"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், ஜூன் 05, 2017

ஆயாவின் பெட்டி - புனைவு


"ம்மாவ் இந்த பொட்டிய இன்னாத்துக்கு இங்க அங்கன்னு மாத்தி மாத்தி வாச்சினு கீர ... சும்மா எடத்த அடச்சினு கீது

டேய்  இருந்தா இருந்துனு போது உன்ன இன்னா பண்ணுது அது .....ஆயா உன்மேலதான் பாசமா இருஞ்சி

அட்டத்தில் இருந்த அந்த இரும்பு பெட்டியை கீழே இறக்கி திறந்து பார்த்தேன். மெல்லிய புகை இலை வாசனை வருவதாக எனக்கு தோன்றியது. என் சின்ன வயதில் இந்த பெட்டியை திறந்து பார்த்துவிட வேண்டும் என்பது  எங்களுக்கு ஒரு கனவாக இருந்தது. சற்று நேரத்தில் அந்த வாசனை ஒரு நினைவாக மனதில் பதிந்துள்ளதாகவும் அந்த நினைவு தான் மேலெழுந்து வந்ததாகவும் தோன்றியது.

இரும்பு பெட்டியின் ஓரத்தில் ஒரு ஐந்து பைசா இருந்தது. அதை எடுத்து தன்னிச்சையாக முகர்ந்து பார்த்தேன். என் ஆயாவிடம் எப்போது காசு பிடிங்கினாலும் முதலில் அதை முகர்ந்து பார்ப்பது வழக்கம் . சுருக்குப்பையில் புகையிலையோடு அந்த காசுகள் முயங்கி அதே வாசனை அடிக்கும். அந்த வாசனை ஒரு கிறக்கத்தை தருவது எனக்கு பிடிக்கும் .

எங்கள்  வீட்டின் நுழைவாயிலுக்கு வலப்புறம் ஒரு சிறிய அரை இருந்தது. அதை நாங்கள் ஆயா ரூம் என்று அழைப்போம். அதில் புகையிலை வாசமும் மற்ற சில வீச்சமும் இருக்கும். பெரியவர்கள் யாரும் அதில் நுழைய மாட்டார்கள். சிறியவர்களுக்கு அது விளையாட்டின் போது ஒளிந்து கொள்வதற்கான இடம்.

அந்த அறையின் ஓரத்தில் அந்த நீல நிற இரும்பு பெட்டி இருக்கும்.
என்னை போன்ற சிறுவர்களுக்கு அது ஒரு கனவு பெட்டி . அதற்குள் நகைகள் இருக்கும் , இல்லை இல்லை சுருட்ட பட்ட பத்து ரூபாய் நோட்டுகள் கொத்து கொத்தாக இருக்கும் , இல்ல அதுக்குள்ள ஆயாவோட நகைகள் இருக்கும் என்று எங்கள் கற்பனை விரிந்து கொண்டே போகும்.

ஆயாவுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள். தாத்தா கொட்டாப்புளி ஒரு சோக்கான ஆள். ஆயா தனி ஆளாக பின் நின்று பல ஏக்கர் நிலங்களையும் தென்னந்தோப்புக்கு நடுவே  மூன்று வீடுகளையும் சேர்த்தார்.  அவருக்கு முன்பாகவே இரண்டு மகன்களும் ஒரு மகளும் உயிரணைந்தனர்.
மகன் வழியில் பதினான்கும் மகள் வழியில் மூன்று பேரர்கள் மற்றும்  அந்த பேரர்களுக்கு பிள்ளைகள் என்று பெருவாழ்க்கை.

ஆயாயாவை  யாரும் மரியாதையாக அழைப்பதில்லை . என்னை போன்ற பேர குசுமான்களும் கொள்ளு பேர குளுவான்களும் ஏய் அண்ணும்மா என்று தான் அழைப்போம். கொஞ்சம் பெரியவர்கள் எங்கடா அவ என்ற ரீதியில் பேசுவார்கள். மகன் வழி பேத்திகள் ஏய் மொத்தி என்பார்கள். பெண் வழி பேத்திகள் மட்டும் ஆயா என்று அழைப்பதை பார்த்திருக்கிறேன். என் அப்பா ஒருமுறைகூட அம்மா என்று அழைத்து  நான் பார்த்ததே இல்லை.

பெரியவர்களுக்கு அந்த பெட்டி உரையாடலில் பயன் படும் ஒரு முக்கிய குறியீடு. எதாவது யாரவது மறைத்தால் என்ன மொத்தி பெட்டியில அமுக்கிர மாதிரி அமுக்கிர என்பார்கள். அந்த பெட்டியில் இருப்பதாக எண்ணும்  பொருட்கள் யாருக்கு சேரவேண்டும் என்ற பேச்சு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

ஒரு நாள் ஆயா படுக்கையிலிருந்து எழவே இல்லை. காலை உணவு நான் கட்டிலுக்கு அடியில் வைத்த போது மெல்லிய முனங்கல் கேட்டது. காலம் தேங்கி பழுத்த கண்களிலிருந்து நீர் வழித்துக்கொண்டு இருந்தது. சற்று கூர்ந்த போது பொட்டி பொட்டி என்ற ஒலி மட்டும் கேட்டது.

ம்மாவு அண்ணம்மா  பொட்டிய காணும்  , ஆயா அழுவுது வா என்றேன். அம்மா வேக வேகமாக வந்து முதலில் பெட்டி இருந்த இடத்தை பார்த்தார்.
மெல்லிய சந்தோசம் போன்ற முக பாவனையை அம்மாவின் முகத்தில் படருவதை பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் . அம்மா சட்டென்று பயந்து நா குழற ஏமா யாராவது வந்த மாதிரி இருந்ததா ? நீ யாரையாவது பார்த்தியா ? என்று கேள்விகளை அடுக்க ஆயா எதுவுமே பேசவில்லை. கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்துகொண்டே இருத்தது.

ஐயோ எவன் வந்தான் தெரியலையே .. என்ற அம்மாவின் பதற்றம் அக்கம் பக்கத்து  பங்காளிகளின் வீடு முழுக்க பரவியது. அத்தனை உறவுகளும் கூடி விட்டன.

அப்பா நிலத்திலிருந்து  வேக வேக வந்து நம்மமூட்டாண்ட போய் எவண்டா வருவான் ... என்றார். இல்ல சின்னு எவனோ தெரிஞ்சவன் தான் வந்து போயினருக்கான் என்றார் மூத்த பெரியப்பா வழி அண்ணன்.

யாருமே நுழையாத அந்த அறையில் அன்று அனைவரும் தன்னை நுழைத்து கொண்டனர். ஆயாவின் மருமகள்கள் மூவரும் கெஞ்சி கெஞ்சி கொஞ்சம் காஞ்சியை புகட்டினர்.

தோப்பில் இருக்கும் எங்கள் வீட்டிலிருந்து செய்தி ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஊருக்குள் பரவியது. முதல் அடுக்கு உறவுகள் , இரண்டாம் அடுக்கு உறவுகள் ஆயாவின் தோழிக்கிழவிகள் என்று ஆட்கள் கூடத்துவங்கினர்.

எங்கள் அனைவருக்குமே ஆயாவின் மீது ஏனோ அதீத பாசம் உருவாயிற்று.
அந்த அறை ஒரு பேத்தியால் சுத்தமாக கழுவப்பட்டது. பழைய கலைந்த புடவைகள் எல்லாம் சரியாக அடுக்கப்பட்டன. அழுவாத ஆயா என்று ஒவ்வொரு பேரர்களும் கையை பிடித்துக்கொண்டு சொன்னார்கள்.

அந்த தீபம் ஜுவல்லரில தான் அது எப்ப பார்த்தாலும் ஒக்காந்து இருக்கும் , இல்ல அது துட்டாதான்  தான் சுருட்டி சுருட்டி வச்சி இருக்கும். அதுக்கு ஏதுடி அவ்ளோ துட்டு . நீ வேற அது தொடப்பம் கிழிக்கும் , மாடு ஒன்னு வெச்சின்னுகிது , தென்ன ஓல மொடையும் , அதுக்கு ஐஞ்சு தென்ன மரம் ஒதுக்கி விட்டு இருக்காங்க , முருங்க விக்கும் , துட்டு நெறைய வச்சிக்கினு இருக்கும் . அட துட்டு போனா போது பெட்டியில கொட்டாபுலியோட பழைய செருப்பு ஒன்னு இருந்தது தெரியுமா என்று கிழவிகள் வெற்றிலை போட்ட வாயால் சொற்களை தூப்பத்துவங்கினர்.

