"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், டிசம்பர் 29, 2014

2014

2014 ஆண்டு ஒரு இனிமையான வருடமாக கழிந்தது. இனிமையின், மகிழ்வின் ஊற்று  எங்கள் இரண்டரை வயது மகன் தான். கூடுதல் எடையோடு , இரண்டு தலைகளோடு இந்த வருடம் முழுக்க சுற்றினேன்.

நான் பார்க்கும் தொழிலில் இந்த வருடம் கொஞ்சம் மந்த நிலைதான்.

ஆனால் தனிப்பட்ட வாழ்வில் எனக்கு பிடித்ததெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்.

ஜுபைல் சொல்வேந்தர் மன்றத்தில் சேர்ந்து தமிழை தடை இல்லாமல் மேடையில் பேசும் திறனை வளர்த்துக்கொண்டு இருக்கிறேன்.

என் blogகிளும் facebook பக்கத்திலும் நான் பார்த்த படித்த விஷயங்களை எழுத முயன்றேன்.

புத்தகங்களை அதிகம் வாசித்தேன்

1. வென்முரசு - முதற்கனல் -ஜெயமோகன்
2.வென்முரசு - மழைபாடல் -ஜெயமோகன்
3.வென்முரசு - வண்ணக்கடல் -ஜெயமோகன்
4. வென்முரசு - நீலம் - ஜெயமோகன்
5. வென்கடல் - ஜெயமோகன்
6. யாமம் - எஸ். ரா
7. எனது இந்தியா - எஸ். ரா
8.ஆழிசூழ் உலகு - ஜோடி. குருஷ்
9. மிளிர் கல் - இரா. முருகவேல்
10. வனவாசம்  - கண்ணதாசன்
11. குருதிபுனல் - இந்திரா பார்த்தசாரதி
12. 20 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்

கடந்த வருடம் இனிதே அமையா உதவிய நண்பர்கள், உறவினர்கள், நலம்  விரும்பிகள் அனைவருக்கும் நன்றி.









ஞாயிறு, டிசம்பர் 28, 2014

விசும்பல்

குழந்தைக்கு ஐந்து மாதங்கள் முடிந்து , அவன்  அழைத்து செல்ல வந்ததுமே அவள் நிலையழிந்தாள்

துக்கம் துளிர்த்து கண்களில் முட்டி முட்டி நின்றது.

இரைச்சலும்  வெம்மையும் நிரம்பி வழிந்த பேருந்து நிலையத்தில்
அவர்கள் ஊர் செல்லும் பேருந்துக்காக காத்து நின்றனர்.

பேருந்து நுழைந்ததும் மதகு திறந்த ஏரிநீர் போல காத்திருந்த மக்கள் அதை நோக்கி ஓடி திறந்திருந்த நுழைவுகளில்லெல்லாம் புகுந்து இடம்பிடித்தனர்.

ஜன்னல் வழியாக தாவியேறி இடம்பிடித்து குழந்தையை அவன் வாங்கிக்கொண்டான்.

உடல் தளர்ந்து, உளம் சோர்ந்து அவள் வந்து அமர்ந்தாள்.

தன்னுள் புகுந்த அத்தனை மனித உடல்களையும் வளைத்து நெளித்து ஒற்றை உடலாக மாற்றியது பேருந்து.

வேற்று ஆணின் மூச்சுக்காற்று தன் கழுத்தில் உணர்ந்த பெண்கள் நெளிந்து விலக முயன்றனர்.

பெண்ணின் தோள்கள் நெஞ்சில் உரசிய ஆண்கள் சற்று வளைய முயன்று தோற்றனர்.

குழந்தை வெம்மையில் உருகி அழத்துவங்கியது. பால் புட்டியை எடுக்க கையை பையில் துழாவியபோது துணியெல்லாம் நனைந்து இருந்தது.

மெல்லிய பயம் ஊறி கை நடுங்கியது. வெறும் புட்டியை கையில் வைத்து            " பால் "  என்று நடுங்கும் குரலில் அவனிடம் சொன்னாள்.

"சனியன் " என்று சொல்லிவிட்டு புட்டியை பிடிங்கிக்கொண்டு ஜன்னல் வழியாகவே இறங்கி வெளியில் சென்றான்.

நேரம் ஏற ஏற குழந்தையின் அழுயொலி  மெலிதாகி விசும்பலாக மாறியது.

அவன் வரவே இல்லை. பேருந்து மெதுவாக நகரத்துவங்கியது. பயத்தில் அழும் குரலில் " ஏங்க பஸ்ஸ நிர்த்துங்க " அவர் பால் வாங்க போயிருக்காரு " என்றாள் .

" எவ்வளவு நேரம் இன்ன பண்ணிநிருந்திக " என்று வல்லேன்றார் நடத்துனர்.

அவள் ஜன்னல் வழியே அவனை தேடியபடியே தவித்து நடுங்கினாள், பேருந்து நகர்ந்து கொண்டே இருந்தது.

" ஏம்பா பஸ்ஸ நிறுத்துங்க பா " என்று நடுவயது பெண்மணி ஒருவர் பெருங்குரலெடுக்க, பேருந்து நின்றது.

சிறிது நேரம் கழிய " ஏம்மா இறங்குமா வேக்காடு தாங்கல  " என்று ஒரு குரல் எழுந்தது.
அவள் இறங்க எழுந்ததும் , அந்த குரலுக்கு சொந்தக்காரன் அந்த இடத்தில் அமர்ந்துகொண்டான்.

குழந்தை விசும்பிக்கொண்டே இருந்தது. அவள் அருகிலிருந்த டீ கடைக்கு சென்று குழந்தைக்கு பால் வேண்டும் என்றாள்.
பாலை நன்றாக ஆறவைத்து டீ கிளாஸ் கழுவும் தண்ணீர்ல் மேலும் குளிரவைத்து டீ மாஸ்டர் அவளிடம் நீட்டினார்.

மூன்று விரல்களை அந்த பாலில் முக்கி குழந்தையின் வாயில் வைத்தாள்.
விரலை சப்பி சப்பி பாலை குடித்தது குழந்தை. கடைசியில் மீந்த பாலை அவள் வாயில் உற்றிகொண்டாள்.

குழந்தை தூங்கியபின் அவன் நினைவு வந்து அந்த மாஸ்டரிடம் கேட்டாள்.
ஒருவன் வந்து பால் வேண்டும் என்று ஐனூறு ரூபாய்யை நீட்டினான்.  சில்லறை  இல்லை என்றதும் போய்விட்டான் என்றார்.

தலையை கைகளில் தங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

முன்பொருநாள் பள்ளிவிட்டு அவள்  வரும் வேளையில் அப்பா அவனை அறிமுகப்படுத்தினார். அவன் சைக்கிளில் ஒரு மட்டக்கோல் இருந்தது. தலை முழுக்க சிமன்ட் பரவி இருந்தது. குடிபோதை அவன் கண்களிலும் சிரிப்பிலும் வழிந்து கொண்டிருந்தது. நிக்க முடியாமல் சைக்கிளை பிடித்துக்கொண்டு இருந்தான். "பொண்ண நல்லா பாத்துக்கப்பா என்றார் அப்பா "

அன்று அழத்துவங்கியவள் இன்னும் அழுதுகொண்டு இருக்கிறாள்.

சாற்று தயங்கி அண்ணா இங்கு டாஸ்மார்க் ஏதாவது பக்கத்துல இருக்குதா என்று கலங்கிய விழிகளில் டீ மாஸ்டரை கேட்டாள்.

புதன், டிசம்பர் 24, 2014

கதைகள்


ஜுபைல் தமிழ் சொல்வேந்தர் மன்றத்தில் பேசியது


ஒரு நிகழ்வுக்கு வாரத்தைகள் மூலமாகவோ  அல்லது எழுத்தின் மூலமாகவோ ஒரு வடிவத்தை கொடுத்தால் அதை கதை என அழைக்கலாம்.

அந்த நிகழ்வு நடந்த ஒன்றாக இருக்கலாம். முழுக்க கற்பனையாக இருக்கலாம் அல்லது இரண்டும் கலந்து இருக்கலாம்.

மனிதன் கற்பனை செய்யத்துவங்கியது  முதல் கதைகள் உருவாகிவிட்டன. கதைகள் இல்லாத காலம் ஒன்று மனித வரலாற்றில் இல்லை எனலாம்.

நம் கலைகள் அனைத்தும் ஏதாவது ஒரு கதையை நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது. கலைகள் மூலம் கதைகளும் கதைகள் மூலம்   கலைகளும் ஒன்றைஒன்று வளர்த்தேடுத்துக்கொள்கிறது.

ஆனால் இன்றைய நிலையில் கதைகள் நம் அன்றாட வாழ்வுக்கு அவசியம் இல்லை என்ற பொது மனநிலை மக்களிடைய இருக்கிறது.

கதை படிப்பவன் ஒரு கனவு மனநிலையில் இருக்கிறான். அவன் வாழ்வின் எதார்த்தங்களை புரிந்துகொள்வதே இல்லை என்ற கண்ணோட்டம் இருக்கிறது.

பிள்ளைகள் படிக்கும் போது பாடபுத்தகங்களை தவிர வேறு எந்த புத்தகங்களையும் நாம் படிக்க அனுமதிப்பது இல்லை. கதை புத்தகங்கள் உனக்கு "சோறு போடுமா " என்று கேட்ப்போம்.

உண்மையில்  கதைகள் ஒரு மனிதனுக்கு தேவைதானா ?
அது எந்தவகையான மாற்றங்களை  நமக்குள் ஏற்படுத்துகிறது ?

ஏன் கதைகளை படிக்க வேண்டும் ?

நம் வாழ்வில் தினம் தினம் எத்தனயோ நிகழ்வுகள் நடக்கின்றன. அதில் பாதிக்கும் மேற்பட்ட நிகழ்விலிருந்து நாம் எந்த அனுபவங்களையும் நேரடியாக பெற்றுக்கொள்வது இல்லை. ஆனால் அது நம் அகத்தை வடிவமைக்க பயன்படுகிறது. அதே போல தான் கதைகளும்.

நம் சலிப்புற்ற அன்றாட வாழ்வில் உணர்வுகளின் உச்சத்தை அடைவதே இல்லை. மகிழ்வின் உச்சத்தை, கொண்டத்ததின் உச்சத்தை , காம குரோத மோக உச்சத்தை, பயத்தின் உச்சத்தை. ஆனால் கதைகள் எளிமையாக  நமக்குள் அவற்றை நிகழ்த்திவிடும்.

