது இல்லை. அவன் உடல் எப்போது  விழிக்கிறதோ அப்பொழுதே எழுவான். எழுந்து வந்து வெளியில் ரங்கசாமியை தேடினான். ரங்கசாமி மாடுகளுக்கு தீவானம் வைத்துக்கொண்டு இருந்தான்.

அஸ்வின்  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மிகு மின்னிலயங்களை அமைக்கும் நிறுவனத்தில் பொறியியல் வல்லுனராக வேலை பார்த்தான். அப்பா சென்னையில்  ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். அம்மா வீட்டு நிருவாகி. ஒரு தங்கை, வழக்கம் போல US மாப்பிளையை மணமுடித்து அங்கேயே தங்கிவிட்டார். அஸ்வின் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் வேலை பார்த்தான். வேலை நடக்கும் இடம் அந்த நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிராமம். அவனுக்கு கிழே ரங்கசாமியும்  50 தொழிலாளிகள் வேலை செய்தனர். மேல் இடத்திலிருந்து எப்போதும் ஒரு அழுத்தம் அவனுக்கு இருந்துகொண்டே இருக்கும் . உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே இருப்பான். நேரம் தவறிய உணவு, தூக்கம் மற்றும் நிலை தவறும் போதை என்று ஒரு சராசரி இளஞ்சனாக இருந்தான். தானாக உடல் பருத்தது, தலை முடி கொட்டியது, சின்ன சின்ன நோய்கள் வந்துகொண்டே இருக்கும்.

திடீர் என ஒரு நாள் காலை சென்னையில் இருக்கும் தன் வீட்டுக்கு வந்தான்.அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டு இருந்த அப்பாவின் முன் வந்து நின்றான். உள்ளிருந்து வந்த அம்மா ஆச்சிரியத்துடன் என்னடா திடீர்ன்னு வந்து நிக்கிற, போன் கூட பன்னல என்றார். அப்பாவும் அதே ஆச்சிரியத்தோடு அவனை பார்த்தார். அவன் எதுவும் பேசவில்லை. தன்  அறைக்கு சென்று  படுத்துக்கொண்டான். அப்பாவும் அம்மாவும் தொடர்ந்து கேட்டும் அவன் எதுவும் கூரவில்லை , அதன் பின் யாரும் எதுவும் அவனை கேட்கவில்லை.

பத்து நாட்கள் மௌனமாக கடந்தது. ஒரு விடுமுறை நாளில்அப்பா ஓய்வாக படுத்துக்கொண்டு இருந்தார். அஸ்வின் மெதுவாக அவரிடம் சென்று அப்பா நமக்கு ஊர்ல எவ்வளவு நிலம் இருக்கும் என்று கேட்டான். அவர் அது இருக்கும் ஒரு ஆறு ஏக்கர், ஏன் என்றார். நா அங்க போய் மாட்டு பண்ணை வைக்கலாம் என இருக்கேன் என்றான். அதை பார்த்துக்கொண்டு இருந்த தங்கை "களுக்" என்று சிரித்தாள். நீ என்ன லூசாட போய் மாடு மேய்க்க போரியா  என அம்மா கேட்டாள். அப்பா எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தார். அடுத்த பத்து நாட்கள் இதை பற்றிய பேச்சாக இருந்தது.

இருதியில் அஸ்வின் அவன் சொந்த கிராமத்துக்கு வந்தான். அவன் பெரியப்பா ஒரு இயற்கை விவசாயி. அவர்  இவர்களின் நிலத்தையும் சேர்த்து கவனித்து வந்தார். அவரின் உதவியோடு தான் சேமித்து வைத்திருந்த பணத்தில்  ஒரு மாட்டு பண்ணையை உருவாக்கினான். விவசாயத்தை மெல்ல மெல்ல அவன் பெரியப்பாவிடம் கற்றான். ஆறு ஏக்கர் நிலத்தில் நான்கு  ஏக்கர்  விவசாயம் செய்யவும் ஒரு ஏக்கர் மாட்டு பண்ணைக்கும் ஒரு ஏக்கரில் ஒரு சிறிய வீடும் அதை சுற்றி தோட்டமும் அமைத்திருந்தான்.

மச்சு வீடு, முன்பக்கம் அகலமான திண்ணைகள், அதன் ஓரங்களில் பூதொட்டிகள் வரிசையாக , உட்பக்கம் ஒரு அகலமான உஞ்சல் , சுவர் ஓரம் அலமாரி அதில் வரிசையாக புத்தகங்கள் . அதன் அருகில் அகலமான நாற்காலிகள் .  உட்புறம் அஸ்வினின் அறை . மூலையில் ஒரு மண்பானை அதில் குடிநீர். தெற்கு தலை வைத்து படுக்கும் படி அமைந்த கட்டில் மற்றும் துணி வைக்கும் அலமாரி. ஒரு land line Phoneம்  Internetவுடன் ஒரு  Laptopம் இருந்தது . வீட்டின் கூரை மேல் சுரைக்காய் கொடியும் அவரை கொடியும் படர்ந்து குடி இருந்தது. வீட்டை சுற்றி மலர் தோட்டங்களும் அறிய வகை மூலிகை செடிகளும் வளர்த்திருந்தான் . சற்று தொலைவில் ஒரு அகலமான பெரிய கிணறு. அதற்க்கு பக்கத்தில் ஒரு பெரிய வேப்பமரமும் சில புங்கை மரங்களும் இருந்தது. அதன் அடியில் ஒரு சிமண்ட் மேடை அமைத்திருந்தான்.

மாட்டு பண்ணைக்கு அருகில் இரண்டு பெரிய அறைகள் இருந்தது. ஒன்றில் விவசாய பொருட்களும் இருந்தது. இன்னொரு அறையில் ரங்கசாமி இருந்தான்.

இப்பொழுது ரங்கசாமி அஸ்வினிடம் வந்தான். பால் காச்சட்டுமா சார் என்றான். சரி நான் குளிச்சிட்டு வரேன் என்று கிணற்றுக்கு போனான். போகும்போது தலைக்கு சியக்காய் தூளும், உடம்புக்கு மற்றொரு தூளும் எடுத்து சென்றான்.

கிணற்றில்  இறங்கி குளிர்ந்த நீரில் கண்களை கழுவினான். கொஞ்சம் தண்ணிரை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டு பின்பு முழுவதும் இரங்கி நீரில் மூழ்கினான். குளிர்ந்த நீர் அவன் உடல் சூழ்ந்து தாங்கியது. சிறிய மீன்கள் அவன் உடல் முழுவதும் முத்தமிட்டது. தன்னிலை இழந்து தன்னை நீராக நினைத்து மிதந்தான். உடலும் மனமும் எடை இழந்து நீர் சிறகாள் நீரிலே மிதப்பது போல உணர்ந்தான்.

குளித்து முடித்து மேலே வந்தான். உடைகளை மாற்றிக்கொண்டு வேப்ப மரத்தடியில் உள்ள சிமண்ட் மேடைக்கு சென்று சூரிய நமஸ்காரம், யோகம் தியானம் மற்றும் பிரணாயாமம் செய்து முடித்தான்.

ரங்கசாமி வந்து சார் அப்பா போன் செசினாடு நாளைக்கு இக்கட ஒச்தராம் என்றான். அஸ்வினுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களாக அப்பாவும் அம்மாவும் இங்கு ஒரு மமுறை  கூட வந்தது இல்லை. இவன் சென்னைக்கு ஆறு ஏழு முறை சென்றிருக்கிறான். அவன் தங்கை திருமணத்தில் கூட  விவசாயி என்பதால் சரியாக முக்கியத்துவம் தரப்படவில்லை.

அஸ்வின் அப்பாவுக்கு போன் செய்தான். என்ன பா இங்க வரிங்களா என்றான். ஆமாண்டா , நானும் அம்மாவும் இந்த vacation க்கு  US போலந்தான் Plan, ஆனா என்னோட passport ல சின்ன Problem அதான் அம்மா மட்டும் US போறா நா தனியா எங்க போறதுன்னு தெரியல அதான் அங்க உன்னோட ஒரு மாதம் தங்கலாமுன்னு வரேன் என்றார். சரிப்பா என்று போன் வைத்து விட்டு வந்தான்.

ரங்கசாமி கேள்விறகு கூழ் நல்ல கெட்டி தயிர் போட்டு கரைத்து வைத்திருந்தான். அதை இருவரும் குடித்துவிட்டு தோட்டத்தில் வேலை செய்ய கிளம்பினார்கள்.

மறுநாள் இரவு அப்பா வந்து சேர்ந்தார். அஸ்வின்  பேருந்து நிலையத்திற்கு சென்று அழைத்து வந்தான். அவனை பார்த்ததும் அவரை அறியாமலே சந்தோஷமாக இருந்தது அவருக்கு. எப்படியாவது இந்த ஒரு மாதத்தில் அவன் மனதை மாற்றி சென்னைக்கு அழைத்து சென்று ஒரு நல்ல வேளையில் சேர்த்து திருமணம் முடிக்க வேண்டும் என நினைத்தார்.