ஆண்கள் பல பிரிவுகளாக பிரிந்து ஒரு குழு தென்னந்தோப்பு , கரும்பு தோட்டம் என்று தேடத்துவங்கியது , இன்னொரு சிறு குழு கிணற்றின் ஆழம் வரை சென்று பார்க்க துவங்கியது. இருவர் குழு பக்கத்து ஊர் அகப்பை மந்திரவாதியை அழைக்க சென்றது.

அகப்பை மாத்திரவாதி என்ற பேரை கேட்கவே குதூகலமாக இருந்தது. மத்தியான வேளையில் எங்கள் மாமா ஒருவர் வேகமாக வந்து வண்டியை வீட்டின் முன் நிறுத்தினார். இளம் வயதினன் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தான். அவன் தான் மாத்திரவாதி என்கிறார்கள் . எங்களால் நம்பவே முடியவில்லை. பெரும் ஏமாற்றமாக இருந்தது. கையில் ஒரு பை வைத்திருந்தான். அவன் அறைக்குள் நுழைந்த போது அங்கிருந்தவர்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டார்கள். பெட்டி இருந்த இடத்தில் ஒரு சிகப்பு காட்டன் துண்டை விரித்தான். அதன் மேல் பூசை பொருட்கள் பரப்பப்பட்டன. ஒரு நூல் கண்டு எடுத்து பிரித்து ஒரு சிறு கைராக்கி அதில் மஞ்சள் பூசி அகப்பையின் கழுத்து பகுதியில் கட்டினான். பின் மந்திரத்தை ஜபித்து கற்பூரம் கொளுத்தி வணங்கிவிட்டு எழுந்தான். அகப்பை கட்டிய கயிற்றை நுனியில் பிடித்து அதை லேசாக மேலே தூக்கி குச்சி மட்டும் தரையில் தொடுமாறு பிடித்தான். அகப்பை ஒரு சுழற்சி சுழன்று கிழக்கு திசையில் நின்றது. பின் மெதுவாக நகர்ந்து வாசலை கடந்து தென்னத்தோப்பை நோக்கி சென்றது. முதல் தோப்பில் ஒரு பங்காளி வீடு. குழுமி இருந்தவர்களின் நடுவே சிறிய சலசலப்பு எழுந்து அடங்கியது. கல்யாணம் ஆனவர்கள் யாராவது கயிற்றை பிடியுங்கள் என்கிறார் மந்திரவாதி. சிறிய தயக்கத்துக்கு பின் பெரிய அண்ணன் நூல் கயிற்றை பிடித்தார். பின் ஒவ்வொருவாக மாறி மாறி காற்றை பிடித்தனர். அகப்பை ஊர்ந்து ஊர்ந்து தோப்பில் காவல் இருக்கும் கருப்பன் வீட்டை நோக்கி சென்றது.

கருப்பன் கோலார் தங்கவயலில் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பியவன். இன் செய்யப்பட்ட சட்டை , பாண்ட் ,கேன்வாஸ் ஸூ அணிந்து அவன் வேலை கேட்டு வந்து நின்ற போது யாரும் அவனை சட்டை செய்யவில்லை.அவன் உடைகளை கூட பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் அவனுக்கு இரண்டு மனைவி என்பதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். அதுவும் இளையவள் தேன் நிறம் தேக்கு உடம்பு.

சில பல சமரசங்களுக்கு பிறகு தோப்பில் காவல் காக்கும் வேலை கருப்பனுக்கு கிடைத்தது.

இளையவளை "சின்னாலு " என்று தன் பேச்சின்னுடாக  நுழைத்துக்கொள்ள அனைவரும் விரும்பினர்.

அகப்பை குடிசையை நெருங்க நெருங்க கருப்பனுக்கு முதுகு வளயத்துவங்கியது . அப்பவே என்னக்கு சந்தேகம் சின்னாலு தான் பண்ணி இருப்பான்னு என்று புழுதி சொற்கள் எழுந்தன.

அந்த கூட்டத்திற்கு சற்று தள்ளி பெரியவள் படபடத்தும் , சிறியவள் சற்று துள்ளலாகவும் நின்றிருந்தனர். கருப்பன் திரும்பி பெரியவளை பளீர் என்று கன்னத்தில் அடித்தான். மகளே எடுத்திருந்தா குடுத்துடுங்க என்று சீரவும் மக்கள் அவனை தொடாமல் தடுத்தனர். என் புள்ளைங்கள ஒன்னா நா தாடுறேன் , நாங்க எடுக்கல என்று பெரியவள் சீரினாள்.

நாலைந்து பேர் அந்த குடிசைக்குள் நுழைந்து அடிக்கி வைத்திருந்த சட்டி , பாத்திரங்களை உருட்டிவிட்டு துணிகளை கலைத்துவிட்டு ஒன்றும் இல்லை என்று கைவிரித்தனர்.

சந்திரன்  தூரத்திலிருந்து கத்திக்கொண்டே ஓடி வந்தான். ஏஏ பொட்டி கெடச்சிடுச்சி வூட்டாண்ட வரச்சொல்றாங்கோ என்று கூச்சலிட்டான் . அகப்பையை அங்கேயே போட்டுவிட்டு எல்லோரும் வீட்டை நோக்கி ஓடினர்.

பூட்டு உடைக்கப்பட்ட பெட்டி வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்தது. சுற்றி ஆட்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

பெட்டியில் என்ன இருந்ததென்று ஆயாவை பலர் துளைத்துக்கொண்டு இருந்தனர். அந்த கேள்வியில் பரிதாபத்தைவிட ஆர்வம் அதிகம் இருந்தது. ஆயா ஏதேதோ உளறிக்கொண்டே இருந்தாள்.

தோப்புகளுக்கெல்லாம் அப்பால் கலர் நிலத்தில் புதரில் அதை கண்டெடுத்திருக்கிறார்கள். யாரோ வெளியாளுப்பா , இல்ல இல்ல எவனா குடிகாரனா இருக்கும் , போலீசுக்கு போலாம்பா , யோவ் ஆயா அதல இன்ன இருந்ததுன்னு சொல்ல மாட்டிக்கிது எப்பிடி போலிஸுக்கு போறது. ஆயாவுக்கே தெரிஞ்சி இருக்கும் யார் எடுத்தாங்கன்னு . சுவாரசியம் நீங்கியவர்கள் இப்படியாக பேசி கலயத்துவங்கினர். பசி மேலும் பலரை களைய செய்தது. கூலி வாங்கிக்கொண்டு மந்திரவாதி திருப்பி கொண்டுவிட ஆள் இல்லாமல் நடையை காட்டினார். காலிப்பெட்டி ஆயா ரூமில் அதே இடத்தில் வைக்கப்பட்டது.

அதன் பின் ஆயா கொஞ்சம் கொஞ்சமாக உதிரத்துவங்கினாள்.

பலவருடங்கள் கழித்து இப்போது என் உள்ளுணர்வில் தோன்றுகிறது. அந்த பெட்டி எப்போதுமே காலியாகத்தான் இருந்ததோ என்று.


சனி, மே 20, 2017

"அவுனுக்கு இன்னா " - சவுதிலிருந்து சிவக்குமார்


"அவுனுக்கு இன்னா " என்ற வார்த்தை ஊரில் சொந்தங்கள் மற்றும் நண்பர்களிலின் நடுவே என்னை பற்றிய பொதுவான சொல். 

நான் சவூதிக்கு வந்து பத்துவருடங்கள் நிறைவுற போகிறது. பொருளியல் ரீதியாக ஓரளவுக்கு நிறைவடைந்திருக்கிறேனே தவிர முழுமையாக இல்லை . நாளைக்கு உனக்கு வேலை இல்லை என்று கம்பெனிகாரன் சொல்லிவிட்டால் வியர்த்து படபடத்து மயங்கிவிடும் நிலையில் தான் என் பொருளாதரம் இருக்கிறது.