நம்மை நாமே அறிந்துகொள்ள கதைகள் உதவும். ஒரு கதையில் உள்ள கிழ்மையை நாம் ஆர்வத்தோடு படித்தால் அது நம் மனதில் உள்ள கிழ்மையை நமக்கு காட்டிகொடுத்துவிடும். அதே போலதான் மேன்மையையும்.

நான் ஒருகட்டத்தில் வரலாற்று கதைகளை ஆர்வமாக படிக்கத்துவங்கினேன்.
அப்போதுதான் என்னக்கு வரலாறு பிடிக்கும் என்பதை அறிந்துகொண்டேன்.

கதை படிப்பவன் கனவுலகத்தில் கற்பனையில் வாழலாம் ஆனால் அவர்களால் தான் இந்த உலகத்தில் அழகான விஷயங்கள் நடக்கின்றன.

இப்படி தனிப்பட்ட மனிதனுக்கும் கதைகளுக்கும் இடையுள்ள தொடர்பை சொல்லிக்கொண்டே போகலாம் .

ஒரு கதைக்கும் ஒரு சமூகத்திற்குமான தொடர்பு என்பது முக்கியமான ஒன்று.

பாட்டி வடை சுட்ட கதையை கொண்டு எங்கள் ஊரில் பாட்டிகள் கூட உழைத்து உன்ன விழைகிறார்கள் , நரி என்பது  தந்திரத்துக்கும் , ஏமாற்றுக்கும் பயன்படும் ஒரு படிமம், காக்கை அறிவுக்கும் புத்திசாலி தனத்துக்கும் ஒரு பயன்படும் படிமம்  என்று நம் சமுகத்தின் நிலையை விளக்கிவிட முடியும்.

ஒரு குலம் தன் மூதாதையரின் கதைகள் வழியாக தனக்கான விழுமியங்களையும் , கட்டுப்பாடுகளையும் வடிவமைத்துக்கொள்கிறது.

நம் நாட்டின் ஒட்டு மொத்த பண்பாட்டு மரபையும் ஒரு சிறிய கதைக்குள் அடக்கி அதை காலம் தோறும் பயணிக்கச் செய்ய முடியும்.

மனிதம்  கண்டடைந்த வாழ்வின் உயரிய தத்துவங்களை  நம் வாழ்வின் ஒரு பகுதியா மாற்ற  கதைகள் பயன்படுகின்றன. ஜென் , சூபி , கீதை கதைகள் போல.

கதைகள் இல்லாத சமூகம் அடையாளம் இல்லாத சமூகமாக மாறிவிடும்.

வாழ்வை முன்னகர்த்துவதர்க்கு கொஞ்சம் தொழில்நுட்ப பயிற்சியும் அதை சார்ந்த அறிவும், நம்மை சுற்றி நடக்கக்கூடிய வாழ்வியல் நிகழ்வுகளும் அது தரும் அனுபவங்களும் நமக்கு போதாதா ? என்று கேட்பவர்களுக்கு கதைகள்  தேவை இல்லை.

ஆனால் வாழ்வை கொண்டாட நினைப்பவர்களுக்கும், உயர்ந்த நாகரீகத்தை நோக்கி நகர நினைக்கும் சமூகத்திற்கும் கதைகள் தேவை.

ஞாயிறு, டிசம்பர் 21, 2014

பாக்கிஸ்தானி நண்பர்

கடந்த வாரம் பாக்கிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு மனதை கனக்க செய்கிறது.
இன்று ஒரு பாக்கிஸ்தான் நண்பரிடம் இதை பற்றி பேசிக்கொண்டு இருந்தேன் .

கைபர் பக்துன்கவா மாவட்டம் ஆப்கானுக்கு அருகில் பழங்குடிகள் அதிகம் வாழும்  பகுதி. காடும் மலைகளும் நிறைந்த அந்த பகுதியை அரசு அதிகம் கவனம் செலுத்தவில்லை. அந்த பகுதி மக்கள் மேல் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெரும்பாலான மக்கள் அவர்களை நம்புகின்றனர். இது அரசை நெருக்கடிக்குள்ளக்குகிறது.

இப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தின் பெரும் பகுதி அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு நடந்து வரும்  நிகழ்வுகளுக்கு பின்னால் பலநாடுகளின் தந்தி மீட்டல் இருக்கிறது. காஷ்மீரில் பதட்டம் குறைக்கும் பொருட்டு பாக்கிஸ்தான் ராணுவத்தின் கவனத்தை அந்த எல்லையில் திசை திருப்ப நம் நாடு கூட அந்த பகுதியில் வேலை செய்யலாம் என்று அவர் கூறிய போது நான் வெறுமனே மறுத்தேன்.

இங்கு சவூதியில் நான் பல பாகிஸ்த்தான் நண்பர்களுடன் பணியாற்றி வருகிறேன். அனைவரும் இந்த தலைமுறையினர் .
பொது நோக்கில் பார்க்கும் போது தன்மையாக பழகக் கூடிய நன்கு உழைக்கக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அங்கு இன்னும் software துறை வளர்ச்சி அடையவில்லை. ஆதலால் பொறியில் படித்தவர்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கும் கனடா போன்ற நாடுகளுக்கும் வேலைக்காக செல்கிறார்கள். அவர்கள் தன் நாடு வளர்ச்சி அடையவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இளையவர்களுக்கு இம்ரான்கான் நம்பிக்கை அளிக்கிறார். அந்த கட்சிக்கு இங்கிருந்து பணம் அனுப்புகிறார்கள்.

காஷ்மீர் பற்றி கேட்டால் அங்கு நிகழும் அரசியல் விளையாட்டில் அதுவும் ஒன்று என்ற புரிதல் இருக்கிறது. இந்தியாவின் மீதும் நம்மீதும் எந்த காழ்ப்பும் இல்லை. நாங்கள் இங்கு பெரும்பாலும் ஒன்றாகவே வேலை செய்கிறோம். தோல்மீது கைபோட்டு நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம்.

பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதி மட்டும் நல்ல வளமான பகுதி. படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அதனால் அந்த பகுதி மக்கள் அரசியலிலும் மற்ற துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மற்ற பகுதிகளில் வளர்ச்சி மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் மின்சார தடை என்பது தினநிகழ்வு.

அங்கு தினமும் நிகழும் வன்முறைகளும், குண்டு வெடிப்புகளும் நாம் அவர்கள் பின்பற்றும் மதம் சார்ந்து புரிந்துகொள்ளவும், விமர்சிக்கவும் முயல்கிறோம். ஆனால் அந்த நிகழ்வுகளுக்கு பின்னால் வறுமை, பசி, இயலாமை, நிலம், அரசியல், மற்ற நாடுகளின் சூழ்ச்சி , தனிப்பட்ட தீவிரவாத குழுக்களின் சுயநலம் என்று எண்ணற்ற காரணிகள் அணிவகுக்கின்றன. இதில் சாதாரன மக்கள் இலக்காகி சிதைக்கப்படுகிறார்கள்.

அந்த 142 பள்ளிக்குழந்தைகளின் கனவையும் உடலையும் சிதைத்த காரணி ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கே எதிரானது. அந்த நிகழ்வாள்  மனம் இன்னும் கணத்துக்கொண்டே தான் இருக்கிறது.

 என்னோடு பேசிக்கொண்டு இருந்த அந்த பாக்கிஸ்தானி  நண்பர் கடைசியா சொன்னார் " மற்ற நாடுகளை போல எங்கள் நாடும் வளர்ச்சி அடைந்து எங்கள் மக்களும் ஒருநாள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்வோம் அதுவே இன்றைய இளைஞ்சர்களின் கனவு".

அந்த கனவு நிறைவேற நான் வாழ்த்தினேன்.

                                                                                                                         கிராமத்தான்


வெள்ளி, டிசம்பர் 19, 2014

என்ன பெத்த ராசா

என்ன பெத்த ராசா முத்தம் தருவாயா
என்ன பெத்த ராசா முத்தம் தருவாயா

நெஞ்சு நெரஞ்சாசெ உயிர்நிரைவையா
நெஞ்சு நெரஞ்சாசெ உயிர்நிரைவையா

நீயும் வந்த நேரம்
நீயும் வந்த நேரம் வாழ்க வரமாச்சே
இந்த வாழ்க வரமாச்சே

உன் கைகள் கோர்க்கும் நேரம்
வானம் தீகாடச்சே இந்த பூமி பூக்காடசே
என்ன பெத்த ராசா முத்தம் தருவாயா
என்ன பெத்த ராசா

ஆராரோ ஆரிரராரோ ஆராரோ ஆரிரராரோ
ஆராரோ ஆரிரராரோ ஆராரோ ஆரிரராரோ



உன் நடையில் சிங்கம்மும் தோற்க்குது
உன் மொழியில் குயில்களும் பாடுது
உன் சிறகை பறவைகள் கேட்குது
உன் அழகில் பூக்களும் மயங்குது
கண்களில் சிரிப்பொலி கேட்குது

என்ன பெத்த ராசா
என்ன பெத்த ராசா
என்ன பெத்த ராசா
என்ன பெத்த ராசா
என்ன பெத்த ராசா

திங்கள், அக்டோபர் 20, 2014

சுவை


சுவை அறிதல் என்றால் உயிர் அறிதல் எனலாம்.

சுவை ஒரு உணர்வு அதை உணர்தல் மனிதனின் தனித்தன்மை.

என்று ஆதி மனிதன் உணவை தீயில் சுட கற்றுக்கொண்டானோ அன்றிலிருந்து சுவையின் மீதான அவன்  விருப்பம் துவங்கிவிட்டது. 

அடிப்படை சுவைகள் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு,காரம், உவர்ப்பு. புளிப்பு  இந்த ஆறு  சுவைகளை கொண்டு இன்று கணக்கில்லா உணவுகள் படைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

சமைப்பவர் அனைவருக்கும் சுவை கைகூடுவது இல்லை. 
தனியாத ஈடுபாடு , நுண்ணுனர்வு கொண்டு சமைப்பவர்கள் கைகளில் அது தவழ்கிறது. 

சமைத்து சமைத்தே அந்த நுண்ணுரவை அவர்கள் அடைகிறார்கள். 