காலை அப்பா எழுவதற்கு முன்னாள் அஸ்வின் எழுந்து யோகா செய்து கொண்டு இருந்தான். அப்பா எழுந்து வெளியில் வந்தார். அவர் வருவதை பார்த்த ரங்கசாமி சார் மீக்கு ஏதாவது வேணும்னா என்கிட்ட செப்பண்டி சார் என்றான். நீ ஆந்திராவ என்றார் , ஆமாம் என்றான் ரங்கசாமி, சரி பல்விளக்க pest எடுத்துவா என்றார். சார் பேஸ்ட் இல்ல நிலை அவரை போடி இருக்கு இல்லேனா வேப்பங்குச்சி இருக்கு. அப்பா அவனையே கொஞ்ச நேரம் பார்த்து விட்டு சரி வேப்பங்குச்சிய ஓடிசிட்டு வா அப்புறம் நல்லா கொதிக்க கொதிக்க சுடு தண்ணீர் காய வை என்று சொல்லி விட்டு காலை கடன் முடிக்க சென்றார். ரங்கசாமி வேப்பங்குச்சிய ஒடித்து வந்து வைத்தான், கொஞ்சம் தண்ணிரை சுட வைத்து பச்சை தண்ணிரில் உற்றி வேலாவினான். அப்பா காலை கடனை முடித்து விட்டு வந்தார். சார் பச்ச தண்ணியில பிராணன் இருக்கு அதுல குளிச்சா  உடம்புக்கு நல்லது ஆனா உங்களுக்கு பழக்கம் இல்ல அதனால சுடுதண்ணி பச்சதண்ணி இரண்டும் கலந்து வச்சிருக்கேன், சோப்பு இல்ல அதுக்கு பதிலா அஸ்வின் சார் ஒரு பவுடர் வச்சிருக்காரு , அது  பாசி பருப்பு , கஸ்துரி மஞ்சள் , செம்பருத்தி, பாதம் , ரோஜா இதழ் போட்டு அரைச்சது , சாம்பு இல்ல சியக்காய் தூள் இருக்கு , குளிச்சிட்டு  வாங்க உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்றேன் என்று சொல்லி விட்டு சென்றான். என்னடா காட்டுவாசிங்க மாதிரி வாழ்ரிங்க என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றார்.

அப்பா பத்தாம் வகுப்பு படிக்கும் வரை இங்கு தான் வளர்ந்தார், அதன் பின் hostelலில் தங்கி சென்னையில் படித்தார் அதன் பின் ஊர் பழக்கம் அத்தனையும் மறந்து போனார். அவர் குளித்து முடித்து வந்தார் அதே நேரத்தில் அஸ்வினும் வந்தான். இருவரும் சாப்பிட அமர்ந்தனர். ரங்கசாமி இருவருக்கும் தோசை வார்த்து பரிமாறினான். அது வித்தியாசமாக இருந்தது. அப்பா அவனை பார்த்தார் அவன் ராகி, கம்பு, அரிசி , சோளம் எல்லா மாவையும் கலந்து நைட் தண்ணி ஊத்தி வச்சா காலையில தோசைமாவு ரெடி சார் என்றான். தோசை நன்றாக மொரு மொரு என்றிருந்தது , தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி.

பால் பண்ணையிலிருந்து வந்த ஒரு ஆள்,  வண்டி தயாராக உள்ளது என்றார். அஸ்வின் அங்கு சென்றான், அப்பாவும் சென்றார். 80 லிட்டர் கொண்ட மூன்று பால் கேன்கள் ஒரு சிறிய வண்டியில் ஏற்றி இருந்தார்கள். அதில் ஒன்று உள்ளூர் விற்பனைக்கும் மற்ற இரண்டு பால் சொசைட்டிக்கும் போகவேண்டும்.
மேலும் இரண்டு மூட்டை கத்திரிக்காய் மற்றும் பத்து வாழை  தார் உழவர் சந்தைக்கு சென்றது. வண்டி சென்றதும் அஸ்வின் நிலத்துக்கு நீர் பாச்ச சென்றான்.  அப்பாவும் அவனுடன் சென்று நிலங்களை சுற்றி பார்த்தார். நிலத்தில் கூலி ஆட்கள் வேலை செய்தார்கள். அப்பா மெதுவாக பேச்சு கொடுத்தார், அஸ்வின் நீயேண்ட இப்படிவந்து கஷ்ட படுற சென்னைக்கு வந்து எதாவது கம்பெனில joint பண்ணு உனக்கு பொண்ணு பார்க்கணும் கல்யாணம் பண்ணனும் என்றார் . அஸ்வின் நா இங்க நிம்மதியா இருக்கேன். ஒரு லிட்டர் பால் 20 ரூபாய் 240 லிட்டர் தினமும் கிடைக்குது. அதில்லாம நிலத்திலும் வருது. இன்னும் என்ன வேணும் என்னோட life  style க்கு இது அதிகம் . நீங்க வேணுன்ன இங்க வாங்க என்றான். அப்பா எதுவும் பேசவில்லை. மதியம் வரை அங்கேயே வேலை செய்துவிட்டு வீடு வந்தனர்.

ரங்கசாமி நாட்டு கோழி குழம்பு வைத்திருந்தான். நல்ல வாசனை. மூவரும் சாப்பிட அமர்ந்தனர். அஸ்வின் கிழே  சம்மணம் இட்டு அமர்ந்து   சாப்பிட பழகி இருந்தான் . அப்பாவுக்கு அப்படி அமர கஷ்டமாக இருந்தது. சோறு சற்று மங்கலான நிரத்தில் இருந்தது. முற்றிலும் இயற்கை விவசாய முறையில் விளைந்தது. கையில் எடுத்தாள் சற்று வழு வழுப்பாகவும் நல்ல சுவையாகவும் இருந்தது. அஸ்வின் அப்பா சாப்பிடுவதை கவனித்தான். அவர் வாய் திறந்து உணவை பாதி மென்று அப்படியே விழுங்கினார். அப்பா கொஞ்சமா சோறு எடுத்து வாய்ல போட்டு சுவைய feel பண்ணுக அப்புறம் நல்லா கூழ் மாதிரி எச்சில் சேர்த்து  மெல்லுங்க, அப்புறம் விழுங்குங்க என்றன். அப்பா , ஏன்டா என்றார் . நமக்கு பாதி நோய் சரியா சாப்பிடாம தான் வருது நா சொல்ற மாதிரி சாப்பிடு சுகர் இருந்தாலும் இனிப்பு சாப்பிடலாம் என்றான். அப்பா கொஞ்சம் முயற்சி செய்தார். முடியாமல் பழையபடியே சாப்பிட்டார். அஸ்வின் சாப்பிடும் போதும் சாப்பிட்ட பின்பும் தண்ணிர் குடிக்கவில்லை. அரை மணி நேரம் பொருத்து குடித்தான்.

அஸ்வின் இன்டர்நெட்டில் எதையோ தேடிக்கொண்டு இருந்தான். அப்பா ஓய்வாக கண்மூடி நாற்காலில் தூங்கினார்.

முன்மாலையில் அஸ்வின் அப்பாவை எழுப்பினான். மாலையில் பால் கறக்க ஆள் வரும் பார்த்துக்கொள்ளுங்கள் நான் வெளியில் போய் விட்டு வருகிறேன் என்றான்.  தினமும் ரெண்டு meeting மற்றும் எவ்வளவு பிரச்சனைகளை எவ்வளவு ஆட்கள் நாம face பண்றோம் நம்மள  மாடு மேய்க்க விட்ருவான் போல இருக்கே என்று எண்ணினார்.

இரவு அப்பா புத்தகம் படித்து கொண்டு இருந்தார்.தண்ணீர் குடிக்கலாம் என்றால் பானை தண்ணிர் தான் இருந்தது. ரங்கசாமியை அழைத்து கேன் வாட்டர் கிடைக்குமா என்றார் இல்லை என்றான் . அப்ப பெப்சி அல்லது கோக் வங்கி வா என்று பணத்தை நீட்டினார். ரங்கசாமி இல்ல சார் அதெல்லாம் வாங்கினா அஸ்வின் சார் திட்டுவார் என்றான். கிணத்து தண்ணியில pH value 8, மினரல் தண்ணியில pH value 6.8 லிருந்து 7 வரைக்கும் இருக்கும் பெப்சி கோக் ல 2.8 தான் இருக்கும் ஆனா நம்ம ரத்தத்தில 7.2 normal value. அதனால பான தண்ணிய குடிங்க சார் அதுல pH value 8லிருந்து 9 வரைக்கும் இருக்கும். அப்போது அஸ்வின் வந்தான். அஸ்வின் எங்கடா புடிச்ச இவன எது கேட்டாலும் ஒரு கத சொல்றான் என்றார் அப்பா. அஸ்வின் சிரித்துக்கொண்டே  இல்ல பா அவன் சொல்றது சரிதாம்பா மண்பானையில இல்ல copper கொடத்துல தண்ணி ஊத்தி வச்சா pH value increase ஆகும் என்றான்.
சரி ஏதோ ஒண்ணு குடுங்கப்பா என்றார்.