ஊரில் இருப்பவர்கள் வெளியில் சென்று வேலை செய்பவர்களை வெறும் பொருளாதார பண அடிப்படையிலேயே வைத்து சிந்திக்கிறார்கள். ஊரில் என்னை பார்ப்பவர்கள்  "உனக்கு என்னப்பா " துபாய் பணம் என்ற ரீதியில் தான் பேசத்துவங்குவார்கள்.

ஆனால் பொருளாதார நிறைவு மட்டுமே வாழ்வின் முழு நிறைவு இல்லை.

ஊரில் ஒரு சாதாரண மனிதர் அனுபவிக்கும் கண்ணுக்கு தெரியாத அவர் பிரஞ்சையில் உணராத எத்தனையோ வசதிகள் இங்கிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. 
உலகத்தில் சுகந்திரம் என்னும் சொல்லின் முழுமையான அர்த்தத்தை அனுபவிப்பவர்கள் இந்திய மக்கள் தான் என்று ஒவ்வொரு முறையும் நான் ஊருக்கு வரும்போதும் உணர்கிறேன்.

என் ஆசிரியர் சொல்வது போல ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நீங்கள் சென்றால் ஒருமுறை கூட யாரும் உங்களை நிறுத்தி நீங்கள் யார் என கேட்கமாட்டார்கள். ஆனால் இங்கு அப்படி அல்ல. ஒவ்வொரு நூறு கிலோமீட்டர்க்கும் நீங்கள் சோதனை சாவடியை தாண்ட வேண்டியிருக்கும். மனம் பட படத்து கைகள் தன்னை அறியாமல் உங்கள் அடையாள அட்டையை தேடும்.

 நான் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை கிராமத்தில் வளர்ந்தேன். என்  ஊரை சுற்றி தென்னை மரம் தான் பிரதானம் . அதனால்  பசுமையும் பச்சை நிறமும் கண்களில் எப்போதும் நிறைந்தது இருக்கும். என்னை சுற்றி  வெவ்வேறு மனிதர்கள்  இருந்துகொண்டே இருப்பார்கள். வெவ்வேறு முகங்கள் அந்த முகங்களில் தவழும் வெவ்வேறு உணர்வு நிலைகள். அதே போல பெண்கள். எப்போதும் சாதாரண உடையில் அல்லது இரவு உடையில் இருக்கும் எங்கள் வீட்டு பெண்கள் குடும்ப விழாக்களிலும் திருவிழாக்களிலும் பொட்டுட்டு , பட்டுடுத்தி, குழல் திருத்தி தெய்வமகள்கள் போல மாறிவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். திருவிழா காலங்களில் ஊரும் அப்படித்தான் மாறிவிடும்.
நாங்கள் பயன்படுத்திய மொழியும் நாகரிகம் மற்றும் வாழ்வியல் முறையும் தொன்று தொட்டு அந்த கிராமத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. பேசும் மொழியில் பெரும்பாலும் கட்டுபாடுகள் இல்லை . ஒரு நாளைக்கு ஐம்பது கெட்டவார்த்தைகள் பேசாத மனிதர்கள் அங்கு குறைவு. பள்ளி பருவத்தில் மேற்சொன்ன அனைத்தும் தான் என் ஆழமனதை வடிவமைத்தது.

ஆனால் சவூதி வந்த ஒருவருடத்தில் ஒரு இருளை அதன் சிறு எடையை மனதில் உணர்ந்தேன். அந்த இருளை அதனுள் உள்ளதை என்னால் அறியவே முடியவில்லை. நான் தனிமையில் இருக்கும் போது அந்த இருள் ஏக்கமாக , வெறுமையாக உருமாறி நிற்கும். என் மனதில் மகிழ்ச்சியும் முகத்தில் சிரிப்பும்  குறைந்து கொண்டே வந்தது. சில வருடங்களில் நல்ல சம்பளம் வீடு, கார் எல்லாம் கிடைத்தது.ஆனால் அந்த இருள் பெரும் நோய் போல முகம் முழுக்க பரவி இருந்தது.

அது ஏன் என்று பலநேரம் நான் யோசித்ததுண்டு. சில மட்டுமே எனக்கு தட்டுப்பட்டது.

இங்கு பசுமை என்பதே இல்லை , தமிழர்கள் எந்த கலாச்சார நிகழ்வுகளையும் இங்கு நடத்துவதில்லை, ஒரு திரையரங்கு கூட இல்லை , பெண்கள் ஆண் துணையுடன் பர்தா அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும், எப்போதும் நன்மை யாரோ ஒருவர் கண்காணித்து கொண்டே  இருப்பது போன்ற ஒரு உணர்வு, சொந்தங்கள் கூடி தன் மகிழ்வை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை, 

இல்லை என்ற பட்டியலை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். 

இப்படி தன் ஆழ் மன கட்டமைப்புக்கு முற்றிலும் தொடர்பில்லாத சூழலில் நாம் வாழ முற்படும்போது ஆழ்மனம் குழம்பதுவங்கும். தனிமையும் ஏக்கமும் நம்மை ஆட்கொள்ளும். பலநேரங்களில் காரணம் இல்லாமல் நமக்கு அழுகை கூட வரும்.

அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி கடுமையாக வேலைசெய்வது. காலையில் 6.30 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 8 மணிக்கு மேல் தான் அறைக்கு வருவோம். கட்டுமான பணியில் உள்ள பெரும்பாலானவர்களின் வழக்கம் இதுவே. ஒருகட்டத்தில் என் மனமும் உடலும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

அந்த தருணத்தில் சரியான நேரத்தில் மனைவி ( கவிதா) வாழ்வோடு இணைந்தார்.  கவிதாவின் உதவியோடு கொஞ்சம் கொஞ்சமாக என்னையும் வாழ்வையும் மேம்படுத்திக்கொண்டேன்.வேலையை குறைத்துக்கொண்டு பாடுவது, ஆடுவது, சிலம்பம்   என்று  கலாச்சாரத்தோடு தொடர்பு படுத்திக்கொண்டேன். 
நவீன தமிழ் இலக்கியம் அறிமுகமானது. அதன் வழியாக பல்வேறு மனிதர்களின் வாழ்வில் நானும் இணைந்து கொண்டேன்.
மேலும்ன் கவிதாவும் நானும் ஊர் நிகழ்வுகளை , உறவுகளின் செயல்பாடுகளை சதா பேசிக்கொண்டே இருப்போம். 

ஆழமாக சொல்வதென்றால் உடல் மட்டும் இங்கு இருக்கிறது , உள்ளம் ஊரைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த பத்துவருடங்களில் என் கனவுகளில் இந்த ஊர் ( சவூதி) ஒருமுறைகூட வந்ததே இல்லை.
எப்படியோ ஒரு வழியில் வாழ்வை உயிர்ப்போடு வைத்திருக்க முயற்சிக்கிறோம். 

ஏன் எவ்வளவு கஷ்ட்டப்படணும் ஊருக்கு போகலாம் என்று தோன்கிறோம் . 
மனுஷ் ஒரு கவிதையில் கூறியது போல "ஊருக்கு செல்லும் எல்லா வழிகளையும் அழித்துவிட்டு தானே இங்கு வந்திருக்கிறோம்", என்ற வரி தான் நினைவுக்கு வருகிறது.

எங்கு நம் பொருளியல் தேவைகளும் அன்றாட லெளதீக தேவைகளும்  தடையில்லாமல் கிடைக்கிறதோ அங்கேயே முடங்கிவிடத்தான் பெரும்பாலான ஆண் மனம் நினைக்கிறது. அதில் நானும் ஒருவனாக தான் நெளிந்து கொண்டு இருக்கிறேன்.



புதன், மார்ச் 29, 2017

அனுபவம் இலவசம் !!!