என் மனைவின் வீடு வானியம்பாடியில் இருக்கிறது. ஒரு விசேஷ நாளில் பாய் ஒருவரை பிரியானி செய்ய அழைத்திருந்தோம். முன்பே அவருக்கு தேவையான பொருட்களின் பட்டியலையும் அவை எங்கு வாங்க வேண்டும் என்ற விவரத்தைவும் எழுதிருந்தார். பொருட்களை அவரிடம் அளித்த போது ஒவ்வொன்றாக எடுத்து அதன் தரத்தை பார்த்தார். ஆட்டுக்கறியில் முக்கியமான துண்டுகளை மட்டும் அவர் பொருக்கி எடுத்துக்கொண்டார். சமையலுக்கு வைத்திருந்த தண்ணிரையும் சுவைத்து பார்த்தார். அடுப்பை மூட்டி அவர் கொண்டுவந்த பாத்திரத்தில் நீர் ஊற்றி சமைக்கத்துவங்கினார். புளியமர விறகைத்தவிர அவர் வேரு எந்த விரகையும் பயன்படுத்தவே இல்லை. யாரிடமும் அவர் அதிகம் பேசவும் இல்லை. பொருட்களை ஒவ்வொன்றாக அவர் எடுக்கும் போதும் அதன் அளவை அவர் கண்கள் பார்க்கவே இல்லை. அவர் மனம் அதை பார்க்கிறது என்று எண்ணிக்கொண்டேன். அதுவரை அவர் எதையும் எடுத்து சுவைத்து பார்க்கவே இல்லை. ஒரு கட்டத்தில் பிரியானியின் மனம் எழுந்து வந்தது. எனக்கு உள்ளுக்குள் சந்தோஷம் பொங்கியது. அவர் அந்த மணத்தை வைத்து புளிப்பு குறைவாக உள்ளது, தக்காளி சேர்க்க வேண்டும் இஞ்சி பூண்டு பச்சை மனம் போகவேண்டும் என்றார். எதையும் சுவைக்கமலே எப்படி சொல்ல முடிகிறது என்றேன். அவர் நான் காலையில் சாப்பிடவில்லை. பசி இருக்கும் போது மனத்தை வைத்தே அனைத்தையும் கண்டுபிடுத்துவிடலாம். பசி அடங்கிவிட்டால் அது முடியாது என்றார். எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. அபொழுதான் எனக்கு புரிந்தது சமைப்பது ஒரு தியானம். சுவை ஒரு ஞனம் என்று. இருதிவரை அவர் அந்த பிரியானியை சுவைக்கவே இல்லை. அது போல ஒரு பிரியானியை இதுவரை நான் சுவைத்ததுமில்லை.

என் மனைவியிடம் நீ இதுவரை சாப்பிடதில் மிக சுவையான உணவு எது என்று கேட்டேன். ஒரு டீ என்றார். 

மனைவி , ஒரு காலை வேலையில் வானியம்பாடிக்கு ரயிலில் வந்துக்கொண்டு இருந்தேன். தீடீரென இருள் சூழ்ந்து மழைவரத்துவங்கியாது. மெல்லிய குளிர்காற்று என் மனதில் புகுந்து அழகான நினைவுகளோடு பேசிக்கொண்டு இருந்தது. நான் மழையை பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒருவன் டீ டீ என்று கத்திக்கொண்டு வந்தான்.அவன் என்னை கடந்துவிட்டான் ஆனால் என் மனம் அவன் பின்னால் சென்று அவனை அழத்து வந்தது. அவன் ஒரு புன்னகையொடு அந்த டீயை எனக்கு கொடுத்துவிட்டு சென்றான். இரயில் இருக்கையில் ஜன்னல் ஓரமாக ஒடுங்கி அமர்ந்து அந்த டீயை பருகத்துவங்கினேன். கத கதப்பான வெம்மையை என் கைகள் உணர்ந்தன. டீயின் மனத்தை நாசி உணர்ந்தது. மெல்லிய கசப்போடு ஏலக்கை சுவையும் டீயின் சுவையும் என் நா உணர்ந்தது. மழையின் குளிரும் அந்த டீயின் வெம்மையும் ஒன்று சேர்ந்து என்னை ஆட்கொண்ட தருனம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் என்று கூறி முடித்தார். 

சுவை என்பது ஒரு அழகியல். மனதிற்கினிய சூழல் அதை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றுகிறது. இது போன்ற தருணங்களில் உணவில்  உறையும் வெம்மையும், குளிர்ச்சியும் கூட நாம்  சுவையாக உணர்வோம்.

வீட்டில் பெண்கள் தன் அன்பை, காதலை மிக சுவையான உணவை நமக்கு பரிமாறுவதன் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது என் எண்ணம்.

எந்த உணவாக இருந்தாளும் மூன்று கவளங்கலுக்கு மேல் எனக்கு சுவை தெரியாது. டிவி பார்த்துக்கொண்டு தான் நான் உணவருந்துவேன். சுவையை பற்றி சிந்தித்த கடந்த சில நாட்களாக சமைப்பது மட்டும் கலை அல்ல, சுவைப்பதும் ஒரு கலை என்று அறிகிறேன். என்னை கொஞ்ச கொஞ்சமாக மாற்றிக்கொள்ள முயல்கிறேன்.

 அடுப்பிலெரியும் நெருப்பில் அமர்ந்திருக்கறது பேருருளி  இப்பூமி. அது சமைத்துவெளித்தள்ளும் உணவை  உண்ணும் உணவே உடலாகிறது . பசி என்பது உணவுக்காக உணவு  கொள்ளும் வேட்கை. சுவை என்பது உணவை உணவு   கண்டுகொள்ளும் உவகை. நிறைவென்பது உணவு  உணவாகும் தருணம்.வளர்வதென்பது உணவு உணவில் படர்ந்தேறும் நீட்சி. இறப்பென்பது உணவிடம் உணவு தோற்கும் கணம். உணவின் சுவையே உலகமாகும் . - வென்முரசு நாவல் ( ஜெயமோகன் - மாகாபாரதம் )

சுவைப்போம் வாழ்வை சுவையாக்குவோம்.

திங்கள், அக்டோபர் 13, 2014

வியாழன், அக்டோபர் 02, 2014

இசை

இசை என்ற தலைப்பில் ஜுபைல் தமிழ் சொல் வேந்தர் மன்றத்தில் பேசியது

ஒலி

காற்றின் அதிர்வு ஒலி. காற்று இல்லையேல் ஒலி இல்லை. மனிதனின் வாழ்வியலுக்கும் வளர்சிச்க்கும் ஒலி தேவை. அதனால் தான் நமக்கு காதுகள் இருக்கின்றது. வாழ்வின் இயக்கத்திற்கு ஒலியே தேவையில்லாத உயிரினங்கள் இருக்கின்றன பாம்புகளை போல, அவைகளுக்கு காதுகள் இல்லை.

ஒலி நமக்கோர் உணர்வு. அது நம்மை பாதுகாக்க உதவுகிறது. " படார்" என்று பெரும் சத்தம் எழும்போது மூலை நமக்குள் பயத்தை தோற்றுவித்து தப்பிக்க தயார் படுத்துகிறது.

ஒலி நமக்கு மொழி. தான் எண்ணங்களை ஒலியாக்கி அதை மொழி வடிவாக்கி மற்றவர்களிடம் அதை பகிரத்துவங்கியுடன் மனிதனின் மாபெரும் வளர்ச்சி துவங்கிவிட்டது.

ஒலி நமக்கு இசை.  எந்த ஒலி நமக்கு இசை ? அல்லது ஒலியின் எந்த வடிவம் நமக்கு இசை ? இது ஒரு சிக்கலான கேள்வி . இதற்க்கு ஒவ்வொருவரிடமும் ஒரு பதில் இருக்கும். ஆனால் என்னிடம் இருக்கும் பதில் இதுதான்.

மனம் எண்ணங்களால் ஆனது. எண்ணங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு எண்ணங்களும் ஒரு அதிர்வை எழுப்புகிறது. அதை மன அதிர்வுகள்  அல்லது மன உணர்வுகள்  என்று கூரலாம். மேலும் அந்த மன அதிர்வுகளை அல்லது உணர்வுகளை  பாசம், நேசம் , அன்பு , மகிழ்வு , துள்ளல் , துக்கம், எரிச்சல் பயம் என்று வகையிடலாம்.

ஒரு கருவியில் ஒரு குறிப்பிட்ட அதிர்வில் ஒரு ஒலியை ஏற்படுத்தி உங்கள் மனதில் குறிப்பிட்ட அதிர்வுகளை எழுப்பினால் மேற்சொன்ன அனைத்து உணர்வுகளையும் மனதில் எழுப்பிவிட முடியும்.

அதில் உன்னதமான மன உணர்வுகளை எழுப்பும் ஒலியை அதிர்வுகளை "இசை" எனலாம்.

ஒரு வயலின் கலைஞ்சன் ஒரு இசை கோர்வையை வாசித்து நம்மை துக்கத்தின் உச்சிக்கு கொண்டுசெல்லமுடியும்.

ஒரு பறையை இசைத்து நம்மை கலிவெரியின் உச்சத்துக்கு கொண்டுசெல்ல முடியும்.

இசையை நேசிக்கும், இசையை நாடும் மனதிற்கு இசைக்கருவிகூட தேவையே இல்லை. அவர்களுக்கு மழை துளிகள் கீழிருக்கும் நீர்வெளியில் விழுந்து எழுப்பும் ஒலிகூட இசைதான்.

A.R . ரகுமான் அவர்களின் ஒரு காணொளியை பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=8SzQHC0AZTc


இசை வெறும் மன உணர்வுகளை  மட்டுமே எழுப்பக்கூடியதா?

இந்த கேள்விக்கு பதில் கூரும்முன் நம் தமிழ் இசை மரபை அறிந்து கொள்வது நலம்.


நம்மிடம் மூன்று இசை மரபுகள் இருக்கின்றது.

1.சடங்கு இசை

நாம் பழங்குடி மரபில் சடங்குகளின் போது தெய்வங்களின் முன் ஆடும் ஆடலுக்கு, இசைக்கும் இசை. இது ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு சடங்குளுக்கும் தெய்வங்களுக்கும் மாறுபடும்.

2. நாட்டாரிசை

சடங்கு இசையின் மேம்பட்ட வடிவம் நாட்டாரிசை.

"நாட்டார் இசை மரபு  " நம் பண்பாட்டின் முக்கிய அடையாளம்.

இந்த இசையின்  வடிவம்  ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் மாறுபடும்.

சமுகத்தின் பல்வேறு நிகழ்வுகளிலிருந்து தனக்கான வடிவத்தை அது பெறுகின்றது. அந்த மக்களின் வாழ்விலிருந்து  அதற்க்கான பேசு பொருளை எடுத்துக்கொள்கிறது.

மீனவனின் வாழ்வு துக்கமும், தாபமும் , காத்திருப்பும் நிறைந்தது .
அவை அவன் இசையிலும் வழிந்தோடும்.

அவன் இசைக்கான  தாளம் துடுப்புப்போடும்  அசைவிளிருந்தும் , ராகம் கடல்காற்று வீசும் சந்தத்திலிருந்து கிடைக்கிறது.

