ஒரு பக்கம் வீட்டு வேலைகள் அதிவேகமாக சென்றுகொண்டு இருந்தது. ஐந்து வெவ்வேறு குழுக்கள் வேலை செய்தன. மறுபுறம் செப்டம்பர் 14 மனை புகுவிழா வைத்திருந்ததால் அதற்க்கான ஏற்ப்பாடுகளும் நடந்தான.
யார் யாருக்கு துணிகள் எடுக்க வேண்டும் என்பதில் ஒரு பெரும் விவாதம் எழுந்தது . அம்மாவிடம் ஒரு பெரிய பட்டியல் இருந்தது. நாங்கள் பணத்தை தேன் துளியன சிறுக சிறுக செலவழித்துக்கொண்டு இருந்தோம். அம்மாவுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை. எனக்கும் கவிதாவுக்கும் ஒரு பெரும் சொற்கலப்பு நிகழ்ந்து தணிந்தோம்.
அதன்பின் இறுதி பட்டியல் தயாராகியது . புடவை மற்றும் துணிகளில் சிறு ஏற்ற தாழ்வும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிடும் என்று கவிதாவே ஒவ்வொருவருக்கும் தேர்ந்து பார்த்து துணிகளை எடுத்தாள்.
நானும் அண்ணனும் சமையலுக்கு ஆட்களை தேடினோம். முகுர்த்த நேரம் என்பதால் ஆட்கள் கிடைக்க அரிதாக இருந்தது. இரவில் 70வது பேருக்கு காலையில் இருநுறு பேருக்கு என்பது எங்கள் கணக்கு. நாங்கள் செய்து வண்டியில் அனுப்பிவிடுகிறோம் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் கிராமங்களில் அது முறையல்ல. அதுவும் இது போன்ற சிறிய நிகழுவுகளில் நாமே முன்னின்று சமைத்து வருபர்களை இன்முகம் கூறி பரிமாற வேண்டும். எனக்கு அதுவே நல்லது என தோன்றியது.
இறுதியில் எங்களுக்கு பழக்கமான வேலு என்பவர் சமைக்க ஒப்புக்கொண்டு தன் சகாக்களை அனுப்பிவைத்தார். மளிகை பொருட்களை நானே வாங்கிவிட்டேன். காய்கறி வாங்க நானும் அண்ணனும் உழவர் சந்தைக்கு சென்றோம். நாட்டு தக்காளி எங்கும் இல்லை. காலையில் இரண்டு கூடை வந்தது. இப்போது இல்லை என்கிறார்கள். வாழை இலை ஒன்று ஐந்து ரூபாய். காலிபிளவர் சின்னது தான் உள்ளது. ஒவ்வொன்றாய் தேடி தேடி சுற்றி அலைந்து வண்டியில் போட்டுக்கொண்டு வீடுவந்து சேர்ந்தோம். வாசலில் கட்ட சாம்பார் வாழை கிடைத்தால் நல்லது என்கிறார்கள். அது தேடி கிடைக்கவில்லை . பின் அண்ணனின் நண்பர் நிலத்தில் கற்பூர வாழை மரம் இரண்டு கிடைத்தது.
ஐயரை தேடி அலைந்ததில் எங்களுக்கு மூச்சி வாங்கியது. எங்களுக்கு வழக்கமாக வரும் ஐயர் வயதாகி ஒடுங்கிவிட்டார் . அவர் மகன் பொறியல் படித்துகொண்டு இருந்தான் என்கிறார்கள். வேறு சிலரை அணுகினோம் . அவர்கள் 5000 ரூபாய் 4000 ரூபாய் என்று கேட்டார்கள்.
வேறு வழி இல்லாமல் அதே பழைய ஐயரை பார்க்க போனோம். அவர் மகன் பட்டாபி அந்த தொழிலில் கொடிகட்டுகிறான் என்கிறார் அவர் பெருமிதமாக .