சமீபத்தில் ஒரு DSLR கேமரா வாங்கினேன். அதை பற்றி இணையத்தில் படித்துக்கொண்டு இருக்கிறேன். படிக்க படிக்க தான் அதன் பிரமாண்டம் துலங்கி வருகிறது. தொழில் நுட்பமும் ரசனை சார்ந்த நுண்ணுரவும் இருந்தால் மட்டுமே புகைப்பட கலை நமக்கு கைகூடும்.
இணையத்தில் வினோத் என்பவற்றின் வீடியோ பதிவுகள் நன்றாக இருக்கின்றன.
https://www.youtube.com/channel/UCMMtgJ_Y92Xbr1ekvqG3IuA
அனுபவங்களை தன் நேரத்தையும் உழைப்பையும் செலவழித்து பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவுகள் ஒரு அடிப்படையான புரிதளை நமக்கு அளிக்கிறது. மேற்கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து எடுத்து பழகவேண்டும்.
ஒரு பறவையை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தேன். அமர்ந்த நிலையில் எடுத்துவிட்டேன் அது பறப்பதற்காக பட்டனில் கைவைத்து காத்திருந்தேன். சிறகு விரிக்கும் தருணத்திற்காக காத்திருந்த அந்த நொடிகள் சித்தம் அனைத்தும் விரலில் குவிந்திருந்த அந்த நொடிகள் என்னை பரவசத்தில் ஆழ்த்தியது. அந்த ருசிக்காகத்தான் புகைப்பட கலைஞசர்கள் கேமராவை தூக்கிக்கொண்டு காடுமலைகளில் அலைகிறார்கள் போலும்.
இணையம் வந்தது முதல் இத்தகைய அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்தல் அதிகமாகி உள்ளது. உலகில் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஏதோ ஒரு நபர் அதை பயன்படுத்திக்கொள்கிறார் பெரும்பாலும் இலவசமாக.
எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் ஒரு சக என்ஜினியர் ஒருவர் கையில் ஒரு டாக்குமெண்ட் வைத்திருந்தார். என்னது என்று வாங்கி படித்துப்பார்த்தேன். அவர் நான் ஒரு prablam solve பண்ணமுடியாம இரண்டு நாள் திணறி கொண்டு இருந்தேன். யாரோ ஒரு புண்ணியவான் அதப்பத்தி நெட்ல எழுதி இருத்தான். அது தான் இது என்கிறார்.
நான் அந்த புண்ணியவான் நான் தான் இது என்னோட blogல நான் எழுத்தியது என்றேன். அவர் ஓ என்கிறார். நான் எழுத்தியது என் துறையில் சிறிய விஷயம் தான். ஆனால் எந்த புத்தகத்திலும் கிடைக்காத என் தனிப்பட்ட அனுபவம்.
என் துறையில் நான் சந்தித்த அனுபவங்களை blog ல் தொகுத்து வருகிறேன். அது எனக்கு பின்னும் நிற்கும்.
http://testingcommissioning.blogspot.com/
விளையாட்டாக துவங்கியது இன்று உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 200 பேர்வரை பார்க்கிறார்கள். மொத்த பார்வையாளர்கள் ஒரு லட்சம் தாண்டி போய்க்கொண்டு இருக்கிறது.
மனதில் பகிர்தலின் சந்தோசம். யாரோ ஒருவரின் புண்ணியவான் என்ற வாழ்த்து. அது போதும்.

வியாழன், மார்ச் 09, 2017

மனித நியதி


இப்போது நான் படித்துக்கொண்டு இருக்கும் "பின் தொடரும் நிழலின் குரல்"  நாவலில் ஒரு வார்த்தையை படித்தேன்  " மானுட நியதி ".  இந்த வாரத்தை கடந்த ஒரு வாரமாக மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

எந்த ஒன்றை பற்றி நினைவுகள் எழுந்தாலும் அது இந்த வார்த்தையில் வந்து முடிவடைகிறது.

இந்த வார்த்தைக்கு அர்த்தங்களை தொகுத்துக்கொள்ள
என் வாழ்க்கை நிகழ்வுகளை , இதுவரை படித்தவற்றை , இதுவரை பார்த்த கேட்டவற்றை துழவிக்கொண்டே இருக்கிறேன். இன்னும் தொகுத்துக்கொள்ள முடியவில்லை.

 ஆனால் இந்த வார்த்தை நான் கடந்துவந்த சில மனிதர்களை மனிதர்களை மட்டும் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

ஒரு நாள் இரவு கவிதாவுக்கு ( மனைவிக்கு) கடும் வற்றுவலி. அந்த இரவில் அரசு மருத்துவமனை மட்டுமே திறந்திருந்தது. காலையும் வலி தொடர்ந்தது. திடீர் என்று படுக்கையிக்கு அருகில் வாந்தி எடுத்துவிட்டாள். நர்ஸ் வந்தால் தயவில்லாமல் திட்டுவார்கள் என்று தெரியும். மூளையிலிருந்து ஒரு கிழவி எழுந்து வந்தாள். வெளியே சென்று ஒரு இரும்பு முறத்தில் மண்ணும் தென்னை துடப்பமும் எடுத்துவந்து வாந்தியை முற்றாக வாரி வெளியில் கொட்டிவிட்டு தண்ணீரால் சுத்தமாக அலம்பிவிட்டு மறுபடியும் அதே முலையில் அமர்ந்துகொண்டாள். அருகே கருவுற்ற சிறுவயது பெண் படுத்திருந்தாள்.
அன்றிருந்த பதற்றத்தில் சிறிது நேரத்தில் அதை மறந்து போனேன்.

ஆனால் பலதருணங்களில் அந்த கிழவியை  நினைத்து பார்த்திருக்கிறேன். அந்த கிழவி என் முகத்தை முற்றாக பார்க்கவே இல்லை. எங்களிடம் எதையுமே எதிர்பார்க்கவில்லை. தன் கடமை போல அந்த வேலையை செய்து முடித்துவிட்டு தன் இயல்புக்கு சென்றுவிட்டாள்.

 அதே போல இன்னொரு மனிதர். அவர் என் தூரத்து பெரியப்பா பெங்களூருக்கு 80 பதுகளில் சென்றவர். படித்து முடித்து பெங்களூருவில் நண்பர்கள் அறையில் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்தேன். அவர் ஞாபகம் வந்து பார்க்கபோனேன். திருவிழாக்களில் திருமண நிகழ்வுகளில் மட்டும் பார்த்து சிரித்த உறவு. ஆனால் சந்ததோஷமாக வரவேற்றார். நான் வேலை தேடுகிறேன் என்று தெரிந்து மறுநாள் காலை என்னை வரச்சொன்னார். மறுநாள் காலை ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு தனக்கு தெரிந்த நண்பர்கள், அலுவலர்கள், தொழிற்ச்சாலை நண்பர்கள் சொந்தங்கள் என்று அத்தனை பேரிடமும் என்னை அறிமுகம் செய்து எனக்காக வேலை கேட்டார்.  ஒரு பெரிய வீட்டின் தாழ்வாரத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தோம். ஒரு பெண்மணி சித்தப்பா என்று வாஞ்சையாக அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். கடைசியில் ஒரு ஆள் நேர்த்தியான உடையில் வெளியில் வந்தார்.
பெரியப்பா அவரிடம் என்னை பற்றி சொல்ல துவங்கும் முன் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார். அவன் கண்டிப்பா பண்ணுவான் என்று உற்சாகமாக என் தோளை அனைத்து அழைத்துவந்தார்.
 அவர் அறிமுகம் செய்த மனிதர்களால் எனக்கு வேலைகிடைக்கவில்லை. ஆனால் எங்கள் கிராமத்திலிருந்து அவரை நம்பி எத்தனையோ பேர் பெங்களூருக்கு சென்றிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் நல்ல வளமையோடு இருக்கிறார்கள். இன்றும் கூட அவர் யாரைவது தன்னுடன் அழைத்துக்கொண்டு அவர்கள் வாழ்வுக்காக அலைந்துகொண்டு இருக்கலாம்.

இதை போன்ற  மனிதர்களை என் வாழ்நாள் முழுக்க கடந்து வந்துகொண்டே இருக்கிறேன்.