பலர் கூட்டாக சேர்ந்து உழைக்கும் வேலான்மக்களின் இசை வடிவம் முற்றிலும் வேறானது . அந்த இசைக்கான தாளம், நாற்று நடுவதிளிருந்தும், போர் அடிப்பதிளிருந்தும், உரல் இடிபதிளிருந்தும் கிடைக்கிறது.

ஒரு தாலாட்டுப்பாடளுக்கு தொட்டில் சென்றுவரும் நேரம் அந்த இசைக்கான தாளக்கட்டு.

"தன்உமை " என்ற சிறு பறையை அறுவடைக்கு முன் வயலை சுற்றி அடித்துக்கொண்டே வருவர். அந்த சத்தத்தை கேட்டு அந்த வயலில் வாழும் பறவைகள், சிறு உயிர்கள் எல்லாம் வெளியேறும். மறுநாள் விவசாய்கள் வயலில் இறங்கி வருவடை செய்வர்.

உழைப்பின் களைப்பு நீங்கவும், உழைப்பை ஒரு கொண்டாட்டமாக மாற்றவும்  இசை அவர்களுக்கு உதவியது.

மலை மற்றும் , காடுசார்ந்த மக்கள்   விலங்குகளை விரட்டவும், அவைகளிலிருந்து தன்னை காத்துக்கொள்ளவும் பறை ஒலியை பயன்படுத்தினர். பின் அவர்களின் இசையில் இடைவிடாது ஒலிக்கும் காட்டின் ரீங்காரமும், பறவைகளின் காதல் மொழியும், சலசலக்கும் ஓடையின் ஒலியும் கலந்தது.

ஆனால் இன்று நாட்டாரிசை பாலாறு போல தன் ஈரம் உலர்ந்து  ஈரம் ஊரும் மணலை இழந்து வழி மறந்து நிற்கிறது.

இன்று பல தண்ணார்வ நண்பர்கள் அந்த கலைகளை தாங்கிட தோள் கொடுக்கின்றனர். ஆய்வு செய்கின்றனர்.

அவர்களை வாழ்த்துவோம்.

3. செவ்வியல் இசை

நாட்டார் இசையில் நிபுணத்துவம் பெற்ற கலைஞ்சர்கள் வெவ்வேறு பகுதி மக்களின் இசை வடிவங்களை உள்வாங்கி ஒரு பொதுவான இசை வடிவை  உருவாக்கி அதற்க்கான இலக்கனகளை வகுத்த போது ஒரு புதிய இசை மரபு உருவானது. அந்த இசை அந்த ஒட்டுமொத்த நிலப்பரப்பின் பொது இசை வடிவமாக அடையாளம் காணப்படுகின்றது. அது செவ்வியல் இசை என்று அழைக்கப்படுகிறது.

 சங்ககாலத்தில் தழைத்தோங்கிய செவ்வியல் இசை மரபு "பன்னிசை மரபு" என்று அழைக்கப்பட்டது. அதை நிகழ்த்தியவர்கள் "பாணர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.  இவர்கள் நாடோடிகளாக திரிந்து ஒரு பகுதியின் நிகழ்வுகளை இனொரு பகுதிக்கு பாடல்கள் மூலம்  தெரிவித்து  பரிசில் பெற்றனர். அவர்கள் பயன்படுத்திய இசைக்கருவி "யாழ்". இவர்கள் சமுகத்தின் உயர்குடிகளாக மதிக்கப்பட்டனர்.

கி.பி இரண்டம் நூற்றண்டுக்கு பிறகு சமனமும், பௌத்தமும் தழைத்தோங்கிய போது இந்த இசை மரபு அழியத்துவங்கியது. பானர்கள் சமுகத்தின் கீழ் நிலைக்கு தல்லப்பட்டனர்.

அதன் பின் ஏழாம் நூற்றாண்டில் பக்தி இயக்கங்கள் உருவான போது பன்னிசை புத்துயிர் பெற்றது. சைவ நாயன்மார்களும் வைனவர்களும் பக்தியை பரப்ப பன்னிசையை ஒரு ஊடகமாக பயன் படுத்தினர். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நாடு முழுவதும் கோவில்களை எழுப்பி இசை வழியே பக்தியை பரப்பினர்.

12ம் நூற்றாண்டில் இஸ்லாமிய படைஎடுப்பின் மூலம் இந்த இசை மெல்ல அழியத்துவங்கியது. இந்த காலகட்டத்தில் " சாரங்கதேவர்" என்னும் இசை வல்லுனர் தென்னக இசையை முழுமையாக தொகுத்து "சங்கீத ரத்னாகரம் " என்ற நூலை இயற்றினார்.

15ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி எழுச்சி பெற்ற போது இந்த நூலை மையமாக வைத்து மீண்டும் பன்னிசை இசை மரபு தழைக்கத்துவங்கியது. அது நாட்டார் மரபின் அனைத்துகூறுகளையும் எடுத்துக்கொண்டு சிறப்பு பெற்றது. அதன் மிக முக்கிய முன்னோடிகள் அருனாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்துத்தாண்டவர் மூவரும் ஆவர்.

அதே காலகட்டத்தில் வட இந்திய இசை மரபும் இங்கு பரவி இருந்தது. தமிழ் பன்னிசையும் வட இந்திய இசையும் கலந்து புதியதோர் இசை மரபு உருவானது. அது " கர்-நாடக இசை மரபு" என்று அழைக்கப்பட்டது.

மொகலாயர் ஆட்சியில் அனைத்து ஆவனங்களிலும் தென்னகமானது கர்-நாடகம் என்றே குறிப்பிடப்பட்டது. இங்கு ஆட்சி செய்த மொகலாய குறு நில மன்னர்கள் கர்-நாடக நவாபுகள் என்று அழைக்கப்பட்டனர். அதே வழியில் இங்கு உருவகிய இந்த இசையையும் " கர்-நாடக இசை" என்றே அழைத்தனர்.

தெலுகு நாயக்கர் ஆட்சி காலத்தில் கோவில் பனிகளிலும் பக்தி இயக்கங்களிலும் பிராமனர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் மூலமாகவே இந்த இசை வளர்த்தெடுக்கப்பட்டது. இதன் முக்கிய முன்னோடிகள் ஆந்திரத்தில் அன்னமாச்சாரியா, கர்னாடகத்தில் புரந்தர தாசர் , தமிழகத்தில் தியாகரஜயர், சியாமா சாஷ்த்திரி, முத்து சாமி தீட்சிதர் ஆவர்.

நாயக்கர்களின் அரச சபையால் கர்-நாடக இசை வளர்த்தெடுக்கப்பட்டதால் இதன் மொழி தெலுங்காகவும், சமஷ்கிருதமாகவும் இருக்கிறது. கர்-நாடக இசை இன்று ஒட்டுமொத்த தென்னகத்தின் இசை வடிவமாக திகழ்ந்தாளும் அதன் வேர் தமிழ் பன்னிசை என்பது மகிழ்வான விசயமே.

வாழ்க்கை கொண்டாட்டமாக இருந்த போது இசை நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. இன்று வாழ்க்கை ஒரு கடமையாக மாறியதன் விளைவாக இசை நமக்கு தேவையற்றதாக மாறிவருகிறது.

தமிழிசை இசை மரபு பல நூறுவருட தொன்மை கொண்டது. அது  வெரும் மனழுச்சிக்காக மட்டுமே அல்ல, அது இதயத்தின் அனைத்துக்கதவுகளையும் திறக்கும், நம்மை ஆன்மாவை உணரச்செய்து தெய்வத்தின் அருகில் கொண்டு போய் நிருத்திவிடும். ஞனத்தை அளிக்கும்.

அதை பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்க தமிழ். வாழ்க தமிழினம்.




சனி, செப்டம்பர் 20, 2014

கொடைகானல் முருகன்

நண்பர்களே

சமிபத்தில் கோடைவிடுமுறையில்  கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். KPN பேருந்தில் அங்கு சென்று இறங்கினோம் . நாங்கள் சென்றது ஜூன் மாதம் ஆதலால் எதுவும் முன்பதிவு செய்யவில்லை. அந்த பேருந்து ஓட்டுனரிடம் விசாரித்தோம். அவர் ஒரு நண்பரை தொலைபேசியில் அழைத்து எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர் பெயர் முருகன். அவர் ஒரு வண்டி வைத்திருந்தார். அங்கு வருபவர்களுக்கு கொடைக்கானலை சுற்றிக்காட்டுவது அவர் வேலை.

வெளிப்படையாக பேசினார். நல்லமனிதராக இருந்தார். குடும்பத்தோடு சென்றிருந்ததால் அதற்கு ஏற்றாற்போல் ஒரு விடுதிக்கு அழைத்து சென்றார்.

3000 ரூபாய் அவருக்கு நாங்கள் கொடுத்தோம். இரண்டு நாள் எங்களை பாதுகாப்பாக கொடைக்கானல் முழுவதும் அவர் வண்டியில் சுற்றி காண்பித்தார். பல தகவல்களை எங்களுக்கு கூரினார்.

திருப்தியாக இருந்தது. இன்னும் காடுகள், ட்ரக்கிங், கிராமங்கள் எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்வதாக கூறினார் ஆனால் எங்களுக்குத்தான் நேரம் இல்லை.

நீங்கள் கொடைகானல் போவதாக இருந்தால் இவரை அழைத்தாள் அனைத்து உதவிகளையும் செய்வார்.

அவர் தொலைபேசி எண் : 9442803254, 9159883536

மகன் வயது 2.3 - அறிதல்

மே, ஜூன் , ஜூலை ஆகிய மூன்று மாதங்கள் மகன் எங்கள் கிராமத்திலும் அவன் பாட்டி வீட்டிலும் மாறி மாறி இருந்தான்.

அங்கு சென்ற இரண்டு மூன்று நாட்களில் அவன் சுபாவம் முற்றிலும் மாறியது.

முதல் இரண்டு நாட்கள் அவன் யாரிடமும் செல்லவில்லை. என்னோடும் அவன் அம்மாவோடும் ஒட்டிக்கொண்டு இருந்தான். அவனை ஆசையாக அணைக்க வரும் கைகளை கண்டு பயந்துகொண்டே இருந்தான் . பின் ஒவ்வொரு முகமாக அவனுக்கு ஞாபகம் வந்து பழக துவங்கினான்.

இங்கு வீட்டில் அவன் எங்கள் கண்பார்வையிலேயே இருப்பான். ஆனால் அங்கு அவன் அண்ணன்களோடு மண்ணில் விளையாட துவங்கிவிட்டான். தென்னந்தோப்பில் தேங்காய் பிஞ்சுகளை பொறுக்கியும், கீற்றுகளை இழுத்தும், கோழிகளை துரத்தியும் அவன் கால்கள் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. நாய்களை முதல் முறை பார்த்தான். நாய் ஒன்று வீட்டுக்குள் வந்தபோது அதை ஏய் என்று நான் துரத்தினேன். அதை பார்த்த அவன் எப்பொழுது நாயை பார்த்தாலும் அதை ஏய் என்று துரத்திக்கொண்டே இருந்தான்.