இரவு உணாவாக  பழங்களை சாபிட்டார்கள். அஸ்வின் ஒவ்வொரு திராட்சை பழமாக எடுத்து சுவைத்து தியானம் போல சாப்பிட்டான். அப்பா அதை பார்த்து ஒருவாரு சிரித்துக்கொண்டார். ரங்கசாமி சுண்ட காச்சிய பசும் பாலை அப்பாவிடம் கொடுத்தான். அந்த சுவையை அவர் மறந்தே போய் இருந்தார். அப்பா நாளையிலிருந்து நீயும் காலையில யோகா பண்ண வரிங்க என்றான் அஸ்வின். ஐம்பது வயசுக்கு மேல எனக்கெல்லாம் அது எதுக்கு பா என்றார் அப்பா . அவர் skapy ல் மனைவி மற்றும் மகளுடன் பேசி கொண்டு இருந்தார், அவர்கள் KFC chicken ஆர்டர்  செய்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள் ,  இவருக்கு நா ஊறியது.

மறுநாள் காலை அஸ்வின் அப்பாவை வலுகட்டாயமாக அழைத்து சென்று யோகா மேடையில் நிறுத்தினான். அப்போது தான் அப்பா நன்றாக அஸ்வினை கவனித்தார் அவன் தேகம் மெலிந்து கட்டுருதியாக இருந்தது. முகம் பல பல வென ஒளிர்ந்தது . கண்களில் கண்ணாடி அணியவே இல்லை. சூரியனை பார்த்து வணங்கிவிட்டு சூரிய நமஸ்க்காரம் கற்றுக்கொடுத்தான். பின்பு சில எளிய யோகா மற்றும் மூச்சி பயிற்ச்சிகளை சொல்லி கொடுத்தான். அப்பா வேண்டா வெறுப்பாக செய்து கொண்டிருந்தார்.

மறுநாளும் இது தொடர்ந்தது, அப்பாவுக்கு சற்று வெறுப்பாக இருந்தது வேறு வழி இல்லாமல் செய்து கொண்டு இருந்தார். யோகா முடித்து வரும்போது ரங்கசாமி அப்பாவை அழைத்தான். அவன் கையில் நல்லெண்ணெய்   இருந்தது. அப்பாவை கிணற்றடியில் அமரவைத்து உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து விட்டான். கை கால்களை நீவிவிட்டு தலை மற்றும் கண்களை அழுத்திவிட்டான். வெயிலில் அமர வைத்து பின் கிணற்றில் கைபிடித்து இறக்கி குளிக்க சொன்னான். அப்பாவாள் வெகுநேரம் நீந்த முடியவில்லை இருந்தாலும் ஏதோ ஒரு மகிழ்வு அவருக்குள்  வெகுநாள் கழித்து நீந்த துவங்கியது. கிணற்றில் சிறுவர்களை போல படிக்கட்டில் ஏறி குதித்து விளையாடிக்கொண்டு இருந்தார். குளித்து முடித்து ரங்கசாமி செய்து வைத்திருந்த மீன்குழம்பு இட்லியும் சாப்பிட்டு விட்டு கலைத்து போய் தூங்கிவிட்டார்.

மறுநாள் ரங்கசாமி அப்பாவை பேதி மாத்திரை எடுக்க சொன்னான். அவர் சிறுவயதில் பேதி மாத்திரை சாப்பிட்டு இருக்கிறார், அதன் பின் அதை மறந்து போனார். வலுகட்டாயமாக ரங்கசாமி அவரை சாப்பிட வைத்தான். அவருக்கு வயிறு கலக்கியது. மூன்று முறை போனதும் பசித்தது, ரங்கசாமி அவருக்கு உப்பிட்ட கஞ்சி  கொடுத்தான். அவர் கலைத்து இருந்தார், ஏன்டா இப்படி என்ன சாவடிகிரிங்க என்றார். ஐந்து ஆறு முறை போன பின் ரங்கசாமி சூடாக ரசம் சாதம் கொடுத்தான், அமிர்தம் போல இருந்தது அவருக்கு, நன்றாக சாப்பிட்டுவிட்டு  தூங்கிவிட்டார். மாலையில் எழுந்தபோது அவர் உடல் எடை குறைந்தது போல லேசாக இருந்தது.

அன்று இரவு இதைபற்றி மகளோடும், மனைவியோடும் பேசிக்கொண்டு இருந்தார். அங்கே அவர்கள் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு இருந்தார்கள். அஸ்வின் உள்ளே வந்தான். அஸ்வின் நீ மறுபடியும் சென்னைக்கு வரதபத்தி அம்மா கேக்குரா என்னடா சொல்றே என்றார். Sorry பா என்னால வர முடியாது. டே உன்ன மாதிரி பசங்க சிட்டியில மால்ஸ், தியேட்டர்ஸ், பீசா, பர்கன்னு எப்படி enjoy பண்றாங்க, நீயும் அப்படிதானே இருந்த , இந்த மூனு வருசமா என்னாச்சு உனக்கு, உன்ன யாரோ நல்லா  brain wash பண்ணி இருக்காங்க , நீ fallow பண்ற சாமியார் எல்லாம் பெரிய தாடி வச்சிக்கிட்டு பெரிய ஆசிரமங்களை வச்சிக்கிட்டு கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க, ஒரு ஆறு நாள் ஏழுநாள் classக்கு 5000 ரூபாய்ளிருந்து 13,000 ரூபாய்வரை வாங்குறாங்க. உன்னோட life west பான்னிகாத,  உனக்கு என்ன lifeல கஷ்டம் வந்திடுச்சு யோகா தியானமுன்னு இங்க வந்து சாமியார் மாதிரி வழ்ந்துனு இருக்க ?

ஆமா பா எனக்கு கஷ்டம் வந்தது. மூனு வருசத்துக்கு முன்னாடி நா ஆந்திராவுல இருக்கும் போது ஒரு தீபாவளி  நாள் நைட் எனக்கு தோல் பட்டை வலிச்சது , கொஞ்ச நேரத்துல சரியகிடுமுனு நெனச்சா வலி அதிகமாகி எந்திரிக்க முடியல, அப்ப ரங்கசாமிக்கு போன் பண்ணி வர சொன்னேன். அவன்தான் ஒரு ஆட்டோ எடுத்து வந்து பக்கத்துல இருந்த hospitalலுக்கு கூட்டிட்டு போனான்.  தீபாவளி  நாள் அதனால டாக்டர் இல்ல , அப்புறம் டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போய் அவர்கிட்ட கெஞ்சி வைத்தியம் பாக்க சொன்னான். எனக்கு வலில அம்மான்னு கத்தனுன்னு தோனுச்சி ஆனா முடியல அதற்கு பதிலா ரங்கசாமி கைய அழுத்தி புடிசிகிட்டேன். அந்த டாக்டர் First Aid முடிச்சிட்டு ambulance வரவைத்து GH ல சேர்த்தார். மூன்று நாள் அங்க தான் இருந்தேன். அப்ப தான் எனக்கு Hart attack first stage ன்னு தெரிந்தது.

இத ஏன்டா நீ அப்ப சொல்லல என்று அப்பா வேதனையோடு கேட்டார்.

சொல்றதுனால எதுவும் use இல்ல பா. அந்த வலி நா வாழ்ந்த லைப் ஸ்டைல் எனக்கு கொடுத்தது. இந்த யோகா, தியானம் இந்த சாப்பாடு முறை ,லைப் ஸ்டைல் எல்லாம் சாமியார்களுக்கு இல்ல பா இது தான் நம்ம வாழ்கை முறை, நீயும் சின்ன வயசுல இப்படிதான் இருந்திருப்ப.

 சின்ன வயசுலிருந்து என்னோட உடம்ப கெடுக்க எனக்கு லட்ச கணக்குல செலவாகி இருக்கும் அத மறுபடியும் நல்லா மாத்த ஐந்தாயிரம், பத்தாயிரம் குடுத்தா  ஒன்னும் தப்பு இல்ல. எனக்கு தேவைன்னு மனசுல தோணுச்சி  யோகா கத்துகிட்டேன், உணவு, உடம்பு பத்தி கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன்.

எனக்கு தேவை என்பதன்னால யார் எது சொன்னாலும் என்னால நம்ப முடியாது பா. எனக்கும் பகுத்தறிவு இருக்கு. எனக்கு என்ன வேணுன்னு எனக்கு தெரியும். இன்னக்கி என்னோட உடம்புல எந்த நோயும் இல்ல, விவசாயத்திலும் tension இருக்கு, ஆனா அத எப்படி கையாளனும் என்று எனக்கு தெரியும். நீ இங்கு இருக்கும் இன்னும் கொஞ்ச நாள் வரைக்கும் நா சொல்றத கேளு பா.  

அப்பா அன்று இரவு வெகு நேரம் தூங்கவில்லை. மறுநாள் காலை குளித்துவிட்டு யோகா மேடையில் அஸ்வினுக்காக காத்துக்கொண்டு இருந்தார்.