சாதி மதம், கொள்கைகள், தர்க்கம், பொருளியல்  அத்தனையும் தாண்டி இது போன்ற மனிதர்கள் இந்த மானுடத்துக்காக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

என் தர்க மனத்தைக்கொண்டு அவர்களின் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் அவர்களை இயக்குவது எதோ ஒரு "மானுட நியதி" என்று மட்டும் புரிகிறது.

அவர்களை நிறுத்தி உங்களுக்கு எந்தப்பயனும் இல்லாமல் ஏன் இதை செயிகிறீர்கள் என்று கேட்டால் ஒருவேளை அவர்கள் மெலிதாக சிரிக்கக்கூடும்  அல்லது தெரியவில்லை என்று சொல்லலாம்.

ஆனால்  வாழ்வில் நான் சோர்வுறும்போதும் மனிதம் மீது எனக்கு அவநம்பிக்கை எழும் போதும் இது போன்ற மனிதர்கள் தான் என் நினைவில் எழுகிறார்கள். எளிமையாக புன்னகை மட்டும் செய்துவிட்டு போகிறார்கள்.


வியாழன், பிப்ரவரி 16, 2017

மாடு விடும் திருவிழா

ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தபோது தென் தமிழகத்தில் சில கிராமங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு தமிழ் நாடே எழவேண்டுமா என்ற  விவாதம் எழுத்தது.

எங்கள் ஊர் வடதமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே உள்ள மோட்டூர் கிராமம்.

எங்களூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கும் ஆனால் அதற்க்கு பெயர் "மாடுவிடும்  திருவிழா". ஜல்லிக்கட்டு மாட்டுக்கு "குமார் மாடு " என்று  பெயர். தெருவின் ஒருமுனையிலிருந்து மாடுகளை அவிழ்த்து விடுவார்கள். அது எவ்வளவு குறைந்த நேரத்தில் தெருவின் அடுத்த முனையை அடைகிறது என்பது தான் வெற்றிக்கான கணக்கு.

பொதுவாக மாட்டு பொங்கல் அன்று அந்த பஞ்சாயத்தை சேர்ந்த மாடுகாளை  மட்டும் கழுவி அலங்கரித்து தெருவில் விடுவார்கள். இளைஞசர்களும் பெரியவர்களும் தெருவின் இருபுறமும் நின்று மாட்டின் மீது கை போடுவார்கள் ( மாடு ஓடும்போது கையால் தட்டுவார்கள் ).

சிறுவர்கள் பெண்கள் அனைவரும் வீடுகளுக்கு மேல் அல்லது தட்டிகளுக்கு பின்னலிருந்து அதை உற்சாகமாக கண்டுகளிப்பார்கள்.

பெண்கள் சிறுமியரின் வண்ண உடைகள் தெருவின் இரு புறமும் கட்டிய தோரணம் போல இருக்கும்.

ஆண்கள் கபடி விளையாட்டில்  நிற்பதுபோல இருவர் மூவர் என கைகோர்த்து மாடுகளை எதிர்கொள்வர்.
"மகுடி வீட்டு மாடு ", செவிடி ஊட்டு மாடு என்று , சொட்டி காலன் மாடு என்று ஊரில் ஒவ்வொரு மாட்டுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். அந்த மாட்டுவைத்திருப்பவர்களுக்கு ஊரில் தனி மரியாதை உண்டு.
பெரும்பாலான  மாடுகள் அவிழ்த்தவுடன் மின்னல் வேகத்தில் தெருவை கடக்கும். அதன் மீது கை போடவே முடியாது. சில நன்றாக மொத்து வாங்கும். மிகச்சில மட்டும் நின்று விளையாடும். தெருவில் நிற்கும் அத்தனை பெரும் வீட்டு திண்ணைகளில் ஏறி ஒடுங்கிக்கொள்வர்.

இந்த நிகழ்வு முடிந்ததும் ஊரில் உள்ள அனைத்து பசுமாடுகளை ஓரிடத்தில் குழுமச் செய்வார்கள். மாடுகளுக்கு நோய் வாராமல் இருக்க பூசை செய்வார்கள் . சிறுவர்களுக்கு அங்கு அனுமதி இல்லை. பெரிய இலையில் சோறு கொட்டி குங்குமம் சேர்த்து அதை பிசைந்து படைப்பார்கள், பூசை முடிந்ததும் அதை ஊர் முழுக்க வீடுகளில் உள்ள மாட்டு கொட்டகைகளில் "பொலியோ பொலி" "பொலியோ பொலி" என்று கத்திக்கொண்டே வீசுவார்கள். அப்படி வீசுபவரின் எதிரே ஊர்மக்கள் யாரும் வரக்கூடாது.

அதற்க்கு மறுநாள் காணும் பொங்கல் சிறுவர்களுக்கானது. அன்று சிறுவர்கள் கன்று குட்டி விடுவார்கள். நான் சிறுவனாக இருந்த போது எங்கள் பசுமாடு வெள்ளை கன்று குட்டி ஈன்றது. அதை எப்படியாவது குமார் மாடாக ஆக்குவது தான் என் அப்போதைய லட்சியமாக இருந்தது.
அதன் சின்ன திமிலில் சாக்கு பை போட்டு பல்லால்  கடித்து இழுத்தால் அது பெரியதாக வளரும் என்று யாரோ சொன்னார்கள். தினமும் நான்கு முறை அதை செய்ய போக கன்றுக்குட்டி என்னை பார்த்தாலே மிரள ஆரமித்தது.

காணும் பொங்கல் அன்று கன்று குட்டியை குளிப்பாட்டி அதன் மொட்டு கொம்புகளில் வண்ணம் பூசி நான்கைந்து நண்பர்கள் கூடி நடுத்தெருவுக்கு அழைத்து சென்றோம். செல்லும் வழியெல்லாம் தகர டபாவில் நண்பர்கள் மேளம் அடித்துக்கொண்டே வந்தார்கள். பொங்கலுக்கு சேர்ந்த காசு பையில் இருந்தததால் துள்ளிக்கொண்டே வந்தோம். தெருவெல்லாம் சிறுவர்களின் கூட்டம் கன்று குட்டிகளின் கூட்டம். எங்கள் முறை வந்ததும் நாங்கள் அவிழ்த்துவிட்டோம். கன்று குட்டி ஓடவே இல்லை. கீழே குனிந்து மண்ணை மண்ணை முகர்ந்து பார்த்தது. மற்றவர்களுக்கும் கேலியாக இருந்தது. கூட வந்த நண்பர்களும் கழண்டு கொண்டனர். மறுபடியும் கன்று குட்டியை படாத பாடுபட்டு இழுத்து வந்து வீட்டில்கட்டுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

காணும் பொங்கல் முடிந்து அடுத்த மாதத்தில் பரிசு வைத்து மாடுகளை விடும் போட்டி நடக்கும். போட்டிக்கு வெளியூரிலிருந்து மாடுகள் வரும். நிகழ்ச்சி திருவிழா போல நடக்கும்.
ஒவ்வொரு மாட்டுக்கு ஐந்து சுற்றுகள் அனுமதி. மாடு தெருவை கடக்கும் வேகத்தை ஐந்து முறையும் கணக்கிட்டு  அதன் சராசரியை கணக்கிடுவார்கள். குறைந்த நேரத்தில் ஓடிய மாட்டுக்கு முதல் பரிசு.

பல வருடங்களுக்கு பிறகு " மாடுவிடும் திருவிழா " எங்களூரில் அறிவித்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

முதல் பரிசு 25001 ரூபாய்.

இது போன்ற விழாக்கள் தான் கிராம வாழ்வை உயிர்ப்போடு வைக்கிறது.

ஜல்லிக்கட்டுக்காக போராடிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.






 

புதன், பிப்ரவரி 15, 2017

சசிக்கலாவை ஏன் பிடிக்கவில்லை

சசிக்கலாவை ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்வி எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். பதில் தெரியவில்லை என்பது மட்டும்தான்.

ஆனால் கொடும் வெறுப்பு இருந்தது.

பின் நானே சிலகாரங்களை தொகுத்துக்கொண்டேன். அதில் மிக முக்கியமானது அவர்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைப்பது.