தொலைவில் ஒரு முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகத்தில் முனைந்திருந்த பட்டாபியை பிடித்து பேசியபோது 3000 ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார் . உடனே ஒரு ஜூனியர் இன்ஜினியரை அழைத்து பூ பழம் பத்திரிக்கை கொடுத்து பூசைக்கு போகும்படி கூறிவிட்டு என் எண்னை வாங்கிக்கொண்டார். மறுநாள் வாங்க வேண்டிய பூசை பொருட்களின் பட்டியல் எனக்கு வாட்ஸப்பில் வந்தது.
பூசைக்கு முதல் நாள் மாலை வரை வீட்டு வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. இரவு கவியத்துவங்குமுன் அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு அப்பா அழைத்து வந்திருந்த பெண் ஆட்களை வீட்டை சுத்தம் செய்ய சொன்னோம்.
பந்தல் அமைப்பவன் முருகன். எங்கள் கிராமம் தான். மலை முதலே வேலை செய்து வீட்டை ஜொலிக்கவிட்டான்.
சொந்தங்கள் அக்கா தங்கை கவிதாவின் அம்மா அக்கா இருவர் அண்ணியர் இருவர் அனைவரும் வந்து அவர் அவர் வேலைகளை துவங்கிவிட்டனர்.
இரவு உணவு தயாரானதும் முதலில் குழந்தைகளை பிடித்து அமரவைத்தோம். அவர்களை முடித்து சொந்தங்களை அழைத்து உணவு பரிமாறினோம்.
ஒருபுறம் உண்டாட்டு செல்ல மறுபுறம் பங்காளிகளின் மதுமகிழ் ஆடல் சென்றுகொண்டு இருந்தது. கிராமத்தில் சொந்தங்களின் வாழ்க்கை முரணியக்க நகர்வு. ஒரு சீரான நேர்கோட்டு வாழ்க்கை அல்ல. வஞ்சம் , பொறாமை , ஆற்றாமை என்று ஒரு எல்லைக்கு மனம் செல்லும். அதே மனம் அன்பு கனிவு குழைவு என்று அடுத்த எல்லைக்கு செல்லும். வழி சண்டை , வரப்பு சண்டை என்று கை கலக்கும், மனம் கசக்கும் சொந்தங்கள் இது போன்ற நிழவுகளில் ஒன்று கூடி களிந்தாடி , அரசியல் பேசி , கேலி பேசி பிணைந்து கொள்வர். அது அவர்களின் வாழ்வியல் முறை. வெளியிலிருந்து பார்ப்பவருக்கு புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருக்கும்.
படிப்புக்காக வேளியேறிவிட்ட எனக்கு அந்த வாழ்வில் மனம் ஒப்புவது இல்லை. ஒருமுறை சண்டை வந்தால் வாழ்நாள் முழுக்க எனக்கு எதிரிதான். மறுபடியும் எந்த விதத்திலும் ஒட்ட முடிவதில்லை.
இரவு யாரும் தூங்கவில்லை கதையாடிக்கொண்டும் சிறுவேலைகளை செய்துகொண்டும் இருந்தனர். நான் கால்கள் மறுத்து கண்கள் இருண்டு தள்ளாடிக்கொண்டு இருந்தேன்.
வீட்டின் மேல் கட்டியிருந்த கண்திருஷ்டி பொம்மையை கண்டு இயல்பாக சிரிப்பு வந்தது. அக்காவின் இளையமகள் மாமா பொம்மை உன்ன மாதிரியே இருக்கு ஆனா கொஞ்சம் smart ஆ இருக்கு என்று கிண்டலடித்தது நினைவு வந்தது. முன்பெல்லாம் அதை மேஸ்திரி தான் பூசை போட்டு எரிப்பார். ஆனால் இப்போது அதற்க்கு தனியாக ஆட்கள் இருக்கிறார்கள். எரிப்பதற்கு 2000 ரூபாய் வேண்டும் என்கிறார்கள். எரிக்கும்போது திருஷ்டி முழுக்க அவர்கள் மேல் படியும் என்றொரு நம்பிக்கை. அதை ஏற்பதற்கே அந்த பணம்.
இரவு பனிரெண்டு மணி ஆனதும் எங்கள் பழைய வீட்டின் கதவுகளை மூடி நாங்கள் சொல்லும்வரை யாரும் வெளியில் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த பொம்மையை எடுத்து சென்றார்கள். சிறிது நேரம் கழித்து வந்தவர்கள் புதுவீட்டை முழுவதும் கழுவிடும்படி கோரிவிட்டு சென்றனர்.