ஆடு, மாடு, குரங்கு எல்லாவற்றையும் புத்தகத்திலும், டிவியிலும் அவனுக்கு பலமுறை  காட்டினேன். ஆனால் அவன் மனதில் பதியவே இல்லை. அங்கு அனைத்தையும் நேரில் கண்டுவிட்டான். இப்பொழுது அவைகளை எதில் பார்த்தாலும் அதன் பெயர்களையும் அதே போல கத்தியும் காட்டுகிறான்.

கடந்த ஒரு வருடமாக மனதில் தேன் துளிகளாக சேர்ந்த வார்த்தைகள் இப்பொழுது மழலை மொழியா சொட்டத்துவங்கியுள்ளது. ஒவ்வொரு வார்த்தையையும் முழுமையாக சொல்லிமுடித்தபின் பெருமிதத்தில் முன்பால் தெறிக்க சிரிக்கின்றான்.

தண்ணீரின் மீது அவனுக்கு இருந்த பயத்தை போக்க  தோப்பில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் அவனை தூக்கி ஒரு முக்கு முக்கினேன். அலறிபயந்தவன் கொஞ்ச கொஞ்சமாக பயம் தெளிந்து நீரோடு விளையாட துவங்கினான். ஒவ்வொரு முறையும் அவன் குளிர்ந்த நீரில் இறங்கும்போதும் அவன் முகம் சிலிர்த்து மலரும். அவன் தூவி எறியும் தண்ணீர் குமிழ்கள் அவன் தலைமீதே உடைந்து தெறிக்கும். களைப்பில்லாமல் தண்ணீரில் தண்ணீரோடு விளையாடிக்கொண்டே இருந்தான். இப்போது அவன் சிறந்த நண்பர்களில் தண்ணீரும் ஒன்று.

அவன் பாட்டி வீட்டில் இரவில் ஒருநாள் மழை பெய்தது. முதல் துளி அவன்மீது விழுந்ததும் அப்பா தண்ணி என்று என்னிடம் காட்டினான். அது மழை என்றேன். அவன் " மாழ் " என்றான். இங்கு சவுதியில் ஒருநாள் மழையை ஜன்னல் வழியே அவனுக்கு காட்டினேன். ஆனால் அவனால் அதை உணர்ந்துகொள்ள முடியவில்லை. அங்கு முதல்முறையாய் அவன்மீது மழைத்துளிகள் விழத்துவங்கியதும் அது எங்கிருந்து வருகிறது என்று வானத்தை பார்த்தான். மழை வேகமாக வரவே மகிழ்வில்  குதிக்கத்துவங்கினான்.  மழையை முதன்  முதலில் உணர்ந்து பரவசத்தில் திளைக்கும் உயிரை முதன் முதலில் நான் கண்டேன். அவனை தடுக்கவே இல்லை.

முற்றிலும் தூய்மையான தொல்மனிதனாகவே ஒரு குழந்தை பிறக்கிறது. அது இயற்கையை முழுதுணர்ந்து அதில் திளைப்பதற்கு முன்பே இன்று நாம் உருவாக்கி இருக்கும் புற உலகு தன் கோடி கைகளால் இழுத்து வந்து நிகழ் காலத்தில் அதை நிறுத்திவிடுகிறது.

எங்கள் போனில் Tomy பூனையை அவன் சுட்டு விரலால் குத்திக்கொண்டே இருப்பான். அது நோ  நோ என்று அலறும்போது அதைகண்டு சிரிப்பான். அதை போலவே அவன் குழந்தைகளிடம் விளையாடும்போது கண்ணை குத்த துவங்கிவிட்டான். பின் அந்த பழக்கத்தை கஷ்டப்பட்டு மாற்றினோம்.
இப்போதெல்லாம் அவன் சந்தோஷப்படும் விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறோம். அதுவே அவனை வழி நடத்துகிறது.

ஒருவயதாக இருக்கும்போது அவனிடம் எந்தப்பொருளை கொடுத்தாலும் அதை வாயில் நுழைத்து எச்சிலில் நனைத்து சுவைத்துப்பார்த்து அறிந்துகொள்ள முயல்வான். ஆனால் இப்பொழுது பொருட்களை பிரிக்கத்துவங்கிவிடுகிறான். விதவிதமான சாக்லெட், பிஸ்கெட்களை அவனுக்கு வாங்கி கொடுத்தால் அதை சுவைப்பதைவிட அனைத்தையும் ஒரே நேரத்தில் பிரித்து அதில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு வைத்துவிடுவான். பொம்மைகளுக்கும் அதே நிலைதான்.

இப்பொழுது அவன் மகிழ்வு "சுகந்திரம்" மட்டுமே . அவன் துன்பம் அதை தடுக்கும் என் சொல். அனைத்தையும் அறிந்துக்கொள்வது மட்டுமே அவன் நோக்கமாக இருக்கிறது. அவனுக்குள் துளிர்விடும் அறிவு பார்ப்பதையெல்லாம் உண்டு தன்னை வளர்தெடுக்கிறது. அவனுக்கு நான் கற்றுக்கொண்ட வித்தைகளும், அனுபவங்களும் எதுவும் தேவையே இல்லை. அவன் நடந்து பழக என் சுட்டு விரலை மட்டுமே எதிர்பார்க்கிறான்.

அந்த மூன்று மாதங்கள் அவன் அத்தைமார்கள், மாமாமார்கள் , பெரியப்பாக்கள், பெரியம்மாக்கள், சித்தப்பாக்கள், சித்திகள், அண்ணன்கள், அக்காக்கள் , பாட்டிமார், தாத்தா இருவர் என அவனை கண்டுமகிழ்ந்து, தொட்டு அரவணைத்த தருணங்கள் ஒவ்வொரு நாளும் அவனுக்கு கிடைகாத என்ற ஏக்கம் எனக்குள் எழுகிறது.

ஒரு செடி வளர்வதற்கு கூட வளமான மண்ணும், நல்ல காற்றோட்டமும், நீரும், சூழலும் வேண்டும் என்ற எளிமையான அறிவு எனக்கு இருக்கிறது. ஆனால் ஒரு குழந்தை வளர்வதற்கு இயற்கையான சூழலும், உளமான உறவுகளும் அவனுடன் வேண்டும் என்று புரியாமல் போனது.

இன்னும் அவன் மல்டி காம்ப்ளெக்ஸ் மால்களில் ஒய்யாரமாக நடப்பதையும், வீட்டுக்குள் அமர்ந்து  TAB, I போன்களை லாவகமாக கையாள்வதையும் பார்த்து வியந்து மகிழ்வது என் தவிர்க்க முடியாத அறியாமை, கையறுநிலை.

Skin dices


நண்பர்களே,

கடந்த ஒரு வருடங்களாக எனக்கு தலையின் முன் பகுதியில் , பொடுகு போல வெள்ளை செதில்கள் உருவாகி அரித்துக்கொண்டே இருந்தது. பல மருத்துவர்களிடம் வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. பெரும்பாலும் அவர்கள் தலையில் தடவிக்கொள்ள கிரீமை தந்தார்கள். அதை தடவிய சில நாட்கள் வராமல் இருக்கும், ஆனால் சில நாட்களில் மறுபடியும் வந்துவிடும். அவதியாக இருந்தது.

பின் CMC Vellore  மருத்துவமனையின்  கிளை   நிறுவனமான கரிகிரி மருத்துவமனையின் மருத்துவர்கள் வாரம் இரு முறை குடியாத்தம் நகருக்கு வருவார்கள். அவர்களிடம் நான் சிகிழ்ச்சை எடுத்துக்கொண்டேன். மருத்துவர்கள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் அங்கு வருகிறார்கள் . காலை ஐந்து மணிமுதல் வரிசை எண் அளிக்கப்படுகிறது . 9 மணிக்கு சிகிழ்ச்சை துவங்குகிறது. அவர்கள் கொடுக்கும் மருந்து பிரத்தியோகமானது. வெளியில் கிடைக்காது.

அவர்கள் எனக்கு ஒரு மாதத்துக்கு மாத்திரைகளையும் களிம்பையும் கொடுத்தார்கள். எனக்கு 20 நாட்களில் சரியாகிவிட்டது. அதன் பின் வரவேயில்லை.

உங்களுக்கும் ஏதாவது தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ( All Skin dices) இருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

http://www.karigiri.org/page/dermatology/    

திங்கள், ஆகஸ்ட் 25, 2014

இரவு

வெளிச்சமின்மை  இருள். இருள் என்றவுடன் கருமை நினைவில் எழுகிறது. அது ரகசியம் நிறைந்ததாக மேலும் விறிகிறது. 

வெளிச்சத்தை அறியாத எத்தனையோ உயிர்கள் இந்த உலகில் இருக்கும் ஆனால் இருள் அறியாத உயிர்கள் இல்லை. இருளை உள்ளிடாக கொண்டு இரவு நிகழ்கிறது. பூவினுள் வாசம் போல.

இரவு எல்லா ஒளியையும் சூழ்ந்து இருக்கிறது. ஒளி அனையும் போது அந்த இரவு மட்டுமே எஞ்சி நிற்கிறது.

இரவு எனக்கு ஒரு போதை போல. நான் மகிழ்வாக இருக்கும் போது அது என்னை மேலும் மகிழ்விக்கிறது. துயரத்தில் உழலும் போது மேலும் துயரத்தில் ஆழ்துகிறது. 

நிலவோடு கூட நான் பேசி இருக்கிறேன் ஆனால் இரவோடு நான் பேசியதே இல்லை. ஏனெனில் என் அனைத்து ரகசியங்களையும் இரவு அறியும் . 

இரவு ஒரு பரந்து விரிந்த மௌனம். மௌனத்தை நாம் எதிர்கொள்ளும்போது மனதில் கட்டற்ற எண்ணங்கள் எழுகிறது.