முன்பு அரசியல் என்பது அதில் கொஞ்சம் ஈடுபாடு உள்ளவர்கள் மட்டும் கவனிப்பது ஆனால் இன்று அப்படி அல்ல. ஆன்ராய்டு போன் வைத்திருப்பவர் அனைவரும் இந்த இந்த நாட்டில் நடப்பவற்றை கவனிக்கிறார்கள். தன் எதிர்ப்பை அனைவருக்கும் தெரியும்படி முன்வைக்கிறார்கள்.

பெண்களின் ஈடுபாடு இன்னும் அதிகம்.

சசிகலா  தன்னை ஜெ போல அலங்கரித்துக்கொண்டாலும் உடல்மொழியும்  வாய் மொழியும் உள்ளிருப்பதை அப்பட்டமாக காட்டியது.

பெண்கள் அதைத்தான் திரும்ப திருப்ப திட்டிக்கொண்டே இருந்தார்கள்.

சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு கேட்டு

காலையில் எனக்கிறைந்த கொண்டாட்டா மனநிலை வெகு நாட்களுக்கு பின் அனுபவித்தது.

எதோ ஒரு விடுதலையை உணருகிறேன்

கொண்டாடுவோம் 

வெள்ளை யானை - நாவல் - ஒலி புத்தகம்



திரு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய "வெள்ளை யானை" நாவல்

 ஒலி புத்தகம்

நண்பர்களே இது ஒரு அழகிய விருப்பமான உழைப்பு.

இந்த ஒலி புத்தகத்தை முடித்து பதிவேற்றும்போது அவ்வளவு மனநிறைவாக இருக்கிறது.

வெள்ளையானை நாவலை பற்றி நான் என் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்  http://giramathanonline.blogspot.com/2016/03/blog-post.html




PART 1



PART 2
  
PART 3

 

PART 4


PART 5


PART 6



PART 7

 

PART 8

 

PART 9
 

PART 10

PART 11


PART 12


PART13 



PART 14

 

திங்கள், பிப்ரவரி 06, 2017

அன்புள்ள மகளுக்கு


நீ படித்து முடித்தவுடன் உன் வேலைக்காக என் நண்பர்களை அணுகினேன். ஆனால் அவர்களின் நிலை உதவும் நிலையில் இல்லை. மேற்கொண்டு நானும் அதிக சிரத்தை எடுக்கவில்லை. அதற்காக மெல்லிய குற்றவுணர்வை உணர்கிறேன்.

ஆனால் உனக்கு வேலை கிடைத்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. என் வாழ்த்துக்கள்.

நான் இரண்டு விதமான மனிதர்களை பார்க்கிறேன். வேலை கிடைத்தவுடன் தன் தின வாழ்வை வேலைக்கார தேனீ போல மாற்றிக்கொள்பவர்கள்.

அது தேனை பூவிலிருந்து எடுத்து அடையில் சேர்த்துக்கொண்டே இருக்கும். அதற்காக கடுமையாக உழைக்கும். அதற்க்கு வேறு எதுவும் தெரியாது. அந்த தேனை கூட அது ருசிப்பதில்லை.

மக்களில் பெரும்பான்மையோர் இப்படித்தான்.
எழுவார்கள் தின்பார்கள் வேலைக்கு சென்று திரும்புவார்கள் தூங்குவார்கள்.

சமூகத்தின் பெரும் பகுதி இவர்கள்தான்.

இரண்டாவது வகை சமூகத்தில் சொற்பமானவர்கள். அன்றாட வாழ்வியல் நிகழ்விலிருந்து சற்று விலகி யோசிப்பவர்கள் . அவர்கள் கனவு காண்பவர்கள் .  தன்னை இலக்கியம் ,கலை , பயணங்கள், புத்தகங்கள் , இசை , ஆன்மிகம் ....ect , வழியாக தேடிக்கொண்டே இருப்பவர்கள். தேடலையே வாழ்க்கையாக கொண்டவர்கள். அவர்கள் படைப்பாளிகள். படைத்தளின் வழியாக தன்னை கண்டடைபவர்கள்.

தான் செய்யும் தொழிலையே முழுமையாக நேசித்து தன்னையும் தொழிலையும் புதுப்பித்துக்கொண்டே இருப்பவர்கள்.

முதல் வகை பெரும் மரம் என்றால் இரண்டாம் வகை அதில் பூக்கும் மலர்கள் அல்லது கனிகள்.

வாழ்வை ஒரு எளிய சுழற்சியாக மாற்றிக்கொண்டு தொடர்ந்து ஒரே பாதையில் ஓடிக்கொண்டு இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் சலிப்புறுகிறார்கள். ஏன் இந்த வாழ்க்கை என்று தளர்வார்கள்.

தினமும் புதியதாய் பிறப்பவர்கள் வாழ்வை தினமும் கொண்டாட பழகியவர்கள். பிறர் இவர்களை நகையாட கூடும். அதையும் கொண்டாடுபவர்கள் இவர்கள்.

"நீரில் மிதந்து வரும் நீர் குமிழிகள் என் பாதம் தொட்டு உடையும் போது அதனிடம் சொல்லவேண்டும் போல தோன்றும் நானும் உன்னை போல தான் என "

நீ  எழுதிய இந்த வரிகள் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. நீ வாழ்நாள் முழுக்க இரண்டாம் வகையில் இருக்க வாழ்வை தினம் தினம் கொண்டாட வாழ்த்துகள்.







அருவெறுப்பு

மலத்தில் அமர்ந்திருந்த ஒரு ஈ திடீர் என்று என்  வாயில் நுழைந்தது. அதை நான் மென்றும் விட்டிட்டேன்.

காலையிலிருந்து வாயை கழுவிக்கொண்டே  இருக்கிறேன். வாய் தன் இயல்புக்கு வந்தாலும் மனதில் அந்த அருவெறுப்பு போகவே இல்லை.

அது  ( வயதுக்கு கூட மரியாதை தர முடியாது ) அந்த இருக்கையில்  அமர்வது அவ்வளவு அருவெறுப்பாக இருக்கிறது.

வேலைக்காரி முதல்வராகிறார் என்கிறார்கள். தயவுசெய்து வீட்டில் வேலை செய்பவர்களை கேவலப்படுத்த வேண்டாம். வீட்டு வேலை செய்து உழைத்து தன் பிள்ளைகளை படிக்கவைத்து நல்லநிலைமைக்கு கொண்டுவரும் தாய்மார்கள்  இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு கூடிய கூட்டம் நீங்கள் நடத்தும் இந்த நாடகத்துக்கு எதிராக கூடிய கூட்டம் என்று உங்களுக்கு புரியவே இல்லையா ?

அது எந்த தொகுதியில் நின்றாலும் அந்த மக்களை காலை தொட்டு கொஞ்சுகிறோம் தயவு செய்து தர்மத்தை நிலைநாட்டுங்கள்


வியாழன், ஜனவரி 26, 2017

மகன் வயது 4.8




இவனுடன் விளையாடுவதற்கு கொக்கினும் பொறுமை வேண்டும்.

விளையாட்டின் அனைத்து விதிகளையும் அவனே உருவாக்குவான்

அப்பா இந்த இடத்தில் ball பட்டால் winner ஓகே

சரி என்று அடித்து ball அங்கு பட்டால் அப்பா இங்க வைங்க பா

இங்க வச்சி அடிங்க

சரி என்று குனிந்தாள்

அப்படி இல்ல இப்படி வைங்க ,

சரி என்று அடிக்க முற்பட்டால் பந்தை எடுத்துக்கொள்வான் I am the winner என்பான்.


நேற்று முன்தினம் மாலை நானும் அவன் நண்பர்களும் விளையாடிக்கொண்டு இருந்தோம்.

அதில் ஒரு குட்டி பையன் ஒரு பெரிய பந்தை எடுத்து வந்தான்.

அதை பார்த்து மற்ற குட்டிகளும் அதே போல பந்தை எடுத்து வந்து விளையாடினர்.