நான் தள்ளாடி தள்ளாடி சென்று பக்கத்திலிருந்த திண்ணையில் படுத்துக்கொண்டேன். நிகழ்வுகள் கனவில் தொடர்ந்தது. சிறிது நேரத்தில் யாரோ என்னை எழுப்பிவிட்டு சென்றார்கள். சொக்கி கவிழ்ந்த தலையுடன் அமர்ந்திருந்தேன்.
கவிதா வந்து ஐயர் கோமியம் கேட்கிறார் இருக்க என்றாள். என்னது ஐயர் மாமிய கேக்கிறாரா என்றேன். கவிதா தலையில் இடித்துவிட்டு 3 மணி ஆச்சு மொதல்ல போய் குளிச்சிட்டு வா என்றாள். குளித்துவிட்டு முத்தாடை புனைந்து புதுவீட்டுக்கு வந்தேன்.
ஐயர் பூசை பொருட்க்களை பரப்பிக்கொண்டு இருந்தார். கோமியம் எங்கே, செங்கல் பணிரெண்டு எங்கே மணல் கொஞ்சம் எடுத்து வாங்க, மாவிலை எடுங்க என்று அவர் வேலையை துவங்கிவிட்டார்.
ஏம்மா கோவிலுக்கு போயிட்டு வந்துடுங்க என்று அவர் குரல் மணியின் சில் ஒலியில் கேட்டுக்கொண்டு இருந்தது. நானும் கவிதா மற்றும் கவிதாவின் அக்கா , அம்மா அனைவரும் கோவிலுக்கு சென்று மாலை சார்த்தி கற்பூரம் ஏற்றி வணங்கினோம். கவிதா காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி அதை வீடுவரை அணையாமல் இருக்கும் பொருட்டு ஒரு பாத்திரத்தின் நடுவே வைத்து வீட்டுக்கு எடுத்துவந்தாள்.
புதுவீட்டுக்குள் முதலில் பசுமாடும் கன்றும் நுழைந்தது. அப்பாவும் அம்மாவும் அதன் நெற்றியில் மஞ்சள் பூசி குங்குமம் மிட்டு கற்பூரம் காட்டி உள் அழைத்தது சென்றனர். நானும் கவிதாவும் வலது கால் வைத்து உள் நுழைந்தோம். கவிதா கையிலிருந்த விளக்கை பூசை அறையில் வைத்து வணங்கிவிட்டு வெளியில் வந்தோம்.
ஐயர் எரிகுளம் அமைத்து மாசுள்ளிகளை எரியூட்டி நெய் விட்டு வளர்த்தெடுத்து அதில் அவிய்ட்டு மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந்தார். சுற்றி நின்றிந்தவர்கள் பெரும்பாலும் அந்த எரி தழலை தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
தாய்மாமன் கொண்டுவந்த சீர் முதன்மையாக வைக்கப்பட்டது. அப்பாவும் அம்மாவும் மாலையிட்டு மனையில் அமர்ந்து அதை ஏற்றனர். அதன் பின் நானும் கவிதாவும் மனையில் அமர்ந்தோம்.
ஏழு வருடங்களுக்கு முன் திருமணத்தின் போது அப்படி அமர்ந்தோம். அது தான் முதல் தொடுகை. தொடுகையில் உவகையும் தொட்டு உணர்ந்த பின் சட்டென விதிர்த்து விலகவும் நிலைகொள்ளாது அமர்ந்திருந்தோம்.
கவிதா வந்தவுடன் பொருளியல் தரும் அழகியலை எனக்கு காட்டினாள். நல்ல உணவுகள் தரும் சுவை , நல்ல உடைகள் தரும் பெருமிதம் , பொருள் சேமிப்பு தரும் மெல்லிய ஆணவமும் நிமிர்வும் அனைத்தையும் அறிமுப்படுத்தினாள்.