நன்றி : HEALER BASKER ( http://anatomictherapy.org/

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

கிராமத்து சிற்றுணவும் CHIPSம்

பள்ளி விடுமுறை நாள் ஒன்றில் நானும் கூட்டாலி வெகுளி கோபாலும், காலையில் கேள்விறகு கூழை  வெள்ளம் கடித்து குடித்து விட்டு கிளம்பினோம். ஒரு நீண்ட மூங்கில் அதன் மேல் ஒரு நீண்ட சோல தக்கை, தக்கையின் இறுதியில் சற்று பிளந்து ஒரு சிறிய குச்சி சொருகி கட்டிகொண்டோம்  ( தொறடு ). பள்ளிக்கு எடுத்து செல்லும் மஞ்சள் பை ஒன்று எடுத்துக்கொண்டோம். மாடு மேய்க்கும் பொழுது  பார்தேன்டா காணாத்து ஓரம் கோணக்கா மரத்துல ( கொடுக்கா புலி ) லட்டு லட்டா தொங்குது என்று கோபால் கண்களை விரித்தான். தொரடை எடுத்துக்கொண்டு ஐந்து நிமிடத்தில் கானாற்றை அடைந்தோம். கானாறு தண்ணிரை கானா ஆறு. அதன் ஒரு பக்க நெடுக்கிலும் கோணக்கா மரங்கள். நான் தொரடில் கோணக்கா அறுக்க ஆரம்பித்தேன். சிவந்து வட்ட வட்டமாக காய்கள்.அவைகள் எப்போதும் காய்கள் தான். வெளியே தோல் மட்டும் சிவக்கும். உள்ளே வெண்ணிற சோறு பழுக்காது . மூன்று  வகையான கோணக்க உண்டு. ஒரு வகை சுவைக்கும் , எவ்வளவு வேண்டுமானாலும் தின்னலாம், மறு வகை துவர்ப்பு , ஒன்று தின்றாலே தொண்டை அடைக்கும். இன்னொரு வகை இனிப்பும் இல்லாமல் துவர்ப்பும் இல்லாமல் வெறும் சோறு தின்பது போல இருக்கும். கோணக்க மரம் ஒரு அரசமரம் போல பெரியதாக வளரும் ஆனால் முட்கள் நிறைந்தது . எனக்கும் ஒரு முள் காலில் ஏறியது. ஆ..என்று முல்லை வெளியே எடுத்தால் கொஞ்சம் ரத்தம் வெளியில் வந்து புன்னகைத்தது. கோபால் ஓடி சென்று ஒரு  எருக்கம் இலையை பரித்துவந்தான். அதில் வரும் பாலை ரத்தத்தை துடைத்துவிட்டு அந்த இடத்தில் ஒற்றினான். சில்லென இருந்தது. பின்பு அதன் மீது கொஞ்சம் மண்ணை எடுத்து தூவினான்.  பை முழுவதும்  கோணக்காய் நிரம்பியது. இதுவே போதும் என்று பங்கு பிரித்து கொண்டு நடந்தோம். வழியில் ஒரு உயரமான வரப்பில் அமர்ந்துகொண்டு கோணக்காய் முழுவதும்   தின்று தீர்த்தோம். காலுக்கு கிழே ஓடிய கால்வாய் நீரை எடுத்து குடித்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். 

 
இன்னொரு நாள் மாலை கோபால் ஓடிவந்து  " பக்கத்துக்கொல்லியில் ஆளடுறாங்க வரியா போலாம் " என்றான்.

ஆளை ஆடுதல் என்றால் ஆலையில் கரும்பை பிழிந்து வெல்லம்  செய்தல் என்று பொருள். இருவரும் ஆலை இருக்கும் இடத்துக்கு சென்றோம். அடிகரும்பை  உடைத்து தின்றோம். கரும்பு ஆலை ஒரு சிறிய இயந்திரம். அதில் மூன்ரு இரும்பு உருளைகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு சுற்றுமாறு பொருத்தப்பட்டு இருக்கும். இதை மோட்டாருடன் இணைக்க ஒரு பெரிய சக்கரம் இருக்கும். பிழிந்த கரும்பு சாறு ஒரு தொட்டியில் சேகரித்து வைப்பார்கள். இந்த சாற்றை கொதிக்க வைக்க இரண்டு மீட்டர் விட்டம் உள்ள பெரிய அடுப்பு அதை விட சற்று பெரிய கொப்பரை இருக்கும். கொப்பரையின் பாதி அளவு கரும்பு சாறு நிரப்பப்படும். அடுப்பை எரிக்க கரும்பு சக்கை காயவைத்து பயன்படுத்துவர். காய்ந்த சக்கைக்கு  ' கோது ' என்று பெயர். சாறு சற்று கொதித்ததும் கொஞ்சம் சுண்ணாம்பு நீர் சாற்றில் விடுவார்கள். சிறிது நேரத்தில் கருப்பான அழுக்கு மற்றும் சகடுகள் மேலே மிதக்கும். ஒரு முனையில் சிறிய கூடை பொருத்திய  நீண்ட கொம்பு மிதக்கும் அழுக்கை எடுக்க பயன்படும். இந்த அழுக்கும் சகடும் பன்றிகளுக்கு உணவாக கொடுக்கிறார்கள். இனி கொஞ்சம் ஐட்ரோஸ் என்ற வேதிப்பொருள் கலந்தால் வெல்லம்  மஞ்சளாக வரும். சிலர் வெண்டக்காய் செடியை இடித்தும் போடுவார்கள். எதுவும் கலக்கவில்லை என்றால் கருப்பாக வரும்.  
ஆற்று ஓரம் விளையும்  கருப்பில்  வெல்லம்  மஞ்சளாக வரும்.ஒரு கம்பில் கலக்கி கொண்டே இருந்தால் சாறு கொஞ்சகொஞ்சமாக வெல்ல பாகாக மாறும். பதம் பார்க்க பாகை கொஞ்சம் தண்ணீரில் விட்டால் முற்றிலும் கரைந்து விட்டால் பதம் இன்னும் வரவில்லை என்று அர்த்தம். அடியில் தேங்கினால் பதம் வந்து விட்டது என்று பொருள். பாகின் மனம் சுவையான மனம் , அது உடல் முழுவதிழும் பரவும். நான்கு பேர் சேர்ந்து கொப்பரையை தூக்கி பாகை ஒரு அகலமான தொட்டியில் ஊற்றுவர். ஊற்றிய பாகை ஒரு முனையில் சிறிய பலகை பொருத்தப்பட்ட கம்பில் துழவிக்கொண்டே இருப்பர் . பாகு சூடு குறைந்து கெட்டியாகத்துவங்கும். முழுவதும் கெட்டியானபின் பாகு, வெல்லமாக மாறும். உதிரி நிலையில் இருக்கும் வெல்லத்தை ஒரு கை குட்டை போன்ற துணியில் இரண்டு கைநிறைய எடுத்து வைத்து உருண்டை உருட்டுவர். உருண்டைகள் சிறிது நேரத்தில் காய்ந்து விடும்.

அங்கு இருந்தவர் கொஞ்சம் சூடான வெல்லத்தை கையில் கொடுத்தார். எங்களுக்கு ஜோங்கு  வெல்லம் வேண்டும் என்றோம். ஒரு சிறிய கரும்பு துண்டை உடைத்து அதன் ஒரு முனையில் கொப்பரையில் மீதம் இருந்த பாகை எடுத்து சுருட்டி தண்ணிரில் நனைத்து கொடுத்தார். பாகு இளம் சூட்டில் மெது மெதுவென இருந்தது. அப்பா அதன் சுவை இன்று நினத்தாலும் நாவில் உமிழ் ஊருது.

ஒரு நாள் நாவல் பழம் தின்னலாம் என கன்னி கோவிலுக்கு சென்றோம். மரம் நல்ல உயரம். நாவல் மரம் வழுக்கும் எளிதில் ஏறமுடியாது. கிழிருந்தே அடிக்கலாம் என கர்களை எடுத்து வந்தோம். கல்லடி அதிகம் வாங்கும் மரங்கள்  மாமரம், புளிய மரம், நாவல் மரம். நம் மூலை அபாரமானது , கண்களில் பழத்தின்  தூரத்தை கணக்கிட்டு எந்த  திசையில் இவ்வளவு விசையில் கல்லை  எரிய வேண்டும் என நொடிபொழுதில் கணக்கிட்டு விடும். கோபாலு கர்களை எறிவதில் கில்லாடி, ஒருகாலை தூக்கி கொண்டு கல்லை முத்தமிட்டு குறிபார்த்து எறிவான் . நாவலின் அடர் நீலம் நாவில் படரும்.  துவர்ப்பும் இனிப்பும் வாய் முழுவதும்  பரவி தொண்டையில் சற்று அடைக்கும். உப்பும் சேர்த்து தின்றால் சுவை கூடும்.  நாவல் மர கிலையில் வில் செய்தால் அம்பு   வெகு தூரம் வரை பாய்ந்து செல்லும் என ஒரு பெரியவர் சொல்லி  கேள்வி பட்டு இருக்கிறேன்.