அதைப்போல பந்து இவனிடம் இல்லை

சாலை ஓரத்தில் எப்பொழுதாவது போடப்படும் கடைகளில் கிடைக்கக்கூடிய பெரிய பந்து அது


நேற்று நான் அலுவலகத்தில் இருக்கும்போது என்னிடம் போனில் பேசினான்

அப்பா எனக்கு அந்த Ball வேணும் வாங்கிட்டு வாங்க என்றான்

தம்பி அது கிடைக்காது பா அந்த கடை எப்பவாது தான் போடுவான்

அப்பா இன்னிக்கி கட இருக்கும் பா வாங்கிட்டு வாங்க

நான் வழக்கமாக போவது இருவழி சாலை

போகும்போது அது போன்ற சாலையோர கடைகளை பார்ப்பேன்

ஆனால் வரும்போது ஒரு நாளும் பார்த்தது இல்லை.

இன்று வரும்போது பாதிவழியில்   திடீரென ஒரு கடையை கடந்தேன்

ஆனால் நிறுத்தி பின்னால் வர முடியாத சூழல்

தவறவிட்டோமே என  வருந்தி வந்துகொண்டு இருந்தேன்

அடுத்து ஐந்து நிமிட தூரத்தில் இன்னொரு கடை இருந்ததைக்கண்டு துள்ளலுடன் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினேன்

ஒரு அரபி சிறுவன் ஓடிவந்தான். அவன் அரபியில் கேட்டது புரியவில்லை. நான் அந்த பந்தை கை காட்டினேன். அவன் அரபியில் விலை சொன்னதை புரிந்துகொள்ளாமல் போன் எடுத்து அதில் எண்களை காட்டினேன்.

அவன் 15 என்று அழுத்தினான். நான் பணத்தை கொடுத்ததும் அவன் பந்தை கொடுத்தான்.

அவன் அப்பா ஓடிவந்து அது 20 ரியால் என்று பையனை தட்டினார். அவன் முகம் சுருங்கி என்னை பார்த்தன்.

நான் மறுபடியும் 5 ரியால் கொடுத்ததும் வானத்தில் வான்வெடி வெடித்து சிதறுவது போல  மலர்ந்தான்.

அந்த சிரிப்பு கையில் ஒட்டிக்கொள்ளும் செம்பருத்தி மகரந்தம் போல என்முகத்திலும் ஒட்டிக்கொண்டது

நான் வீட்டின் கதவை தட்டி பந்தை மகனிடம் கொடுக்கும் போது அதே மலர்வை அவனிடமும்  கண்டேன்.

குழந்தைகளுக்கு தனியான ஒரு உலகம்

நமக்குள்ளும் கொஞ்சம் குழந்தைமை இருந்தால் மட்டுமே அந்த அதிசய உலகத்தை அணுக முடியும்



புதன், ஜனவரி 04, 2017

மகன் வயது 4.7


( -------------------------------------மணி 7 காலை ----------------------------------------------------)

கவிதா : அக்ஷய் வேன்  வந்துடும் எழு .

அக்ஷய்:  இன்னும் 2 மினிட் மா.

கவிதா : ஏம்பா எஸ்சஸைஸ் முடிச்சாச்சா ?

இந்த ஜன்னலை தொறந்தா மூட மாட்டியா . மண்ணெல்லாம் உள்ள வருது. டெய்லி நா உனக்கு சொல்லணும். உன் பையனே மேல்.

உங்க ரெண்டு பேருக்கு வேலை செய்றதே எனக்கு பொழப்பு. இனி நீங்களே உங்க வேலைய செஞ்சிக்கங்க

( 10 நிமிடம் கழித்து )

டாய் எழுந்தீயா  இல்லையா .... அப்பா குளிச்சிடாங்க பாரு வா வா

நான் : கவி  அந்த டவலை எடுத்து குடு .. ,

கவிதா : முடியாது இப்பதானே சொன்னேன் நீயே வந்து எடுத்துக்க ,,,

இரு இரு அப்படியே வராதே  ( ஈரமாக ) இந்தா ..

செல்ல குட்டி நீங்க உள்ள போங்க

( 5 நிமிடம் கழித்து )

அக்ஷய் : அம்மா ஆயி கழுவி உடுங்க

கவிதா : என்னடா ஆயே போல

அக்ஷய் : அம்மா ஆயி அப்புறம் வரும்மா நீங்க இப்ப கழுவி உடுங்க

கவிதா : சரி திரும்பு

2 மினிட்ல குளிச்சிட்டு வரணும் ஓகே வா

ஏம்பா காலைல கம்ப கூழ் போதுமில்ல

நான் : போதும்  போதும் அப்படியே ரெண்டு தோச கொஞ்சம் கடலை சட்டினி

கவிதா : ம்ம்ம்  அப்படியே பூரி பொங்கல் வடை எல்லாம் செய்றேன் சாப்பிட்டு போ

நான் : இல்லபா டைம் ஆச்சு கூழே போதும்

கவிதா : மத்தியானம் களி கருவாட்டு குழம்பு

நான் : வாவ் நைஸ்

கவிதா : நல்லா தின்னு

நான் : ஓகே பை அக்ஷய் பை செல்லம்

கவிதா : அக்ஷய் வா டிரஸ் போட்டுக்கா மொதல்ல டிவிய நிறுத்து காலங்காத்தால போடுவான்

அக்ஷய் : அம்மா எனக்கு க்ரீன் டிரஸ் வேண்டாம் ம்ம்ம் ரெட் வேணும்

கவிதா : ம்ம்ம் ரெட் டீ ஷர்ட் ஓகே

அக்ஷய் : ம்ம்ம் வேண்டாமா நேத்து போட்டுட்டு போனேன் இல்ல வைட் ஷர்ட் அது வேணும்

கவிதா : அது வாஷிங் மெஷின்ல போட்டுட்டேன்  அத எடுத்தா ஸ்மல் அடிக்கும் ஸ்கூல்ல யாரும் உன் பக்கத்துல வரமாட்டங்க

அக்ஷய் :  அதே போட்டுக்குறேன் மா ப்ளீஸ்

கவிதா : சரி இரு ( ஆழ தேடல்  )

                 

!!!!!! உயிரே உன்னை உன்னை வாழ்க்கை துனையாக !!!!!!!

அக்ஷய் :  அம்மா போன் அடிக்குது  டிரைவர் அங்கிள்

கவிதா : இந்த வா வைட் டிரஸ்

அக்ஷய் :  ஓஒ ச்சி சீ  நாத்தம் வேணாம் நா க்ரீன் டிரஸ் போட்டுகிறேன்

கவிதா : ஐயோ சந்திரா ................................. இந்த வா க்ரீன் டிரஸ் போட்டுக்க டைம் ஆச்சு

அக்ஷய் : ஏம்மா ஆயாவா கூப்புடுறீங்க

( 2 நிமினிடம் கழித்து )

கவிதா :  செல்லம் இந்த வாழைப்பழத்தை சாப்பிடுங்க

அக்ஷய் : கழுவிடிய மா ? புருட்ட கழிவித்தான் சாப்பிடணும்ன்னு சொன்னிங்க ? கழுவுங்கமா

கவிதா : !!!!!!!!!!!!! வாழபழம் கழுவ வேண்டமுடா அப்படியே சாப்பிடலாம் ..

அக்ஷய் : அப்ப ஆப்பிள் ?

கவிதா : கழுவனும்

அக்ஷய் : அப்ப கிரேப்  ?

கவிதா : டேய் வேன்  வந்துடும் டா ... இந்த சாப்பிடு கொஞ்ச கொஞ்சமா நல்ல மென்னு சாப்பிடு

(5 நிமிடம் கழித்து )


கவிதா : அக்ஷய் ஷுவா செப்பலா

அக்ஷய் : ரெட் ஷு

கவிதா :  சரிவா போலாம்

அக்ஷய் : அம்மா லிப்ட்ல வேண்டாம் படியில போலாம்

( கீழ்தளம் )

அக்ஷய் : அம்மா சச்சு சூச்சு  வருத்து

கவிதா :  என்ன ?