எங்கள் தென்னந்தோப்பில் ஒரு கல் திட்டு இருக்கும். அதன் அருகில் இருள் வழிந்தொடுவது போல கால்வாய் நீர் ஓடிக்கொண்டு இருக்கும். இரவில் அங்கு சென்று அமர்ந்திருக்க எனக்கு பிடிக்கும். ஓடும் கால்வாய் நீரில் இரண்டு கால்களையும் நனைத்துக்கொண்டு பெரும் இருள் வெள்ளத்தில் மூழ்கி மறையும் ஒரு சிறு கூழாங்கல்லை போல இரவில் தனிமையில் அமைந்திருப்பேன். என்னை சுற்றி பூச்சிகள் , தவளைகள் ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். அவை இரவோடு பேச தெரிந்தவை இரவில் மட்டும் பேச தெரிந்தவை. இரவில் அங்கு அமர்ந்துகொண்டாள் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து ஒலிக்கும் பழைய திரைப்பட பாடல்கள் என்னை மெய் மறக்க செய்யும். தூரத்தில் காய்ந்த தென்னை ஓலை மரத்தை உரசிக்கொண்டே மண்ணில் விழும் சத்தம் அச்சம் கொள்ள செய்யும். எங்கேயோ விழும் உலர்ந்த தேங்காய் அல்லது பழுத்த பனம் பழத்தின் சத்தம் மறுநாள் அதை தேடி எடுக்க தூண்டும். 

இளமையில் நான் வேலை தேடி அலைந்த துக்கம்மிகு நாட்களில் யார் கண்ணிளும் படாமல் யார் சொல்லும் படாமல் ஓடி ஒளிந்து கொள்ள ஒடுங்கி மறைந்து கொள்ள  இரவை எதிர்பார்த்து இருப்பேன். ஏனெனில் இரவு என்னை எந்த கேள்வியும் கேட்பதே இல்லை.

 இரவு ஒரு மாயை. வெளிச்சம் ஒரு காட்சியை ஒரு அர்த்தத்திலும், இரவு அதே காட்சியை வேறு அர்த்தத்திலும் காட்டும். எங்கள் வீட்டு அருகில் இருக்கும் சுடுகாட்டு பனைமரத்தை இரவில் இன்றும் நான் ஏரெடுத்து பார்த்ததே இல்லை.

என் இளம் வயதில் ஒரு நன்பன் இருந்தான். அவன் கிராமத்தின் பெயர் மயில் சோலை. அந்த ஊருக்கு செல்ல சரியான பாதை இல்லை. ஒரு மண் பாதை வழியாக அந்த ஊர் முக்கிய சாலையொடு இனைக்கப்பட்டு இருந்தது. அந்த இரு சாலைகளும் இனையும் இடம் மயில்சோலை கூட் ரோடு என்று அழைக்கப்பட்டது. அது அந்த ஊருக்கான பேருந்து நிருத்தம். 

அங்கு ஒரே ஒரு பெட்டிக்கடையும் அதன் பின் பகுதியில் ஒரு குடிசை வீடும் இருந்தது. பெட்டிக்கடையில் எப்பொதும் ஒரு கிழவர் அமர்ந்திருப்பார். அந்த குடிசையின்  வெளிபகுதியில் எப்பொழுதும் ஒரு கிழவி எதாவது ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்.

காலையில் வேலைக்கு செல்பவர்கள், சந்தைக்கு செல்பவர்கள், வெளியூருக்கு செல்பவர்கள் அந்த கடையில் டீ அருந்திவிட்டு கிழவரிடம் எதாவது பேசிவிட்டு செல்வார்கள். அந்த கிழவருக்கு ஊர்கதைகள் அத்தனையும் அத்துபடி. மாலை நேரங்களில் நானும் நண்பனும் கடையின் முன்னிருக்கும் கல் திட்டில் அமர்ந்து டீ அருந்திவிட்டு போண்டா சுவைத்தபடி அந்த கிழவரிடம் வம்பலப்போம். இரவு கவியும் நேரத்தில் மண் சாலை வழியே ஊருக்கு நடப்போம்.

அந்த சாலை ஒரு ஏரிக்கரை வழியே செல்லும். இரவில் அந்த ஏரிக்கரையில் நடந்து செல்லும் போது இயற்கையின் இனிமையான தருனங்களை அனுபவிக்க முடியும். ஏரியில் நீரும் இரவும் நிரம்பி இருக்கும் . வானில் மிதக்கும் வென்னிலா நீரில் நீந்தும் வென்னிலாவோடு பேசிக்கொண்டு இருக்கும், நீரின் குளிர் ஸ்பரிசத்தில் போதையுற்று  அலையும் காற்று. மினுக்கு பூச்சிகள் பூத்த செடிகள். பனைமரத்தின் காய்ந்த ஓலை எழுப்பும் சர சர சத்தம். எங்களை கடந்து போகும் சைக்கிள்களின் மணி சத்தம். கண்களை மூடி அந்த தருனத்தை இப்போது நினைத்தாலும் மகிழ்வில் திளைக்கிறது மனம். ஏரிக்கரை பாதை முடிவில் ஒரு கண்மாய் துவங்கும். கண்மாய் வழியாக ஏரி நீர், சுற்றி உள்ள வயல்களுக்கு பாயும். ஒரு சிறிய சிமன்ட்டு பாலம் வழியாக அந்த கண்மாயை கடக்க வேண்டும். அந்த பாலத்தின் அருகில் ஒரு tube லைட் கம்பம் இருந்தது. அந்த லைட் எரிவது இரவை ரசிக்கும் பூச்சிகளுக்கு பிடிக்காது. அதை அணைத்துவிட அதன் மீது மோதிக்கொண்டே இருக்கும்.

அந்த இரவு நேரத்தில் பாலத்தில் அமர்ந்துகொண்டு நண்பன் அவன் காதல் கதைகளை சொல்ல துவங்கிவிடுவான். அதை நான் கவனிக்கவேண்டும் என அவன் எதிர்பார்ப்பதில்லை. இரவு அந்த நினைவுகளை அவனுக்குள் எழுபிக்கொண்டே இருக்கும். அவன் அதை வார்த்தைகளாக்கி இரவிடமே சொல்லிக்கொண்டு இருப்பான்.

"வண்ணங்களை எடுத்து அவள் கோலம் போடுவாள் கோலத்தை விட வண்ணங்கள் படிந்த அவள் கைகள் அழகாக இருக்கும்"

"அவளுக்குள் ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு  தேவதை வாழ்கிறது . வெக்கத்துக்கு ஒரு தேவதை, துக்கத்துக்கு ஒரு தேவதை, புன்னகைக்கு ஒரு தேவதை , சிணுங்களுக்கு ஒரு தேவதை என்று இதுவரை ஆயிரம் தேவதைகளை அவள் முகத்தில் பார்த்துவிட்டேன்"

"அவள் கால் விரல்களில் நட்டை உடைத்து அதை டேப்பில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்"

இப்படி அவன் பேசுவதை கேட்க கேட்க எனக்கு சிரிப்பு வரும் . இரவு ஒரு மனிதனை யதார்த்தமா சிந்திக்கவே விடாதா என்று தோன்றும்.

நான் வேலைக்கு சென்றவுடன் பல வருடங்கள் அவனிடம் தொடர்பில்லாமல் போனது.

வெகுநாள் கழித்து அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன். அம்மா பக்கத்துவீட்டு பெண்மணியிடம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும் அவர் முகம் மாறிவிட்டது. நான் வீட்டுக்கு வந்ததுமே அவர்களுக்கு தெரிந்துவிட்டது நடந்தது எதுவும்  எனக்கு தெரியாது என்று. வெளியிலிருந்து வந்த அப்பா எதுவும் பேசாமல் வீட்டுக்குள் சென்றுவிட்டார். எனக்கு லேசாக புரிந்துவிட்டது.

சங்கடத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் மெதுவாக திரும்பி நடக்கத்துவங்கினேன்.  பெட்டிக்கடைக்கு வந்து அந்த கிழவரிடம் கேட்டபோது நண்பன் பெண்ணை கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்றும் அதனால் ஊரில் பெரிய சண்டை என்றும் கூரினார்.

அந்த நிகழ்வை அவரை தவிர வேறு யாரும் அவ்வளவு விவரமாக சொல்ல முடியாது. அப்பொழுது அவர் எனக்கு ஒரு இரவின் வடிவமாக தோன்றினார். 

அதன் பின் மறுபடியும் அவனை பார்க்கவே இல்லை.

சமிபத்தில் எஸ்.ரா வின் " யாமம்"  நாவலை படித்தேன். இதில் யாமம் என்ற வாசனை திரவியம் மையா சரடு. மூன்று வெவ்வேறு கதைகள். பழைய சென்னை பட்டினம். பலதரப்பட்ட மனிதர்கள் நிகழ்வுகள். இரவு அழகான படிமமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நாவலை படித்த பின்னால் இரவை பற்றி இரண்டு நாட்கள் சிந்தித்துக்கொண்டே இருதேன். என் வாழ்வில் இரவில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் மனதில் எழுந்தவண்ணம் இருந்தது. அதில் எத்தனையோ துக்கங்கள் எத்தனையோ மகிழ்வுகள் . அவை அனைத்தையும் எழுத்துகளாக மாற்றிவிட வேண்டும் என நினைக்கும் போது ஒரு கோர்வையாக திரலவே இல்லை. 

நம் வாழ்வில் எத்தனையோ மறக்க முடியாத  நிகழ்வுகள்  பகலில் நடந்தாலும், இரவு மட்டுமே அந்த நிகழ்வை மனதில் மீண்டும் மீண்டும் நிகழ்திகாட்டுகிறது.
அது மகிழ்வான தருணமாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும். 

வியாழன், ஆகஸ்ட் 14, 2014

தனுஷ்கோடி

தனுஷ்கோடி ஒரு அழிந்த சிறு நகரம். அந்த அழிவைபற்றி படித்த போது அந்த இடத்தை பார்க்க வேண்டுமென்று மனதில் ஏதோ ஒரு மௌனமான ஆவல் எழுந்தது. மேப்பில் பார்க்கும் போது இலங்கையையும் பாரதத்தையும் இனைத்த நிலப்பரப்பில் கடல் நீர் தயங்கி தயங்கி உட்புகுந்து பிரித்திருந்தது.



அங்கு போக இராமேஷ்வரத்தில் விசாரித்த போது ஒரு ஜீப் 2000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று விடுதி காப்பாளன் சொன்னான். வேறு வழி இல்லை என்றான்.சற்று தூரம் சாலையில் நடந்து போனபோது  தனுஷ்கோடி என்ற பெயர் பலகையொடு பேருந்து ஒன்று வந்தது. கொஞ்சம் குழப்பமாகவே அதில் ஏறி அமர்ந்து கொண்டேன்.
என் அருகில் அமர்ந்தவர் உள்ளூர்காரர். அவரிடம் விசாரித்ததில் பேருந்து ஒரு எல்லை வரை செல்லும். அதன் பின் அங்கே வாடகை வண்டிகள் இருக்கும் அதில் போனால் தனுஷ்கோடியின் அழிந்த பகுதிகளை பார்க்கலாம் என்றார். அவர் பேசிய அந்த வட்டார தமிழ் எனக்கு பாதிக்கும் மேல் புரியவில்லை. புரிந்தது போல் அவர் முன் நடிக்க நடிக்க எனக்கு சிரிப்பு வந்தது.எப்படி பேசினாலும் அழகாய் இருப்பது தமிழ் மட்டுமே. 