என் சிறிய வயதில் நாட்டு  பப்பாளி மரம் எங்கள் வீட்டு பின்புறம்  இருந்தது. காய் பழக்காயாக  இருக்கும் போதே பறித்து விடுவோம். உயரமான மரம் என்பதால் குச்சியில் பப்பாளியை தள்ள முடியாது. அதனால்  நான் தான் மரத்தில் ஏறுவேன்.மரத்தில்  இரண்டு கால்களையும் பின்னிக்கொண்டு இரண்டு கைகளாலும் பழத்தை அறுத்து கிழே போடுவேன். மரத்திலிருந்து கிழே இறங்கும் பொது  மேலே பார்க்கக்கூடாது. பழம்  அறுத்த இடத்திளிருந்து  பால் வடியும் , அது கண்களில் பட்டால் கண்கள் சிவந்து எறியும். பழக்காயை அடியில் செதுக்கி விட்டால் இரண்டு நாளில் பழுத்து விடும். பழக்காயை முழுவதுமாக தோல் சீவி சாப்பிட்டால் வெள்ளியே சற்று கடினமாகவும் உள்ளே பழமாகவும் சுவையில் திளைக்கலாம்.

வெயில் காலம் பன நுங்கு காலம். பனமரம் ஏற கூடுதல் கவனமும் பழக்கமும் வேண்டும். எங்கள் நிலத்தில் பனைமரங்கள் இருந்தது. ஆள் வைத்து தான் நுங்கு வெட்டுவோம். என் அண்ணன்கள்  நுங்கு சீவி தருவார்கள்.முதல்லில் இளம் நுங்கு கிடைக்கும். அதை விரைவாக தின்றுவிட்டால் அடுத்து முற்றிய
நுங்கு கொடுத்து விடுவார்கள். அதை கஷ்ட்டப்பட்டு  நோண்டி தின்பதற்குள் அவர்கள் எல்லாம் முடித்துவிட்டு கிளம்பி இருப்பார்கள். ஒரு மாதம் கழித்து வெட்டாத நுங்கு பழுக்க துவங்கும். பழக்காயாக இருக்கும் பொது அதை சீவி ஒரு பானையில் உப்பு போட்டு வேகவைத்தால் அதற்க்கு சக்கை என்று பெயர். அதன் மனம் வீடு முழுவதும் பரவும் சுவை நா முழுவதும் பரவும். பனம்பழம் பழுத்து ஒவ்வொன்றாய்  கிழே விழும். அதை பிளந்தால் மூன்று பகுதியாக பிரியும். உள்ளே மஞ்சள் நாறாக, நார் முழுவதும் சாறாக இருக்கும். பனம்பழத்தை நெருப்பில் சுட்டு தின்றால் அதன் சுவையை எந்த வார்த்தை கொண்டு எழுதுவது தெரியவில்லை. பழத்தை  சுடாமல் ஒரு மண் மேடு அமைத்து புதைத்து வைத்தாள் அது வேர்விட்டு , வேர் பனங்கிழங்காக மாறும். கிழங்கை அவித்து தின்னலாம். கிழங்கு வராத கொட்டையை குறுக்காக வெட்டினாள் உள்ளே தேங்காய் பூ  போல இருக்கும். அதை  வாயில் போட்டால் பஞ்சை தேனில் நனைத்து வாயில் போட்டது போல இருக்கும்.

எங்காவது தென்னை மரம் வெட்டினால் எங்களுக்கு கொண்டாட்டம் தான். மரம் வெட்டிகள் மரத்தின் தலையை வெட்டி ஓரமாக போட்டு விடுவார்கள். அதை நாங்கள் ஒவ்வொரு மட்டையாக குருத்துவரை வெட்டுவோம். தென்னங்குருத்து வெண்மஞ்சலில்  துவங்கி போகப்போக வெண்ணிறமாக இருக்கும். பார்க்கவே அழகாக இழைத்த தந்தம் போல. அதை சாப்பிட்டால் கெட்டியான வெண்ணிலா  ஐஸ் கிரீம் போல சுவைக்கும். நல்ல  வைரம் பாய்ந்த பட்டு போன மரத்தை துண்டாக வெட்டினால் வெட்டிய பகுதியிலிருந்து  நீர் சுரக்கும். அதை ஒரு பாத்திரத்தில் சேமித்து குடித்தால் இளநீரைவிட இரு மடங்கு சுவைக்கும். அரசு தென்னை மரத்திலிருந்து   கள் இறக்க அனுமதித்த பொழுது எங்கள் தோப்பிலும் கள் இறக்கினோம். தென்னம் பாலையை பாதியாக அறுத்து முனையில் கயிர் கொண்டு கட்ட வேண்டும். அதை ஒரு மர சுத்தியல் கொண்டு தட்ட வேண்டும். ஒரு பானையை அதன் மேல் கவிழ்த்தால் மறுநாள் அதில் கள் வடிந்திருக்கும். பானையின் உட்புறம் சுண்ணாம்பு தடவி வைத்தால் பதநீர் வடிந்து இருக்கும். ஒருமரத்து கள் உடம்புக்கு நல்லது என்பர். புதியதாக இறக்கப்பட்ட கள்ளில் பழைய கள் மற்றும் சாக்கிரீம் வேதிப்பொருள் , நீர் கலந்து வியாபாரம் செய்தனர்.

ஒடுக்கத்தூர் கொய்யாபழம் என்றால் வேலூர் மாவட்டத்தில் பிரபலம். மலை சார்ந்த இடம் ஒடுக்கத்தூர். ஆதலால் அந்த ஊர் கொய்யாபழம் தனி சுவை. பக்கத்து தோட்டத்தில் ஒரு மரம் இருந்தது. அதன் பழம் உள்ளே வெண்சிவப்பு வெளியே பச்சைநிறம். அதன் வாசமே எங்களையும் பறவைகளையும் இழுக்கும்.

இந்த பட்டியல் வெகு நீளமானது தென்னை மர பொந்தில் சிறு தேனீக்களை விரட்ட துளசி இலைகளை மென்று அதன் மேல் துப்பி தேனாடையை வாயில் போட்டு  சுவைத்திருக்கிறோம். இரவு நேரங்களில் வேர் கடலை செடியை பிடுங்கி கால்வாய் தண்ணீரில் கழுவி  மண் மனத்தோடு தின்றிருக்கிறோம். அம்மியில் உப்பும், மிளகாய் தூளும் வைத்து நசிக்கிய வெட்டு மாங்காய் , உப்பு தடவிய சிறு நெல்லி, பொறிகலந்த  வறுத்த ஈசல், பழுத்த ஈச்சம் பழம் , மந்தகாளி பழம், சுட்ட கேள்விறகு கதிர், வெள்ளம் கலந்த கம்பு, வறுத்த சோளம், பாதி பழுத்த புளியம் பழம், கோவை இலை எழுதும்  பலகைக்கு கோவை பழம்  எழுதும் நமக்கு.

நாக்கு இந்த அணைத்து சுவைகளையும மூளையில்  அதற்கான  folder யில்
சேமித்து வைத்துள்ளது. சுவைகள்  மறக்காமல்  இருக்கவே நாக்கு எப்போதும் ஈரமாகவே உள்ளது. 

இதில் ஒன்றை கூட என் மகன் விரும்பி உண்பான என ஐயம் தான். அவனுக்கு தெரிந்த சிற்றுணவு சிப்ஸ் மற்றும் சில பிஸ்கட் வகைகள். கிராமத்து   சிற்றுணவு ஒரு தனி உலகம் அதில் சுவை ஒரு அழகான தேடல். அந்த உலகம் என் மகனுக்கு  அறிமுகம் ஆகாமலே போகும் என்பதை நினைத்தால் வருத்தமாகவே உள்ளது. 


செவ்வாய், அக்டோபர் 01, 2013

அம்மாவும் அம்மாவீடும்

அரியூர்

வேலூர் அணைக்கட்டு சாலையில் உள்ள சிறிய ஊர் அரியூர். என் அம்மாவின் ஊர் . வேலூர் ஜெயிலிலிருந்து 5 km தூரம் இருக்கும். என் சிறிய வயதில் ஒரு மாத பெரிய விடுமுறைக்கு ஆயா , தாத்தா வீட்டுக்கு செல்வேன். அன்று நான் பார்த்த ஊருக்கும் இன்று பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். முக்கிய காரணம் இந்த ஊரின் அருகில் புதியதாக முளைத்திருக்கும் பொற்கோவில்.

ஊரின் கீழ் பகுதியில் முஸ்லிம் மக்களும் ஒரு மசூதியும் ஒரு கடை தெருவும் இருகிறது. அதற்கும்  மேற்பகுதியில் ஹர்ஜன மக்கள் வாழும் தெருக்கள் இருகிறது.  அதை தொடர்ந்து அனைத்து சமுக மக்களும் வாழும் பகுதியும் இருக்கும்.

மோட்டு பஜார் என்ற கடைத்தெரு உள்ளது. அது தான் இந்த ஊரின் முக்கிய பேருந்து நிற்கும் இடம். காலையும் மாலையும் வேலைக்கு செல்வோர் வருவோர் இங்கு கூடுவர்.

பொற்கோவில் அம்மா சாமீ வளரும்  போது இந்த ஊரின் சுற்றி இருந்த பகுதிகள்  அனைத்தும் விலைக்கு   வாங்கப்பட்டது. சில இடங்கள் ஆயிரங் கலில்,  சில இடங்கள் லட்சம் கோடிகளில். ஊரின் தோற்றம் முற்றிலும் மாறியது. பெரிய பெரிய வீடுகள் கடைகள் முளைத்தன. பொற்கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான மருத்துவமனை, பள்ளிகூடம் , விடுதிகள் என ஒரு பெரிய ஊராக மாறிவிட்டது.