இன்று எங்கள் உடலும் மனமும் ஒன்றென நிறைந்து விட்டதால் இயல்பாக பூசை மனையில் அமர்ந்திருந்தோம். அக்க்ஷய் என் வாலத்தொடையில் அமர்ந்திருந்தான். கவிதா இரண்டு மூன்று நாட்கள் ஓவில்லாமல் வேலை செய்ததால் சோர்வடைந்திருந்தாள். முகமெல்லாம் கருத்திருந்தது. புதுப்பட்டை உடுத்திருந்தாள். கண்கள் தன் முன் எரிந்து கொண்டு இருக்கும் அனலையே நோக்கிக்கொண்டு இருந்தது. சன்னதம் வந்து தீ சட்டியை கையில் எடுக்க காத்திருக்கும் பெண் போல அல்லது தன் பிறந்தநாள் கேக்கின் மேல் வைத்திருக்கும் ஒற்றை மெழுவர்த்தியை ஊத காத்திருக்கும் குழந்தை போல.
செந்தழலும் நா சொடுக்கி அவளிடம் ஏதோ பேசுவது போல இருந்தது .
என் அண்ணியர் சிலர் அடுமனையில் புது அடுப்பில் பல்காச்சினார்.
ஒருவழியாக பூசனைக்காய் உடைத்து பூசைகள் முடிந்தன. சொந்தங்கள் ஒவ்வொருவராக அன்பளிப்பும் ஆசியும் அறிவுரைகளையும் வழங்கினர்.
காலை ஆறுமணிக்கு முதல் பந்தி துவங்கியது. ஒன்றுவிட்ட அண்ணன் மகன்கள் அத்துணை பேரையும் கவனித்துக்கொண்டனர். மூன்றாவது பந்திக்கு என் சகலையின் மகன் என்னோடு இணைந்துகொண்டான். இருவரும் பரிமாறினோம். சளைக்காமல் என்னோடு வேலைசெய்துகொண்டு இருந்தான். நேரம் காலை 10 மணியை தாண்டியது. என்கால்கள் கட்டையென மாறி கனத்தது. தேவையில்லா எடையை தூக்கிக்கொண்டு நடப்பதை போல இருந்தது.
கவிதாவை தேடி சென்றேன். வரிசை தட்டில் இருந்த இனிப்பு பலகாரங்களை பிரித்து ஒவ்வொரு சொந்தங்களுக்கும் கொடுத்து வழி அனுப்பிக்கொண்டு இருந்தாள். அவள் அண்ணியும் என் மருமகள்கள் இருவரும் அவளுக்கு உதவிகொண்டு இருந்தனர். பின்பு வீட்டை சுத்தம் செய்ய துவங்கினர். நான் அரை மயக்கத்தில் இருந்தேன். போர் நடந்த களத்தை சுத்தம் செய்வது போல இருக்கிறது என்றாள். நான் நகைத்து அப்படியே சாய்ந்து உறங்கிவிட்டேன்.
இரவு புது வீட்டில் படுத்தோம். அக்க்ஷய் ஏம்பா நம்ம இந்த வீட்டுக்கு வந்துட்டோம் என்றான். அவனுக்கு என்ன சொல்லினால் புரியும் என்று யோசித்துக்கொண்டு இருதேன். அவன் மறுபடியும் கேட்டான் அப்பா நா உங்க கல்யாணத்த பாக்கலன்னு இன்னக்கி மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா என்றான். ஆமா செல்லம் என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டேன். வெகு நாள் கழித்து ஒரு சுகந்திரத்தை உணர்கிறேன் என்று கவிதா கூறிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள். சீக்கிரத்தில் இருவருமே ஆழ்ந்து உறங்கினர். பரதம் ஆடி அமர்ந்த பெண்ணின் கால்களில் ஆடி முடிக்காத நடனம் கொஞ்சம் மிச்சம் இருப்பதை போல பகிர முடியாத ஏதோ மகிழ்வு கொஞ்சம் கவிதாவின் முகத்தில் புன்னகையாக படர்ந்திருப்பதை நான் பார்த்துக்கொண்டு தூக்கம் என்னை தொட்டு படர்ந்திட காத்திருந்தேன் இருந்தேன்.