இராமேஷ்வரம் பகுதியில் முக்கிய தொழில் மீன் பிடித்தல். கோவிலில்லிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி வந்தாலே மீனவர்களின் வீடுகள், மீன் பிடி சாதன கடைகள் என வர துவங்கிவிடுகிறது. இராமேஷ்வரத்திலிருந்து 20 கீ.மீ தூரத்தில் தனுஷ்கோடி உள்ளது. வழியில் சிறு சிறு மீனவகிராமங்கள் வந்துகொண்டே இருந்தன. பனவோலை குடிசைகள் அதை சுற்றி பனமட்டை சேர்த்து அடுக்கப்பட்ட சுற்றுச்சுவர், அந்த வீடுகளை சுற்றி சிறு சிறு மணல் மேடுகள் என புதிய நிலப்பரப்பாக இருந்தது. சில இடங்களில் சவுக்கு மர காடுகள் அடர்ந்து இருந்தது. தனுஷ்கோடி ஒரு பெரிய மீனவ கிராமமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் பேருந்து ஒரு கடற்க்கரை ஒட்டிய பகுதியில் நின்றது. அந்த பகுதிக்கு மூன்றாம் சத்திரம் என்று பெயர். அதுவரை மட்டுமே பேருந்து செல்லும். அங்கு சிறிய சிறிய ஓலை குடிசைகள் மற்றும் கடைகள் இருந்தன. 








அதை ஒட்டி கடற்கரை. கடற்கரையில் மணல்வெளியில் கால்களை நீட்டி அமர்ந்துகொண்டேன். சற்று கண்களை மூடிய போது காற்றின் ஓசை, அலைகளின் ஓசை, பறவைகளின் ஓசை எல்லாம் கலந்து ஓசைகள் மட்டுமேயான ஒரு உலகை கேட்க முடிந்தது.

அங்கிருந்து தனுஷ்கோடியின் அழிந்த பகுதிகளுக்கு அழைத்து செல்ல வேன்கள் உள்ளன. வேன் ஒன்றுக்கு 2000 ரூபாய்.அது ஒரு குடும்பமாகவோ அல்லது குழுவாகவோ அல்லது தனி தனி நபர்களாகவோ சேர்ந்து அதை வாடகைக்கு அமர்திக்கொள்ளலாம்.அதை தவிர ஜீப்புகள் வாடகைக்கு கிடைக்கிறது. அங்கு வந்த சில பயனிகளோடு சேர்ந்துக்கொண்டு ஒரு வேனில் அழிந்த பகுதிக்கு பயனித்தேன். வண்டியை ஓட்டியவர் ஒரு மீனவரை போல இருந்தார். வேனையும் படகு போலவே ஓட்டினார். மணல் வழி தடத்திளும் , தேங்கிய நீர் வழியாகவும் வண்டி அசைந்து அசைந்து நகர்ந்து கொண்டே இருந்தது. 8 கீ. மீ ஒரு மணி நேர பயணத்துக்கு பின் அந்த இடம் வந்தது. 




















ஒரு காலத்தில் தனுஷ்கோடி இருந்த இடம்.அமைதியான வங்கக்கடலை ஆக்ரோஷமான அரபிக்கடல் தழுவி தழுவி களித்தது. கடல் முன் ஒரு சாமான்னிய மனிதன் என்ன செய்ய முடியும். நான் அதை வெருமனே பார்த்துக்கொண்டு இருந்தேன். கடலோடு பேசவும் பழகவும் அதன் மொழி தெரிந்திருக்க வேண்டும். நமக்கு புரிந்த அதன் ஒரே சொல் அலை மட்டுமே.
சில வடவர் கடல் நீரை எடுத்து தீர்த்தம் போல தலையில் தெளித்துக்கொண்டனர். சிறுவர்கள் புகைப்படம் எடுத்துகொண்டனர். சிலர் அந்த கடல் சூழ் மணல் வெளியில் என்ன செய்வது என்று தெரியாமல் வெருமனே நின்று கொண்டு இருந்தனர். மழையில் நனைந்தால் மழை நீர் நம்மீது வழிந்தோடுவது போல வெயில் என் மீது வழிந்தோடியது. தூரத்தில் மனபிரழ்வான ஒரு பெண்மனி கடலை நோக்கி எதோ பேசிக்கொண்டு இருந்தார். அங்கிருந்து அருகில் இருந்த தனுஷ்கோடியின் இடிபாடுகளை கான சென்றோம். அந்த பகுதி முழுவதும் முட்புதர்கள் மண்டிக்கிடகிறது. சிதிலமடைந்த கட்டிடங்கள் ஏன் நிற்கிறோம் என்று அறியாமல் பரிதாபமாக நிற்கின்றன. அழிவுக்கு முன் இந்த இடம் ஒரு முக்கிய நகரமாக முக்கிய போக்குவரத்து துரைமுகமாக விளங்கியது. 1964 டிசம்பர் 23 ஆம் தேதி ஏற்பட்ட புயலில் இந்த பகுதியில் இருந்த 2000 க்கும் மேற்பட்டோர் இறந்துபோயினர். அதன்பின் இந்த இடம் கைவிடப்பட்டது. 200 மீனவக்குடும்பங்கள் இப்போது இந்த பகுதியில் இருக்கிறது. அவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. சுற்றுலா பயனிகள் அதிகம் வந்தாளும் அவர்களுக்கு அந்த இடத்தை பற்றி அறிந்துகொள்ள ஒரு அருங்காட்சியகமோ அல்லது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒரு நினைவிடமோ இல்லை. அந்த வெருமையான நிலபரப்பு மனதிலும் வெருமையயும் ஆழ்ந்த மௌனத்தையும் ஏற்படுத்தியது.






















வியாழன், ஆகஸ்ட் 07, 2014

ராமேஸ்வரம்

இந்தியாவின் முக்கியாமான இடங்களை பற்றியும், ஊர்கள் நகரங்களை பற்றியும் இன்று புகைப்படங்களாக, கானொளியாக பார்க்கவும், கட்டுரைகளாக படிக்கவும்  இணையத்தில் கிடைக்கிறது. அதை பார்க்கும்போதும் படிக்கும்போதும் அந்த இடத்தை ஒரு காட்சி பொருளாகவே உள்வாங்க முடிகிறது. அவை அந்த இடத்தை பார்க்க தூண்டும் ஒரு கருவி மட்டுமே. நேரில் பார்க்காதவரை  எந்த ஒரு இடத்தின் ஆன்மாவையும் உணர முடியாது. இது மனிதர்களுக்கும் பொருந்தும்.




ஒரு தூண்டலில் ராமேஸ்வரம் பார்க்கும் ஆர்வம் எழுந்தது. இரவு பயணமாக ராமேஸ்வரம் அடைந்து கோயிலின்முன் ஒரு அரை எடுத்து தங்கினேன். தூங்கி விழித்த போது காலை 10 மணியாகியிருந்தது .

ராமேஸ்வரம் நடுத்தரமான பழமையான நகரம். பழமையின் மையமாக கோவில் உள்ளது. அதை சுற்றி எண்ணற்ற மடங்கள், சத்திரங்கள் தங்கும் விடுதிகள் நிறைந்துள்ளது.

 விடுதி காப்பாளரிடம் கோவிலை பற்றி கேட்டேன். இந்த கோவிலை சுற்றி 22 தீர்த்தங்கள் உள்ளது. அதில் குளித்துவிட்டு மூலக்கடவுளை  காணவேண்டும் என்றார். அதில் முதல் தீர்த்தம் கடல்.



கடலில் குளிப்பதை நினைக்கும் தருணத்தில் அனைத்து எண்ணங்களும் விலகி ஒரு உவகை எழும். அந்த உவகையோடு கடலை நோக்கி நடந்தேன்.
சற்றே ஒதுங்கி இருந்த கடல் நீரில் பெரும் பக்த்த மக்கள் மூழ்கி குளித்துக்கொண்டு இருந்தனர்.

இந்த கோவிலுக்கு வருபவர்கள் வடவர்களே அதிகம். இறந்தவர்களுக்கு பூசைகள் நடந்துகொண்டு இருந்தது. சிலர் இறந்தவர்களின் அஸ்த்தியை நீரில் கரைத்தனர். சிலர் பழைய துணிகளை தண்ணீரில் இடுவதுமாக அதை சிலர் எடுத்துக்கொள்வதுமாக நடந்துகொண்டிருந்தது.

மெதுவாக தண்ணீரில் இறங்கியதும் அதன் குளுமை மெதுமெதுவாக உடல் முழுவதும் பரவியது. சின்ன சிலிர்ப்போடு நீரில் முழ்கி எழுந்து கரை ஏறினேன்.





22 தீர்த்தத்தில் ஒன்று முடிந்தது. மீதி 21 தீர்த்தம் கோவிலை சுற்றி உள்ள சிறிய கிணறுகள், ஒரு பெரிய குளம், கங்கை நீரின் புனித தன்மைக்கு இணையான ஒரு நீருற்று. அதில் குளிக்க அரசு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. கோவிலின் பிரகாரத்தை  சுற்றி சிறிய வட்டவட்டமான  கிணறுகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிணற்றுக்கும் ஒரு அரசு நியமித்த ஆள் நின்று சிறு வாளியில் நீரெடுத்து பக்த்தர்களின் தலையில் ஊற்ற வேண்டும் என்பது மரபாக இருக்கலாம். ஆனால் அங்கு நிலைமை வேறு.

அங்கே வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை கும்பல் ஒன்று உள்ளது. அந்த 21 தீர்த்த கிணறுகளை அரசிடமிருந்து குத்தகை எடுத்தவர்களாக இருக்கலாம்.
அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது கோவில். கோவிலை காணவரும் குடும்பம் அல்லது குழுக்கள் அவர்களில் ஒருவரை நியமித்துக்கொள்ள வேண்டும். அவர் 21 தீர்த்தங்களில் நீர் இரைத்து உங்கள் ஒவ்வொரு தலையிளிலும் ஊற்றுவார். சாமி தரிசனம் அருகில் கிடைக்கும். சிறப்பு பூசைகள் ஏற்பாடு செய்து தருவார். கோவில் பனி முழுவதும் உங்கள் உடன் இருந்து வழி அனுப்பி வைப்பது அவர் பொறுப்பு. வடநாட்டு குழுக்கள் இவர்களின் முக்கிய இலக்கு.