இன்று பொற்கோவில் இருக்கும் இடம் முன்பு மலைக்கோடி என்ற சிறிய கிராமமாக இருந்தது. ஒரு சிறிய மலை மேலே முருகன் கோவில் இருக்கும் . என் தாத்தா அங்கு காவடி எடுத்து செல்வார். சுற்றி இருந்த கிராமங்களிலிருந்தும் காவடி எடுத்து வருவார்கள். இப்போது அந்த கோவில் இருப்பதாக தெரிய வில்லை.  அரியூரிளிருந்து நிறைய பேர் இங்கு சிறிய பணிகளுக்கு செல்கிறார்கள்.

இன்றைய நிலையில் அரியூர்  வேலூருக்கு அருகில் இருக்கும் ரியல் எஸ்டேட் தங்க சுரங்கம். Sq ft 2000 முதல் 3000 வரை போகிறது.

தாதா வீடும் தொழிலும் 

இப்போதைக்கு அந்த ஊரில் மிகவும் பழமையான வீடு அந்த வீடு. நுழைவாயிலின் இருபுறமும் பெரிய திண்ணைகள். அதை தொடர்ந்து சிறிய தாழ்வாரம். வலதுபுறம் ஒரு அறை, அது பூஜை அறையாக இருக்கிறது. அதை தொடர்ந்து இடப்புறம் ஒரு  தாழ்வாரம் நீளும். அதன் இறுதியில் ஒரு பெரிய அறை இருக்கும். வீட்டின் பின்புறம் இரண்டு அறைகள் கொண்ட ஓட்டு வீடு. இறுதியாக ஒரு கிணறு.

80 களின் இறுதியில் இந்த வீட்டில் ஒருமாதம் பள்ளி விடுமுறை நாட்களில் தங்கி இருக்கிறேன்.


என் தாத்தா தி.க. ராமன் , பாட்டி கமலா. தாத்தா சற்று பருமனான உருவம். கொஞ்சம் சாயிந்து , சாயிந்து நடப்பார். ஒட்ட நறுக்கிய தலை முடி, நெற்றி  நிறைய விபுதி , முட்டி வரை கதர் வெண் ஜூ ப்பா, வெள்ளை வேட்டி அணிந்து இருபார். காலையில் எழுந்து சூரியனை பார்த்து மந்திரம் சொல்லுவார். பின்பு பூஜை அறையில் நின்று சுப்ர பாதம் சொல்லுவார். உடல் நிலை சரி இல்லாமல் யாராவது வந்தால் மந்திரம் சொல்லி வேப்பிலை அடித்து திருநீர் கொடுப்பார் . எப்போதாவது சிரிப்பார். ஆயா ( பாட்டி ) மஞ்சள் பூசிய மங்களகரமான முகம் அந்த காலத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார்.

இவர்களுக்கு ஐந்து பெண்கள் மற்றும் கடைசியாக அவர்கள் எதிர் பார்த்தது போலவே எங்கள் மாமா.

இவர்களின் முக்கிய குடும்பத் தொழில் பீடி சுற்றுவது.  ராதா  கிஷ்ணா பீடிகள் என்று பெயர். அரியூர்  முதல் அணைக்கட்டு, ஒடுக்கத்தூர்,ஆலங்காயம் வரை வழியில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் சைக்கில் மற்றும் பேருந்தில் சென்று பீடி விநியோகம் தாத்தா செய்தார்.

பீடி ஒரு முக்கியமான குடுசைத் தொழில் , நிறைய கிராம பெண்கள்  இந்த தொழில் செய்கிறார்கள். பீடிக்கான முக்கிய மூலப் பொருட்கள் பீடி இலையும், புகை இலை  தூளும். இவை இரண்டும்  ஒரிசா மற்றும் அசாம் மாநிலத்திலிருந்து வேலூர் மார்கெட்டுக்கு வருகிறது. பீடியின் தரம் இந்த இலை, மற்றும் புகை இலையின் தரத்தை பொறுத்து அமையும். நல்ல இலையாக இருந்தால் ஒரு கிலோ இலை, 200 கிராம் புகை இலை தூளூக்கு 1000 பீடிகள் வரை வரும்.

இலையை ஒரு நாள் முழுவதும் தண்ணிரில் ஊறவைக்க வேண்டும். பின்பு சீசா என்ற  தகட்டை அளவாக வைத்து  இலைகளை கதிரிகோலால் வெட்ட வேண்டும். சீசா தகட்டின் அளவை பொறுத்தே பீடியின் அளவு இருக்கும் .வெட்டிய இலைக்குள் புகை இலை தூளை  உள்ளே வைத்து சுருட்ட  வேண்டும். பின்பு மெல்லிய நுர்கண்டால் கட்ட வேண்டும். இப்போது ஒருபுறம் அகலமாகவும் மறுபுறம் குறுகியும் பீடி இருக்கும். அகலமான திறந்த பகுதியில் மறுபடியும் புகை இலை  தூளை நிரப்பி மூட வேண்டும். பீடியின் இரண்டு பக்கம் மூடுவதற்கு சிறிய விரல் நீளமே உள்ள கத்தி பயன் படுத்துகிறார்கள். இந்த வேலைக்கு புண்ணி மூடுதல் என்று பெயர்.

24 பீடிகள் ஒரு கட்டாக கட்டி மறுபடியும் நாள் முழுவதும் வெயிலில் காயவைத்து பின்பு ஒவ்வொரு கட்டாக எடுத்து பீடியின் தரம் பார்க்கப்படும்.
அளவு குறைந்த பீடிகள், வளைந்த பீடிகள், சரியாக இறுக்கி சுற்றாத பீடிகள் களையப்படுகிறது. இந்த வேலைக்கு கழித்தல் என்று பெயர். பின்பு ஒரு சதுரமான காகிதத்தில் கட்டை வைத்து மடித்து ஓட்ட வேண்டும். பின்பு 14 கட்டுகள் சேர்த்து  லோகோ போட்ட பேப்பரில் ஒரு பண்டலாக சுற்றி ஒட்டப்படுகிறது.

பீடி சுற்றுதல் மற்றும் கழித்தல் ஆகிய வேலைகளை முக்கியமான ஆட்கள் செய்கிறார்கள்.புண்ணி மூடுதல் மற்றும் பண்டல் பொடுதலை சிறியவர்கள் செய்கிறார்கள். நிறைய முஸ்லீம் பெண்கள், கூலிக்கு பீடி சுற்றி கொடுத்தார்கள். தினமும் பீடியை சுற்றி கொடுத்து விட்டு ஒரு சிறிய நோட்டில் குறித்துவைத்துக்கொண்டு மாதா  மாதம் கூலியை பெற்றுக் கொண்டார்கள்.அவர்கள் பெரும்பாலும் தாத்தாவை " நைனா " ( அப்பா ) என்றே அழைத்தார்கள்.

தாத்தா காசை மிகவும் சிக்கனமாக செலவழித்தார். ஐந்து பெண்களுக்கும் ஒரு மகனுக்கும் திருமணம் செய்வித்தார். திருப்பதி பெருமாள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார். இறக்கும் வரை உண்டியல் கட்டி வருடா வருடம் திருப்பதி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்த வீட்டினுள் எப்போதும் பீடி இலையின் வாசனை உலவிக்கொண்டே இருக்கும். அந்த வீட்டில் யாரை நினைத்தாலும் அந்த வாசமும் சேர்ந்தே ஞாபகம் வரும். தாத்தாவை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அந்த வாசம் தான். 

மாமா ஒரு நிழல் 

நான் எப்போது விடுமுறைக்கு சென்றாலும் மாமாவுடன் தான் அதிகநேரம் சுற்றுவேன். 80களின் இறுதியில் அவருக்கு திருமணம் ஆகாமல் இருந்தது. தாத்தா சற்று தளர்ந்ததும் கடைகளுக்கு பீடி இவர்தான் எடுத்து செல்வார். பெரும்பாலும் அவர் எங்கு சென்றாலும் நானும் உடன் செல்வேன். வேலூர் சற்று பரிச்சயம் ஆனது அவரால் தான்.

அம்புலி மாமா புத்தகம் அதிகம் வாசிப்பார். அவருடன் சேர்ந்து  நானும் வாசிப்பதுண்டு. அந்த புத்தகத்தில் வரும் அந்த கால ராஜாக்கள் மற்றும் குடிமக்கள் பற்றிய கதைகள் அதில் வரும் ஓவியங்கள் மனதில் அப்படியே பதிந்துள்ளது. பின்னாளில் இந்த பதிவுகளின் தொடற்சியாக வரலாற்று நாவல்களை தேடித்தேடி படித்தேன். அம்புலி மாமா புத்தகம் ஒரு கட்டத்தில் பதிப்புகள் நிற்று விட்டன. இப்போது மறுபடியும் கிடைகிறது போலும்.