அக்ஷய் : சுச்ச்சு

கவிதா : ம்ம்ம் சரிவா கிழ அனிதா ஆண்டி வீட்டுல போயிட்டு வந்துடலாம்

----------------------------------------டிரிங் ட்ரிங் -------------------------------------------------

அனிதா  ஆண்டி : ஓ வா உள்ள வா

கவிதா : வேன் வந்துடும் இவன் சூச்சு போணுமா

அனிதா  ஆண்டி : ஹாய் அக்ஷய் நேத்து சாக்லெட் கொடுத்தேனே நல்லா இருந்ததா

அக்ஷய் : ம்ம்ம் ...

கவிதா :  சீக்கிரம் போயிட்டு வா

அனிதா  ஆண்டி : நேத்து கிருஷ்மஸுக்கு கேக் வெட்னிங்களா

கவிதா : இல்ல இவனுக்கு யாரோ நம்ம வீட்டுக்கு சாண்டா குருஸ் வந்து கி ஃப்ட்ட தருவாருன்னு சொல்லி இருக்காங்க நைட் படுக்கும்போது காலையில வருவாரான்னு கேட்டான் , காலையில எழுந்து கதவை தொறந்து கி ஃப்ட்ட தேடினா

ஏம்மா அவரு வரலன்னு பரிதாபமா கேட்டான் அப்புறம் அவங்க அப்பா ஆபிஸில் இருந்து  வரும்போது கேக்  கி ஃப்ட் எல்லாம் வாங்கிட்டு வந்தாரு . அப்புறம் குட்டி குட்டி லைட் போட்டு ஸ்டார் எல்லாம் வச்சு கேக் வெட்டின பிறகு ரொம்ப சந்தோஷமாயிட்டான் .

அக்ஷய் :  அம்மா சூச்சு வரல sorry மா

கவிதா : சரி செல்லம் வா போலாம். சரி வறேன்.

( கீழே சாலையில் வேன் வந்தது )

வேன் டிரைவர் : அக்ஷய் குச்சா மெதுவா ஏறு....

 கவிதா :  bye bye

----------------------- ( மாலை 6.30 ) --------------------------

நான் : ஹாய் அக்ஷய்

அக்ஷய் : அப்பா நான் ஹோம் ஒர்க் முடிச்சிட்டேன்

நான்: ஓ சூப்பர் அக்ஷய்

கவிதா : வந்த உடனே ஹோம் ஒர்க் எழுதிடார்ப்பா

நான் : உன்ன அழ வச்சி கதற வச்சி ரெண்டு அடி வாங்கிட்டு தானே எழுதுவான்

கவிதா: இல்ல பா என்னனு தெரியல ரெண்டு நாலா வந்தவுடனே ஹோம் ஒர்க் எழுதிட்டு விளையாட போறான்.

நான் : குழந்தைங்க மனசில தான் தெய்வங்க குழந்தை தனமா இருக்கு

கவிதா: ஹெலோ உங்க ஆசிரியர  படிசிட்டு வந்தியா ? தம்பி வர வர நீ பேசுறது ஒன்னும் புரிய மாட்டிங்குது , கமண்டலத்த காதுல மாட்டிட்டு கிளம்பிட போற

அக்ஷய் : அப்பா I need big toys ?

கவிதா : அவன் என்ன சொன்னா கேளு

கடையில நா மட்டும் சக்கர, அரிசி, பருப்பு, சோப்பு , காய் எல்லாம் வாங்கிக்கிறேனாம் அவருக்கு மட்டும் ஒரு பொம்மை கூட  வாங்கி தர மாட்டுறோமா

நான் : அதானே ...

கவிதா : என்ன அதானே இப்ப அவரு பெரிய பிரச்சனையே பெரிய பையனா அக்குறது தான்

பெரிய பையன் ஆகிட்டா உன்ன விட ஸ்பீடா கார் ஓட்டுவானாம் , சூர்யா அண்ணா மாதிரி வேகமா பைக் ஓட்டுவானாம் , முகில் அண்ணா மாதிரி ஷெட்டில் ஆடுவானாம் முக்கியமா girls கூட விளையாட மாட்டானாம்

நான் : அவருக்கு இப்ப நான் தான் பிரச்சன. என்ன கடந்து அவரு போகணும் 

கவிதா : சரி நீ போய் குளிச்சிட்டு வாப்பா அக்ஷய் நீ போய் சைக்கிள் ஓட்டு

( -------------------------------- இரவு 8 மணி ----------------------------------------------------------)

கவிதா : சாப்பாடு ரெடி வாங்க வாங்க .... டேய் டீவிய ஆப் பண்ணு

நான்சா : சாப்பிடும்போது டீவி பக்கத்தே

கவிதா : ஐயோ பொழுதண்ணிக்கும் டோரிமான் சிம்ச்சான் ஓடிட்டே இருக்கு

அக்ஷய் : நீங்க மட்டும் phone பாக்கறீங்க அப்பா எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டர் பாக்கறாங்க

நான் : சரிப்பா நா பாக்கல நீ டிவி ஆப் பண்ணிட்டு சாப்பிடு

அக்ஷய் : வாவ் நைஸ் எம்மி

நான் : டேய் இவன் வெறும் இட்லி சப்பிட்டே எம்மின்னு சொல்லுவான்

கவிதா : அவன் அதையாச்சும் சொல்றானே

( ------------------------------------------------இரவு 9.00 மணி ---------------------------------------------)

நான் :  அக்ஷய் ப்ரெஷ் பண்ணலாம் வா

அக்ஷய் : வந்துட்டேன்

நான் : இந்த விளையாடிய பொம்மையெல்லாம் எடுத்து வச்சியா

இந்த ...ஈ....ஈ காமி  துப்பு நல்ல துப்பு ஆ காமி தண்ணிய கொப்புளிச்சி துப்பு  ------------ இரு இரு சுச்ச்சு  போ ...

கவிதா : அக்ஷய் பெட்ல குதிக்காதே படு

அக்ஷய் : அப்பா கத சொல்லுங்க

நான் : ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்களாம்

அக்ஷய் : அப்பா அயர்ன்  மேன்  கத

நான் : அயர்ன் மேன் அவங்க ஆயாவ பாக்க கிராமத்துக்கு போனானாம் . அவன பாத்த அவங்க ஆயா பயந்துடாங்களாம். ஆயா நான் தான் பழநின்னு அயர்ன் மேன் சொன்னானாம்.

அக்ஷய் : அம்மா அயர்ன் மேன்க்கு ஆயா இருக்காங்களா அம்மா அவன் எப்படி மா சூச்சு போவான்

கவிதா :  அப்பாவ கேளு

நான் : அத விடு அவங்க ஆயாவும் அவனும் சந்தைக்கு முறுக்கு விக்க போனாங்க

அக்ஷய் : சந்தையா அடின்னா ?

நான் : அது வில்லேஜ் எக்சிமீசன் ................ ,, அயர்ன் மேன் முறுக்கு முறுக்கேய் காத்திட்டே இருந்தானாம்

அக்ஷய் : முறுக்கு முறுக்கேய் அம்மா முறுக்கு முறுக்கேய்

கவிதா : அக்ஷய் தூங்கு டைம் ஆச்சு நா தூங்கிட்டேன்

அக்ஷய் : அப்பா அம்மா தூக்கிட்டாங்க நம்ம தூங்கலாம் .........

நான் : செல்லம் அப்பாக்கு ஒரு முத்தா குடுங்க

அக்ஷய் : ஹா ஹா ஹா ஹா அப்பா நீங்க என்ன girlல  

நான் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


--------------------------------------------------------------------------------------------------------------------------


மற்ற பதிவுகள்
------------------------------

மகன் வயது 4

http://giramathanonline.blogspot.com/2015/11/35.html


மகன் வயது 3.5

http://giramathanonline.blogspot.com/2015/11/35.html

மகன் வயது 3

http://giramathanonline.blogspot.com/2015/06/3.html


மகன் வயது 2.10

http://giramathanonline.blogspot.com/2015/03/210.html


மகன் வயது 2.8

http://giramathanonline.blogspot.com/2015/01/28.html

மகன் வயது 2.3

http://giramathanonline.blogspot.com/2014/09/23.html

மகன் வயது 1.11

http://giramathanonline.blogspot.com/2014/03/111.html

மகன் வயது 1.5

http://giramathanonline.blogspot.com/2013/12/blog-post_22.html