இது தெரியாமல் நான் ஒவ்வொரு கிணற்று அருகில் போய் கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தேன். வெள்ளை வேட்டிகள் அவர்கள் அழைத்துவந்த ஆட்களுக்கு ஒவ்வொரு குடமாக ஊற்றிவிட்டு கடனே என்று நம்மீதும் கொஞ்சம் ஊற்றிவிட்டு செல்கிறார்கள். ஒவ்வொரு கிணற்றின் முன் நிற்கும் போதும் தர்ம சங்கடமாக இருந்தது. வெகு நேரம் நிற்க வேண்டி இருந்தது. 21 தீர்த்த குளியலை முடித்து மறுபடியும் அறைக்கு வந்து உடைகளை மாற்றிக்கொண்டு சன்னிதானத்துக்கு சென்றேன். இந்த முறை 50 ரூபாய் தரிசன சீட்டு வாங்கி சென்றேன். ஆனால் அங்கும் வெள்ளை வேட்டி ஆசாமிகளுக்கு முதலிடம்.

லிங்க வடிவான சிவனை வழிபட்டு விட்டு, அருகில் இருந்த அம்மனை தரிசித்துவிட்டு வெளியில் வந்தேன்.

பிரகாரம் முழுவதும் அழகிய தூன்கள் அதில் சிற்ப்பங்கள். நாம் தனியாக இதுபோல சிற்ப்பங்களை வெகு நேரம் ரசித்துக்கொண்டு இருந்தாள் நம்மை நான்கு பேர் பார்க்க துவங்கி விடுகிறார்கள். அதனால் பட்டும் பாடாமல் பார்த்துக்கொண்டே நகர்ந்தேன்.



இந்த கோவில் ராம காவியத்தில் முக்கிய இடமாக வருகிறது. அந்த காவியமே பாரதத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மக்களை இந்த கோவிலை நோக்கி அனுப்புகிறது.

இந்தியாவின் மிக சிறந்த சுற்றுலா தளங்களைவிட கோவில்களே நாடுமுழுக்க மக்களை ஈர்க்கிறது. குமரி முனையிலிருந்து இமயத்திற்கும் அங்கிருந்து குமரிக்கும் பயணம் செய்ய துண்டுகிறது.




கோவிலை விட்டு வெளியில் வந்து மீண்டும் கடல் பக்கம் சிறிது தூரம் நடந்து அங்கு நின்றிருந்த சுற்றுலா படகில் ஏறிக்கொண்டேன்.



படகு கடலினுள் செல்ல செல்ல கோவிலும்  அதன் சுற்றுப்பகுதியும் ஒரு ஓவியம் போல கண்முன் விரிந்தது. அது கடலில் அசைந்து மிதக்கும் நிலவெளி என ஆனது.

நான் மீண்டும் கரையேறி நடக்கும் போது கண்களில் நீல நிறம்  தலும்பிக்கொண்டே இருந்தது. நா முழுவதும் உப்பு படர்ந்தது  வறண்டு போனது.



 புகைப்படங்கள் 











( தொடரும்) 






செவ்வாய், ஜூலை 29, 2014

எஸ். ரா வுடன் இலக்கிய நிகழ்வு

ஜூன் 14 மற்றும் 15 தேதியில் திண்டுக்கல்லில் நடைபெற்ற எஸ் ரா வின் இலக்கிய முகாமில் மகிழ்வோடு கலந்துக்கொண்டேன்.

காலை ஆறுமணிக்கு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு டீ அருந்திவிட்டு நத்தம் செல்லும் பேருந்தில் அமர்ந்தேன். நாற்பதை கடந்த ஒருவர் பதனிகடை க்கு இந்த பேருந்து செல்லுமா என்று கேட்டார்.

இலக்கிய முகாமுக்கா என்று வினவி ஏறுங்கள் என்று சொல்லிவிட்டு சற்று தள்ளி அமர்ந்தேன். மேற்கொண்ட கேள்வியில் அவர் முகம் மலர்ந்து பேச துவங்கினார்.

சிறு சிறு கேள்வி பதில் பரிமாற்றத்திற்கு பின் உளம் புரிந்து நட்ப்பானார்.

அவர் பெயர் ஷன்முகம் என்றும் பெங்கலுரிலிருந்து வருவதாக அறிமுகம் செய்துகொண்டார். அவர் தூய தமிழில் இயல்பாக பேசுகிரார் என்று சிறிது நேரம் கழிதே உணர்ந்தேன்.

கேட்பதற்கு இனிமையாக இருந்தது. கூட்டம் நடந்த இரு நாட்களும் அவரோடு நட்பு குறையாமள் நகர்ந்தது.


நிகழ்வு நடந்த LIFE CENTER 


எஸ்.ரா என் மதிபிற்க்கூரிய எழுத்தாளர். விகடனில் அவர் எழுதிய கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வாசிப்பை பழக்கமாக்கிகொண்டேன்.
கடந்த 7 வருடங்களாக அவர் எழுத்தை வாசித்து அவரை பற்றிய ஒரு மதிப்பீடும் ஒரு பிம்பமும் மனதில் உருவாகி இருந்தது.


அந்த பிம்பம் இந்த இரு நாட்களில் எந்த விததிலும் குலயக்கூடாது என்று எண்ணிக்கொண்டேன். முதல் நாள் அவரை கண்டு கைகுலிக்கினேன். அவரின் உருதியான பிடியும் இயல்பான சிரிப்பும் என் பயத்தை போக்கியது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட 60 பேரில் ஐம்பதுக்கும் அதிகமாக இளம் வயதினர். IT , திரை துறை, கல்லுரி மாணவர்கள் , பத்திரிக்கை என வெவ்வேறு துறையை சார்ந்தவர்கள் வந்திருந்தனர்.

டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அனைவரையும் வரவேற்று உபசரித்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டார்.

முதல் நாள் துவக்கத்தில் எஸ். ரா ஒரு மேடையில் நின்று நாவலை பற்றி ஒரு விரிவான விளக்கத்தை வசகர்களுக்கு அளித்தார்.


மதிய நேரத்தில் வாசகர்களோடு விறிவாக விவாதிக்க , மேடையை அகற்றிவிட்டு எங்களின் நடுவே அமர்ந்துகொண்டார். ஆறு முக்கிய நாவல் பற்றி வாசகர்கள் விவாதிதனர்.



விவாதித்த அனைவரும் நாவலை ஒரு கதையாக மட்டும் அனுகாமல் அதை சமுகம் மற்றும் மனித உணர்வுகளை பற்றி புரிந்துகொள்ள உதவும் ஒரு வழியாக உள்வாங்கி இருந்தனர்.

ஒவ்வொரு நாவல் விவாதம் முடிவிலும் அந்த நாவலை பற்றி ஸ்.ரா அவர்கள் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.



மாலை சற்று ஒய்வுக்கு பின் இரவு எந்த தலைப்பும் இல்லாமல் பொதுவாக பேச அனைவரும் கூடினோம்.

ஒவ்வொருவரும் தான் படித்த நாவல்கள் பற்றி விவாதித்தனர்.

சில கேள்வி பதில்கள்

கேள்வி: ஐ.டி துறையில் வேலை பார்க்கும் நபர்கள் இயந்திரம் போல இருக்கிறார்கள். ஓய்வுக்கு கூட மதுவை தான் நாடுகிறார்கள். இது சமுதாயத்தை வெகுவாக பாதிக்கிறது.

எஸ் .ரா பதில் : நீங்கள் கூரும் நபர்கள் சமுதாயத்தில் ஐந்து சதவிகிதம் கூட இல்லை அதனால் சமுதாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிகம் உழைப்பவர்கள் சிறந்த ஓய்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.

என் கேள்வி: குழந்தை இலக்கியம் , சிறுவர் இலக்கியம் போல ஏன் இளஞ்சர் இலக்கியம் இல்லை?

எஸ் .ரா பதில்: இளஞ்சர் உலகம் வேறு. அவர்களுக்கு நண்பர்கள் முக்கியம். தமிழகத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில் புத்தகம் படிக்கிறார்கள். அவர்களுக்கான எழுத்துலகு இன்னும் தமிழில் வளரவில்லை.

என் கேள்வி: குழந்தைகளை பாட புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்களை படிக்க தூண்டளாமா அல்லது வர்புறுத்தளாமா ?

எஸ் .ரா பதில் : வற்புறுத்த வேண்டாம். ஆனால் தூண்டளாம். எனெனில் அவர்கள் வேறு துறையில் சாதிக்களாம். எல்லொருக்கும் புத்தகம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மூன்று மணி நேரம் இது போன்ற விவாதம் தொடர்ந்தது. இடையில் எழும் தோய்வையும் மௌனத்தையும் எஸ்.ரா தன் அரிய தகவல்கள் மூலமும் சுவாரசியமான கதைகள் மூலமும் நிரப்பிக்கொண்டே இருந்தார்.

இரண்டாம் நாள் உலக இலக்கியங்களை பற்றி விவாதம் நடந்தது. உலகின் சிறந்த இலக்கியங்களை பற்றி எஸ்.ரா உரையாற்றினார். மொழிபெயர்ப்பு நாவல்களை பற்றி சா.தேவதாஸ் அவர்களும் ,எழுத்தாளர் முருகேசபாண்டியன் உரையாற்றினர். தோழர். எஸ். ஏ. பெருமாள் ம்ற்றும் ஷஜகான் அவர்களும் உரையாற்றினர். மதிய வேளையில் தமிழின் முக்கிய நாவல்களை பற்றி எஸ்.ரா உரையாற்றினார்.



படிக்க வேண்டிய முக்கியமான நாவல்களையும் பரிந்துரை செய்தார்.

மதிய வேளையில் சமுக ஆர்வலர் திரு. முத்துகிருஷ்ணன் நிகழ்வில் கலந்துகொண்டார்.



இந்த இரண்டு நாள் நிகழ்வில் இலக்கியம் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. நல்ல புத்தகங்களும் நல்ல நன்பர்களும் கிடைத்தனர்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் டிஸ்கவரி பதிப்பகத்தார். 1200 ரூபாய் கட்டனம் வசுலித்தனர். அவர்கள் அளித்த நல்ல உணவுக்கும் தங்கும் வசதிக்கும் இது சிறிய தொகை.

இது போன்ற நிகழுவுகள் எந்த லாப நோக்கும் இல்லாமல் இலக்கியத்தின் மீதான ஆர்வமும் அக்கறையும் கொண்ட நல்ல மனங்களின் மூலம் நடத்தப்படுகிறது. 

அந்த நல்ல மனங்களுக்கு அவர்களுக்கு நன்றி.

இந்த நிகழ்வை பற்றிய எஸ் . ரா வின் பதிவு
http://www.sramakrishnan.com/?p=4014