 நானும் மாமாவுடன் சேர்ந்து சிறு சிறு வேலைகள் செய்வதுண்டு. ஒரு சிறிய ரேடியோ வீட்டில் இருந்தது .செய்திகள், கர்நாடக இசை என்று மதிய வேலை முதல் மாலை வரை ஒலித்துக்கொண்டே இருக்கும். பெரும்பாலும்  பீடி சுற்றும் நபர் அருகில் ரேடியோ ஒலித்துக்கொண்டு இருப்பதை பார்த்திருக்கிறேன். மாமாவுக்கு பழைய  A.M.ராஜா மற்றும் P.B. ஸ்ரீநிவாஸ் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவருடன் சேர்ந்து எனக்கும் பிடித்துபோக "பாட்டு பாடவா பாட்டு  கேட்டகவா" பாடலில் துவங்கி எண்ணற்ற பாடல்கள் மனனம் செய்து பாடிக்கொண்டு இருந்தேன்.

பெரும்பாலும் எனது கிராமத்தில் விளம்பரம் செய்து கொண்டு வரும் ஆட்டோ பின்னால் நான் ஓடி இருக்கிறேன். ஆனால் முதல் முறையாக பீடி விளம்பரம் செய்ய  வில் நானும் மாமாவும் சென்றோம். "இனிக்க மனக்க புகைக்க சிறந்தது ராதா கிர்ஷ்ணா பீடிகள்" , வாங்கி புகைத்து மகிழுங்கள்  ராதா கிர்ஷ்ணா பீடிகள் என்று  ரேடியோவில் தொடர்ந்து  ஒலிக்க எல்லா கிராமங்களுக்கும் சென்றோம். ஆட்டோ பின்னால் ஓடிவந்த குழந்தைகளுக்கு நோடீஸ்சை தூக்கி எரிந்துகொண்டே வந்தேன்.

தொரப்பாடி டென்ட் தியேட்டரில் பழயப்படங்கள்  நிறைய பார்ப்போம். சந்தொரோதயம் M.G.R படம் பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது. ஒரு ரூபாய்  டிக்கெட், தரையில் நன்றாக காலை நீட்டி அம்மர்ந்து கொள்ளலாம். பீடி புகையின் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். இடைவேளையில் முறுக்கும் டீயும் கிடைக்கும். சிறிய  வயதில் என்  அம்மா இந்த தியேட்டரில் படம் பார்த்ததாக சொன்னார்கள். ஆனால் இப்போது தியேட்டர் இல்லை, வீடுகள் ஆகிவிட்டது.

மாமாவும் அந்த வீடும் ஒரு பெரிய மரத்தின் நிழல் போல, தேடி திரிந்து , தொலைந்து , கிடைத்து , மகிழ்ந்து , அழுது , களைத்து அமரலாம் என்று எங்களில் யாருக்கு தோன்றினாலும் நினைவுக்கு வருவது மாமாவும் அந்த வீடும் தான். ஐந்து அக்காமார்கள் , அவர்களின் பதினேழு பிள்ளைகளின் இன்ப துன்ப நிகழ்வுகளில் அவரின் உதவியும் பார்வையும் இருக்கும். என் பெரியம்மா ஒருவர் நோய் வாய் பட்டு இறக்கும் தருவாயில் மாமா தான் பார்த்துக்கொண்டார். இன்றும் என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்றால் மாமா வந்து ஒரு முறை பார்க்க வேண்டும் என்று நினைப்பார். வருடம் தோறும் தன் அக்காக்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் யார் வருகிறார்களோ அவர்களை அழைத்துக்கொண்டு திருப்பதி சென்று வருகிறார்.

எங்கள் மீதும் என் அப்பா மீதும் உள்ள நம்பிக்கையை விட அம்மாவுக்கு தம்பி மீது அதிக நம்பிக்கை உள்ளது.

அம்மாவும் அம்மாவீடும் 

அம்மா அப்பாவின் கல்யாணம் 1970 ல் நடந்திருக்கலாம் .அப்போது அப்பாவுக்கு 30 வயது அம்மாவுக்கு 14 வயது. கல்யாணத்துக்கு முதல் நாள் தான் என் அப்பா, அம்மாவை பார்த்தாராம். அம்மாவும் அப்படியே. பெண் பிடிக்காமல் அப்பா தென்ன தோப்பில் யாருக்கும் தெரியாமல் படுதுக்கொண்டராம். எல்லோரும் சென்று அவரை தேடி சமாதான படுத்தி அழைத்து வந்திருகிறார்கள். இதை அறிந்ததும் அப்பாவின் பழைய புகை படத்தை தேடி எடுத்து பார்த்தேன் . ஒல்லியான உருவம் இயல்பான கருப்பு , தலை முடி கர்லிங் வைத்து பெரிய கிர்தா  வைத்து அந்த கால ஹீரோக்களை பிரதி பலித்தார். அம்மா நல்ல நிறம் அழகும் கூட ஆனால் உலகம் அறியாதவர். வயதில் சிறிவர், ஆதலால்அப்பாவின் கிண்டல் பேச்சு அம்மாவை எளிதில் ஓடிக்கி விட்டது. இன்றும் அது தொடர்கிறது. மற்ற படி அவர்களின் வாழ்வியல் முறை எல்லோரும் போலவே அது வேறு தளம்.  

சமிபத்தில் அம்மாவும் நானும் அவர்கள் வீட்டுக்கு சென்றிருன்தோம். அன்று ஒரு நிகழ்வை கவனித்தேன். அம்மா முகம் எப்போதும் இல்லாமல் மலர்ந்தது. சின்ன சின்ன விசயத்திற்கு கூட வாய்விட்டு சிரித்தார். காலை நீட்டிக்கொண்டு வெகு நேரம் கதை பேசிக்கொண்டு இருந்தார்.  வழக்கத்திற்கு மாறாக அதிகம் சாப்பிட்டார். ஒரு குழந்தை போல நான் என் அம்மாவை அன்று உணர்ந்தேன்.
காலையில் தனக்கு பிடித்த சேமிய வாங்கி வரச்சொன்னார். அது ஒரு சுகந்திரமான மகிழ்வு நிலை. அது அனுபவத்தில் புரியும்.

பிறந்த வீடு சிலருக்கு ஒடுக்கப்படும் அனைத்து  இயல்புகளையும் வெளிப்படுத்தும்  தளமாகவும், வெகு தூரம் சுடும் தரையில் நடந்தபின் கிடைக்கும் ஒருகுடம் குளிர்ந்த நீர் போலவும் இருக்கிறது.

அம்மா இருக்கும் வரைதான் அம்மா வீடு என்றொரு வழக்கு ஆனால் என் அம்மாவுக்கு அது விதிவிலக்கு.






















செவ்வாய், செப்டம்பர் 17, 2013

மொக்க சிவா - வெகுளி கோபாலு -1

மொக்க சிவா : டே கோபாலு அறிவாளிங்க இருண்டு வக உண்டு ஒன்னு பொறக்கும்போதே அறிவாளியா பொறக்கிறவங்க இனொன்னு கஷ்டப்பட்டு அறிவாளியா ஆரவங்க.

வெகுளி கோபாலு : ஓஹோ ....

மொக்க சிவா : அதே மாதிரி முட்டாளுங்க  இருண்டு வக உண்டு , ஒன்னு பொறக்கும்போதே  முட்டாளா  பொறக்கிறவங்க இனொன்னு கஷ்டப்பட்டு முட்டாளா ஆரவங்க. 

வெகுளி கோபாலு :    அது யாருண்ணே  கஷ்டப்பட்டு முட்டாளா ஆரவங்க. 

மொக்க சிவா:   நம்மள நாலுபேரு பாரட்டனுமுனு கஷ்ட படரானே அவன்தாட அது.

வெகுளி கோபாலு : நீங்களே அதானே பண்றீங்க 

மொக்க சிவா:  என்னடா பண்றது எனக்கும் கொஞ்சநேரம் முட்டாளா  இருக்கணுன்னு ஆச வருது.

வெகுளி கோபாலு: அட போங்கண்ணே நீங்க எப்ப அறிவாளியா இருந்திருகிங்க ........

மொக்க சிவா: .........

திங்கள், செப்டம்பர் 16, 2013

மங்களூர் -3

Kateel Durga Parameshwari Temple 


மங்களுரிளிருந்து 28km தொலைவில் உள்ளது இந்த கோவில். சாலை மலைக்காடு வழியே வளைந்து நெளிந்து சென்றுகொண்டே இருந்தது.

ஒரு மலை முகட்டில் நின்று பார்க்கும் போது தூரத்தில் ரயில் ஒன்று  வேலை முடிந்து வயலின் நடுவே வரப்பில் நடந்து போகும் பெண்களை போல நடந்து கொண்டிருந்தது. 












வழியெங்கும் சலசலத்து வழிந்தோடும் மழை நீர் ஓடைகள். தினசரி காடுகள் அழிப்பு, பூமி வெப்பம் ஆதல், காயிந்து கிடக்கும் ஆறுகள் , மழை இல்லாமல் வறட்சி என எதாவது ஒரு செய்தி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறது. நாம் அழிவை நோக்கி போகிறோம் என்ற எண்ணம் மனதில் ஆழமாகிக்கொண்டே இருக்கிறது. இது போல மரங்களையும், மலையில் வழிந்தோடும் மழை நீரையும் காணும் போது மனம் நம்மமை அறியாமல் நம்பிக்கையில் லைக்கிறது. காடுகளின் வழியே நானும் வழிந்தொடிக்கொண்டு இருப்பது போல இருந்தது. வழியில் டீ கடை இருக்கிறதா என தேடினோம். ஆனால் வழியில் நிறைய BAR கள் இருந்தது. ஜெயமோகன், யானை டாக்டர்  கதையில், காடுகளில் இளஞர்கள் குடித்துவிட்டு உடைத்து எறியும் பாட்டில்களை யானைகள் மிதித்து அதன் கால்கள்  சேதம் அடைந்து உயிர் இழப்பதை  குறிப்பிட்டது ஞாபகம் வந்தது. 

"காடு, மரங்களின் வீடு , ஒவொரு மரமும் ஒரு வீடு."










Kattel என்றால் நதியின் இடை என்று பொருள். காட்டு நதி நந்தினி. அதன் இடையில் அமர்ந்துள்ளது போல கோவில் உள்ளது.

திடீர் என காட்டிலிருந்து பாய்ந்து வரும் மலை பாம்பு போல பாய்ந்து வருகிறது நந்தினி ஆறு. கோவிலின் இரு பக்கவாட்டிளும் ஆறு கடந்து செல்கிறது. முன்பு பார்த்த மழை நீர் ஓடைகள் இந்த நதியின் விழுதுகள் போலும்.

 கோவில் பழைய கேரளக்கோவில் வடிவில் உள்ளது. துர்கா பரமேஸ்வரி வீரிருக்கிறாள். 
கோவிலினுள் புதுப்புடவை, தேங்காய் மற்றும் சில பொருள்களை எரித்து யாகம் செய்துகொண்டு இருந்தார்கள். ஒரே புகை மூட்டம். 

"சாமிகள் நம்முன் எது நின்றாலும் நம் வேண்டுதல் ஒன்றே". வழக்கம் போல என் வேண்டுதல்களை முனுமுனுத்துக்கொண்டே கோவிலை சுற்றி வந்தேன். அதிகம் கிராமத்து மனிதர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கோவிலில் இருந்தார்கள்.





















ஆற்றை கடக்க சிறிய பாலம் உள்ளது. அந்த பாலத்தில் நின்று கொண்டு ஆற்றின் வேகத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன். மழை நீரில் ஆறு நனைந்து கொண்டே இருந்தது. மழை அதிகமாக அதிகமாக ஆற்றில் நீரின் அளவும் வேகமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆனால் விதிகளின் படி கனம் கூட க்கூட நடையின் வேகம் குறைய வேண்டும் தானே, ஆனால் நதிக்கு அது செல்லாது போலும்.

மழை நின்றது. வீட்டுக்கு திரும்பினோம்.  

Udupi Srikrishna Temple

எல்லோரும் அறிந்த பெயர். உடுப்பி ஒரு வளர்ந்து வரும் சிறிய நகரம். 
மங்களுர்லிருந்து 60 km தூரத்தில் உள்ளது. மங்களுர்லிருந்து உடுப்பிக்கு நான்கு வழி சாலை. 
15 நிமிடத்துக்கு ஒரு  தனியார் பேருந்துகள் உள்ளது. ஒரு மணி 
நேரத்தில் உடுப்பி வந்தடைந்து விட்டது.

கோவிலை அடைந்ததும் சிறிய ஏமாற்றம் தான். சிறிய கோவில் கூட்டமும் அதிகம் இல்லை .
விசேஷ நாட்களில் சாமி பார்க்க மணிக்கணக்காக நிற்க வேண்டும் போல.
கிருஷ்ணர் சிறிய கரிய நிற சிலை. தங்கம், வைரம் , இன்னும் சில கற்கள் அவர் மேலே  ஜொலித்தது.
ஒரு வெள்ளியால் ஆன ஜன்னல் வழியே சாமியை பார்க்க வேண்டும்.
சில பெண்கள் குழு சாமி முன் அமர்ந்து பஜனை பாடிக்கொண்டு இருந்தனர். சன்னிதானத்தை 
விட்டு வெளியில் வந்ததும் 50 ரூபைக்கு பிரசாத பொருட்களை வாங்கினோம். அதில் 
லட்டு சுவையாக இருந்தது . 

மங்களூர் சுற்றி நான் பார்த்த இந்த கோவில்களுக்கு எல்லாம் என் அண்ணன் தான் 
அழைத்துச்சென்றார். அவருக்கு நன்றி.












புதன், செப்டம்பர் 04, 2013

மங்களூர் - 2

மங்களூர் வளர்ந்து வரும் நகரம். கடந்த 20 ஆண்டுகளில் புதிய கட்டிடங்கள் வானை நோக்கி  வளர்ந்து நிற்கிறது. இன்றைய சுழலில் பெரிய பெரிய Apartments கள், IT நிறுவங்கள் , சிட்டி சென்டர் போன்ற mallகள், இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், குளிருட்டப்பட்ட நகை கடைகள் இருந்தாள் வளர்ச்சி அடைந்த நகரமாக எடுத்துக்கொள்ளலாம். இவை அனைத்தும் மங்களூரில் உள்ளது. 
ஒவ்வொரு கட்டிடங்களும் மலை முகடுகளில் concrete மரங்களை போல நிற்கிறது. நில சரிவு ஏற்பட்டால் கட்டிடங்கள் சரியாத என அண்ணனிடம் கேட்டேன். இங்கு உள்ள மண் கெட்டியான மொரம்பு வகையை சார்ந்தது , இதுவரை பெரிய அளவில் மண் சரிவு ஏற்படவில்லை ஆனால் இந்நிலை நீடித்தால் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.கட்டிட வேலைக்கு வழக்கம் போல ஒரிசா, பீகார், அசாம் மாநில தொழிலாளிகள். ஒரு பிளாட்டின் விலை குறைந்தது 40 லட்சத்தில் துவங்குகிறது, வழக்கத்துக்கு மாறாக மேலே இருக்கும் பிளாட்டுகள் விலை அதிகம். ஏனெனில் நல்ல view கிடைக்கும் , மழைகாலங்களில் புழு பூச்சி தொல்லை இல்லை.




இங்கு தரமான கல்விநிலையங்கள் அதிகம் உள்ளதாள் மாநிலம் முழுவதிலிருந்தும் படிப்பதற்காக மாணவர்கள் அதிகம் வருகிறார்கள். 

Kadri Manjunatha temple

நகரத்தில் அமைந்துள்ள இரண்டு முக்கியமான கோவிலுக்கு சென்றோம். அதில் ஒன்று கத்திரி மஞ்சுநாத கோவில். இந்தியாவின் பழமையான சிவன் கோவில். முதலில் புத்த மத கோவிலாக இருந்து பின்பு பத்தாம் நூற்றாண்டில் சிவன் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான் பார்த்தவரை சிவன் கோவில்களில் மூலஸ்த்தானத்தில் லிங்கம் இருக்கும் ஆனால் இங்கு சிவனின் முகம் மட்டும் கழுத்துவரை உள்ளது. சாமியை நேருக்கு நேர் பார்த்து வணங்குவதை விட ஒருமுறை சாமியை பார்த்துவிட்டு கண்களை மூடி மனதுக்குள் நினைத்து வணக்குபவர்கள் அதிகம். அதிகமா பள்ளி சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.
























Padmanatha Lokeshwara என்ற சிலை இந்தியாவின் மிகச்சிறந்த வெண்கல சிலை என்று போர்ட் வைத்துள்ளார்கள். 





நந்தி வாயிலிருந்து தீராமல் ஊற்றும் நீரை ஒரு குவளையில் கொண்டுவந்து அருகில் இருக்கும் லிங்கத்தின் மேல் ஊற்றி வழிபடுகிறார்கள்.








கோவிலை தொடர்ந்து ஒரு மலையின் மேல் ஏறினால் பெரிய  அஹனுமான் சிலையும் அதன் அருகில் கோவிலும் உள்ளது. 






அதை தொடர்ந்து மேலே  ஏறினால் காடு போன்ற பகுதி உள்ளது . அங்கு பாண்டவ குகைகள் உள்ளது. இதன் பின் புலம் தெரியவில்லை. தொடர் மழையினால் அந்த இடம் பாசி படர்ந்து வண்ணம் தீட்டியது போல இருந்தது.  கண்ணுக் தெரியாத எண்ணற்ற பறவைகளின் ஒலியும் , மழையால் விழித்த வண்டுகளின் ரீங்காரமும்  மொத்தமாக சேர்ந்து  ஒரு இசை நிகழ்வு போல இருந்தது.  இங்கு தனியாக அமர்ந்து கொண்டாள்  சில்லென வீசும் காற்றும் , இந்த இசையும் உங்களோடு பேசிக்கொண்டே இருக்கும் . 















Gokarnanath Temple 

இந்த கோவில்  Kudrolli எனும் இடத்தில் உள்ளது .ஸ்ரீ நாராயண குரு என்பவரால் இந்த கோவில் கி.பி .1912 ல் கேரள முறைப்படி கட்டப்பட்டது. பின்பு கி.பி .1991 ல் புதுபித்து  சோழர் கால முறை படி கட்டி இருக்கிறார்கள். கோவில் எங்கும் தங்க முலாம் பூசப்பட்டது போல் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. செயற்கையான ஒரு பகட்டுத்தன்மை இருந்தது. இதுவும் சிவன் கோவில்.